Banner After Header

96 விமர்சனம்

0

RATING 3.5/5

நடித்தவர்கள் – விஜய் சேதுபதி, திரிஷா, பகவதி பெருமாள், தேவதர்ஷினி மற்றும் பலர்

ஒளிப்பதிவு – மகேந்திரன் ஜெயராஜூ, சண்முக சுந்தரம்

இசை – கோவிந்த்

இயக்கம் – சி. பிரேம் குமார்

வகை – ரொமான்ஸ்

சென்சார் பரிந்துரை – ‘U’

கால அளவு – 2 மணி நேரம் 2 நிமிடங்கள்

70 ஆண்டு கால தமிழ்சினிமாவில் பல ஜானர்களில் படங்கள் வெளியாகி வருகின்றன. அதிலும் காதல் என்று வரும் போது அதை களமாகக் கொண்டு புதுப்புது படங்கள் ரிலீசாகிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் காதலை நம் கண் முன்னே கொண்டு வருகின்றன.

அந்த வரிசையில் படம் பார்ப்பவர்களுக்கு பள்ளிக்கூட நாட்களில் ஏற்பட்ட காதல், நட்பு உள்ளிட்ட அனுபவங்களை மிக நேர்த்தியாக ஞாபகப்படுத்தும் படம் தான் இந்த ’96’.

பயண புகைப்பட கலைஞரான விஜய் சேதுபதி தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வருகிறார். வந்த இடத்தில் தான் படித்த பள்ளிக் கூடத்தைப் பார்க்கிறார்.
அங்கு தனக்கு த்ரிஷாவுடன் ஏற்பட்ட காதலையும், அது கை கூடாமல் போனதும் ஞாபகத்தில் வருகிறது. உடனே தன்னோடு சேர்ந்த படித்த பள்ளிக்கூட நண்பர்களை தொடர்பு கொள்கிறார். எல்லோரும் சந்திக்கலாம் என்று முடிவு செய்து ஏற்பாடுகள் நடக்கிறது.

சந்திப்பில் விஜய் சேதுபதியின் நண்பர்கள் எல்லோரும் வர, அதே சந்திப்புக்கு விஜய் சேதுபதியின் பள்ளிக்கூட காதலியான த்ரிஷாவும் சிங்கப்பூரிலிருந்து வருகிறார்.

22 வருடங்கள் கழித்து சந்திக்கும் விஜய் சேதுபதியும், த்ரிஷாவுக்குமான அந்த பள்ளிக்கூட காதல் ஞாபகங்களை கவித்துவமாகக் காண்பிப்பதே மீதிக்கதை.

பழைய காதலை ஞாபகப்படுத்திப் பார்ப்பது என்பதே அலாதியான இன்பம் தான். அதிலும் பிரிந்த காதலியை மீண்டும் பல வருடங்கள் கழித்து சந்திக்கும் போது ஏற்படுகிற பதட்டம், வலி, கண்ணீர், சந்தோஷம் இவை எல்லாமே அழகிய ஹைக்கூ கவிதை மாதிரி. அந்த உணர்வுகளை காட்சிக்கு காட்சி கடத்தி நம்மையும் நமது பள்ளிக்கூடத்துக்கு கூட்டிச் செல்வதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் பிரேம் குமார்.

படத்துக்கு படம் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் விஜய் சேதுபதி இந்தப் படத்திலும் அப்படி ஒரு கதையைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார். வழக்கமாக அவரை எல்லாப் படங்களிலும் எப்படிப்பட்ட லுக்கில் பார்ப்பாமோ? அதே லுக்கில் தான் வருகிறார். என்றாலும் நடிப்பில் அவர் காட்டுகிற வித்தியாசத்தில் நம்மை ரசிக்க வைக்கிறார். குறிப்பாக விஜய் சேதுபதியை சலூன் கடையில் த்ரிஷா முன்னால் வெட்கப்படுகிற காட்சியில் கைதட்டல்களை அள்ளுகிறார்.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் அதி அற்புதமான நடிப்பைக் கொடுத்த த்ரிஷா இந்தப் படத்தில் அவரைத் தவிர வேறு யாரையும் ஜானு கேரக்டரில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

தன்னை உயிருக்குயிராக காதலித்த ஒருவனை வாழ்க்கையில் தவற விட்டு விட்டோமே? என்று தெரிய வரும்போது அந்த தவிப்பை கண்ணீரால் அவர் காட்டுகிற காட்சியில் இந்தக் காதல் ஜோடி இணைந்திருக்கக் கூடாதா என்று உருக வைத்து விடுகிறார்.

விஜய் சேதுபதி – த்ரிஷாவின் பள்ளி பருவக் காட்சிகளில் நடித்திருக்கும் ஆதித்யன், கெளரி தமிழ் சினிமாவுக்கு அறிமுகங்கள் தானே தவிர நடிப்பென்று வரும்போது சீனியர்களையே வந்து பார் என்கிறார்கள். அதுவும் கெளரி இளையராஜா இசையில் எஸ்.ஜானகி பாடல்களைப் பாடும் போதெல்லாம் நம்மை 90களுக்கு கூட்டிச் செல்கிறார்.

படத்தில் காமெடிக்கென்று தனி நடிகர்கள் இல்லாத குறையை பகவதி பெருமாள், தேவதர்ஷிணி உள்ளிட்டவர்கள் போக்குகிறார்கள். கூடவே விஜய் சேதுபதி செய்யும் சில ரியாக்‌ஷன்களும் நம்மை சிரிக்க வைக்கின்றன.

பள்ளிக்கூட காதலை ஞாபகப்படுத்த ஏற்கனவே ‘அழகி’, ‘ஆட்டோகிராப்’, ‘பள்ளிக்கூடம்’ போன்ற படங்கள் தமிழில் வந்திருந்தாலும் இந்தப்படம் இன்னொரு கோணத்தில் பள்ளிக்கூட காதல், நட்பு ஆகியவற்றை நமக்கு ஞாபகப்படுத்திச் செல்கிறது.

பருவ வயது காதல் என்றாலும் அதில் துளி கூட ஆபாசம் இல்லாமல், அறுவறுப்பு இல்லாமல் எவ்வளவு கன்னியமாக காட்ட முடியுமோ அவ்வளவு கன்னியமான உணர்வுகளை திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

அந்தப் பரவசக் காட்சிகளின் பேரின்பத்தை ரசிகர்களிடம் கொண்டு வந்ததில் ஒளிப்பதிவாளர் சண்முகமும், இசையமைப்பாளர் கோவிந்த்தும் பக்க பலமாக இருக்கிறார்கள்.

பள்ளிக்கூட காதலை கடந்து வராத மனிதர்களே உலகில் இருக்க முடியாது. கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் மீண்டும் கிடைக்காத அந்த பசுமையான ஞாபகங்களை முழுமையாக படமாக்கி தந்த விதத்தில் ரசிகர்களை கட்டிப் போடுகிறார் இயக்குனர் சி.பிரேம்குமார்.

96 – பள்ளிக்கூட பரவசம்!

Leave A Reply

Your email address will not be published.