Banner After Header

60 வயது மாநிறம் – விமர்சனம் #60VayaduMaaniram

0

RATING – 3.3/5

நடித்தவர்கள் – பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி, விக்ரம் பிரபு, இந்துஜா, குமரவேல், சரத் மற்றும் பலர்

ஒளிப்பதிவு – விவேக் ஆனந்த்

இசை – இளையராஜா

இயக்கம் – ராதா மோகன்

வகை – நாடகம், த்ரில்லர்

சென்சார் பரிந்துரை – ‘U’

கால அளவு – 2 மணி நேரம் 14 நிமிடங்கள்

யதான காலத்தில் பெற்றோர்களை கவனிக்கத் தவறுகிற இக்கால இளைஞர்களுக்கு புத்தி சொல்லும் விதமாக வந்திருக்கும் படம் தான் இந்த ’60 வயது மாநிறம்’.

60 வயது ஆகி விட்ட பிரகாஷ்ராஜிக்கு அடிக்கடி ஞாபக மறதி வருகிறது. இதனால் அவரை ஹோம் ஒன்றில் சேர்த்து விட்டு வேலையே பிஸியாகி விடுகிறார் மகன் விக்ரம் பிரபு.

சிறிய இடைவெளிக்குப் பிறகு ஹோமில் அப்பாவைப் பார்க்க வருகிறவர் அவரைக் கூட்டிக்கொண்டு கடைத்தெருவுக்கு வருகிறார். வெளியே வந்த இடத்தில் பிரகாஷ்ராஜ் காணாமல் போகிறார்.

அப்பாவை தொலைத்து விட்ட விக்ரம் பிரபு அவரத் தேடி அலைகிறார். காணாமல் போன பிரகாஷ்ராஜ் திரும்பக் கிடைத்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

மனித மனங்களின் உணர்வுகளை தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் எந்த வித மிகைப்படுத்தலும் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய வகையில் படமாக்கித் தருவதில் கை தேர்ந்தஇயக்குனர் ராதாமோகன் ‘கோதி பன்னா சாதாரண மைகட்டு’ என்ற கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தை தனக்கே உரிய ஸ்டைலில் தந்திருக்கிறார்.

60 வயது பெரியவராக காட்சிக்கு காட்சி நம்மை பிரமிக்க வைக்கிறது பிரகாஷ்ராஜின் சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்கள். எப்போதுமே தன் ஓரே மகன் சிவாவை சிவா சிவா சிவா என்று பெயரை உச்சரித்துக் கொண்டே குழந்தை போல சிரித்த முகமாக மனுஷன் நடிப்பில் ராட்சஸன் என்று நிரூபித்திருக்கிறார்.

பிரகாஷ்ராஜ் மகனாக விக்ரம்பிரபு. கேரக்டருக்கு என்ன தேவையை அதை அளவாக வெளிப்படுத்தி பணமே பிரதானம் என்று ஓடிக்கொண்டிருக்கும் இக்கால இளைஞர்களை குடும்ப உறவுகளும் முக்கியம் என்று யோசிக்க வைக்கிறது அவரது பரபர கேரக்டர்.

டாக்டராக வரும் இந்துஜா கண்களில் வெளிப்படுகிற கனிவும், விக்ரம் பிரபு உடனான நட்பில் காட்டுகிற உன்னதமும் அடடே அடடே…!

கொஞ்சம் தவறியிருந்தாலும் ஒரு டாகுமெண்டரி படமாக மாறியிருக்க வேண்டிய படத்தை தூக்கி நிறுத்துகிறது விஜியின் வசனங்களும், குமரவேல் – மதுமிதா கூட்டணியின் காமெடி கலந்த நடிப்பும்.

குறிப்பாக சொந்த வீட்டுக் கனவோடு இருக்கும் நடுத்தர குடும்பங்கள் சென்னை அருகில் தனி வீடு வாங்குவதால் ஏற்படுகிற சிக்கல்களை போகிற போக்கில் நகைச்சுவையாக்கி காண்பிக்கிற காட்சியில் தியேட்டரே சிரிப்புச் சத்தத்தில் அதிர்கிறது.

வில்லனாக வரும் சமுத்திரக்கனி வழக்கம் போல நியாயம், தர்மம் பார்க்கிறவராக இந்தப் படத்திலும் வருகிறார். அவரது கூட்டாளியாக வரும் ‘கலக்கப் போவது யாரு’ சரத் சில இடங்களில் கண் கலங்க வைக்கிறார்.

‘இசைஞானி’ இளையராஜா இசையில் இறைவனைத் தேடும் பாடல் அதிகாலை சுப்ரபாதம் போல பக்திப்பாடலாக மனதை உருக்குகிறது. பின்னணி இசை அதிராமல், படத்தோடு ஒன்றிப்போகச் செய்கிறது.

சில இடங்களில் தெரியும் நாடகத்தனத்தை தவிர்த்திருக்கலாம். இந்துஜாவிடம் பிரகாஷ்ராஜ் தனது காதல் கதையை விவரிக்கிற நீளமான காட்சிக்கு கத்தரி போட்டிருக்கலாம்.

அப்பாக்களை பாரமாக நினைக்கிற இளைஞர்கள் அத்தனை பேரும் ஒரு எட்டு போய் தியேட்டரில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!

Leave A Reply

Your email address will not be published.