Banner After Header

6 அத்தியாயம் – விமர்சனம்

0

நடித்தவர்கள் – தமன், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, பாப் சுரேஷ், பசங்க கிஷோர், வினோத் கிஷன், விஷ்ணு, சஞ்சய் மற்றும் பலர்.

இசை – பி.சி.சாம், ஜோஷ்வா, தாஜ்நூர், சதீஷ் குமார், ஜோஷ் ப்ராங்க்ளின்

ஒளிப்பதிவு – பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா

இயக்கம் – கேபிள் சங்கர், சங்கர் தியாகராஜன், அஜயன் பாலா, சுரேஷ், லோகேஷ், ஸ்ரீதர் வெங்கடேசன்

வகை – ஹாரர், த்ரில்லர்

சென்சார் பரிந்துரை – ‘A’

கால அளவு – 1 மணி நேரம் 58 நிமிடங்கள்

RATING – 2.5/5

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜா பல மாதங்களுக்கு முன்பு முயற்சி செய்த ஒன்றன் பின் ஒன்றாக வரும் நான்கைந்து குறும்படங்களின் தொகுப்பு என்கிற  அந்தாலஜி ஸ்டைல் தான் இந்தப்படமும்!

என்றாலும் வெவ்வேறு கதைக்களத்தோடு வருகிற 6 குறும்படங்களிலும் ‘அமானுஷ்யம்’ என்கிற ஒரே ஜானர் ‘டச்’ இருப்பது என்கிற வகையில் தமிழில் புது முயற்சியாக வெளியாகியிருக்கிறது இந்த ‘6 அத்தியாயம்.’

‘சூப்பர் ஹீரோ’, ‘இனி தொடரும்’, ‘மிசை’, ‘அனாமிகா’, ‘சூப் பாய் சுப்ரமணி’, ‘சித்திரம் கொல்லுதடி’ என ஆறு குறும்படங்களை முறையே கேபிள் சங்கர், சங்கர் தியாகராஜன், அஜயன் பாலா, சுரேஷ், லோகேஷ், ஸ்ரீதர் வெங்கடேசன் என ஆறு இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள்.

நாட்டில் நடக்கும் சில முக்கியமான சம்பவங்களுக்கு காரணம் தான் தான் என்றும் அதானாலேயே தன்னை ஒரு ‘சூப்பர் ஹீரோ’வாகவும் காட்ட நினைக்கும் ஹீரோவின் கதையை முதல் படமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் கேபிள் சங்கர்.

ஒவ்வொரு சம்பவமாக ஹீரோ சொல்வதும், அது உண்மை தான் என்று நம்புகிற படி காட்சிகளை கோர்த்திருப்பதும் இயக்குநரின் புத்திசாலித்தனம்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்மத்துக்கு பதிலடி கொடுப்பது தான் ‘இனி தொடரும்’ என்கிற இரண்டாவது குறும்படம். ஒரு தவறை தவறு என்று சுட்டிக்காட்ட அந்தத் தவறைக் காட்சிப்படுத்த வேண்டிய கட்டாயம் இயக்குநருக்கு ஏற்பட்டாலும் அதை முகச்சுளிப்பு இல்லாதபடி காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

ஹீரோ காதலிக்கும் பெண் ஒருத்தியை அவனது அறைத் தோழர்கள் இருவருமே அடைய நினைக்கிறார்கள் என்பது தான் ‘மிசை’ என்கிற அஜயன் பாலா இயக்கியிருக்கும் மூன்றாவது குறும்படம். காட்சிகளில் சிலாகிக்க பெரிதாக இல்லை என்றாலும் குறை சொல்லக் கூடிய காட்சிகளும் இல்லை.

திடீரென்று வீட்டுக்கு வரும் மருமகனை வீட்டில் வைத்து விட்டு, சின்ன வீட்டிலிருந்து வரும் இரவு நேர அழைப்பை நிராகரிக்க முடியாமல் அங்கு செல்கிறார் மாமா. போகிறவர் இந்த வீட்டில் ஒரு இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்தார் என்று பீதியைக் கிளப்பி விட்டுப் போக, தனியாக வீட்டில் இருக்கும் ஹீரோவுக்கு சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. அவை உண்மையா? அல்லது கனவா? என்பதே நான்காவது அத்தியாயமாக வரும் ‘அனாமிகா’ கிளைமாக்ஸ்.

இவ்வளவு சீரியஸான கதையிலும் சென்னைக்கு மிக அருகில் என்று சொல்லி விற்கப்படும் வீடுகளில் பக்கத்து வீட்டுக்கே சில மீட்டர்கள் நடக்க வேண்டியிருக்கிறது என்கிற ரியல் எஸ்டேட் காரர்களின் பிஸினஸ் ட்ரிக்ஸை நக்கலடித்திருப்பது ரசிக்க வைக்கிறது. இரவு நேரக் காட்சிகள் திகிலைக் கூட்டுகின்றன.

இப்படி வருகிற குறும்படங்கள் எல்லாமே அடுத்தடுத்து வந்த திகிலைக் கூட்ட, ஆறிலும் நம் பய உணர்வை மாற்றி ரிலாக்ஸ் மூடுக்கு கூட்டிச் செல்கிறது நகைச்சுவைப் படமான ‘சூப் பாய் சுப்ரமணி’ என்ற நான்காவது குறும்படம்.

எந்தப் பெண்ணிடம் நெருங்கிப் பழகினாலும், தவறாக நடக்க முயற்சி செய்தார் என்று அவர்களாலேயே அடித்து துரத்தப்படுகிறார் ஹீரோ. ஆனால் அப்படி ஒரு எந்த தவறையுமே செய்யாத நமக்கு ஏன் இப்படி நடக்கிறது? என்கிற குழப்பத்தில் விடை தேடி கேரள நம்பூதிரி ஒருவரிடம் செல்கிறார்.

அதற்கான காரணத்தை கண்டுபிடித்து சாமியார் சொல்கிற போது தியேட்டரே ‘கொல்’ என சிரிக்கிறது. முகம் சுளிக்க வைக்காத டபுள் மீனிங் வசனங்கள் சிரிப்புக்கு கியாரண்டி. அப்பாவித்தனமான முகபாவனைகளோடு நம்பூதிரி ஒன்றைச் சொல்ல, அதை தவறாகப் புரிந்து கொண்டு டவுட் கேட்கும் ஹீரோவின் சிரிப்புக்கு கூடுதல் பலம். கிளைமாக்ஸைப் பார்த்தே ஆக வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுவதில் முதலிடம் பெறுகிறது இப்படம்.

ராஜேஷ்குமார் நாவலுக்குரிய டைட்டிலோடு ஆறாவது அத்தியாயமாக நகர்கிறது வித்தியாசமான கதைக்களத்துடன் வரும் ‘சித்திரம் கொல்லுதடி’ என்கிற குறும்படம். ஓவியரான ஹீரோவுக்கு இந்தியப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் அழகோடு ஒரு பெண் ஓவியம் வேண்டுமென்று வெளிநாட்டிலிருந்து ஆர்டர் வருகிறது. அதற்காக சில புத்தகங்களைத் தேடி பழைய புத்தக் கடை ஒன்றுக்கு போகும் அவர் கைகளில் ‘கோகிலா’ என்ற புத்தகமும் தவறுதலாக வந்து விடுகிறது.

அதை எடுத்துப் படிக்கும் போது அந்தப் பெண்ணின் அழகை புத்தகத்தில் வர்ணிப்பது போலவே ஓவியம் வரைய ஆரம்பிக்கிறார். எல்லாவற்றையும் வரைந்து முடிந்து கண்களை மட்டும் வரைவது பாக்கி என்கிற நிலையில் அந்தப் புத்தகம் பாதி தான் தன் கைகளில் இருப்பது தெரிய வருகிறது. புத்தகத்தின் மீதியைக் கண்டுபிடிப்பதற்காக அந்த புத்தகத்தை எழுதியவரைத் தேடிச் செல்கிறார் ஓவியர். அந்தப் பயணத்தில் அவருக்கு என்ன நடக்கிறது? என்பதே கிளைமாக்ஸ்.

ஆறு குறும்படங்களிலும் மிரட்டலான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார்கள் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகிய ஒளிப்பதிவாளர்கள்!

தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோரின் பின்னணி இசையும் பயமுறுத்தலில் தியேட்டரையே அதிர வைக்கின்றன.

நான்கைந்து குறும்படங்களை தொகுத்து ஒரே படமாகத் தருவது என்கிற வழக்கமான ஃபார்முலாவுக்கு குட்பை சொல்லி விட்டு, ஆறு குறும்படங்களையும் அடுத்தடுத்து ஓடவிட்டு கிளைமாக்ஸ் காட்சிகளை மட்டும் இடைவேளைக்குப் பிறகு தனித்தனியாக திரையில் காட்டுவது ஒவ்வொரு படத்தின் கிளைமாக்ஸும் என்னவாக இருக்கும்? என்கிற ஆவல் இடைவேளைக்குப் பிறகும் ரசிகர்களை தியேட்டரில் உட்கார வைத்து விடும். இந்தப்படத்தில் பாராட்ட வேண்டிய புத்திசாலித்தனமான புது முயற்சி இதுதான்!

ஆறு படங்களாக இருந்தாலும் ஆறையும் 1 மணி நேரம் 58 நிமிடங்கள் என்கிற குறுகிய கால அளவுக்குள் ஒரே படமாக்கித் தந்திருப்பது கூடுதல் பாராட்டுக்குரியது.

இந்த 6 அத்தியாயங்களில் ‘சூப் பாய் சுப்ரமணி’ ‘சித்திரம் கொல்லுதடி’ ‘அனாமிகா’ ஆகிய மூன்று அத்தியாயங்கள் கிளைமாக்ஸைப் பார்த்தே ஆக வேண்டும் என்று நமக்குள் ஆவலைத் தூண்டுகிறது.

கதைகள் வெவ்வேறாக இருந்தாலும் ‘அமானுஷய ஜானர்’ மாதிரியே, 6 கதைகளுக்கும் கிளைமாக்ஸும் ஒற்றையாக இருந்திருந்தால் ‘6 அத்தியாயம்’ அந்தாலஜியில் ‘புது அத்தியாயம்’ படைத்திருக்கும்!

Leave A Reply

Your email address will not be published.