Banner After Header

ஏ1 – விமர்சனம் #A1

0

RATING – 3/5

நடித்தவர்கள் – சந்தானம், தாரா அலிஷா பெர்ரி, எம்.எஸ் பாஸ்கர், யாட்டின் கார்யேகர், சாய் குமார் மற்றும் பலர்

இயக்கம் – ஜான்சன். கே

ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்

இசை – சந்தோஷ் நாராயணன்

வகை – காமெடி, நாடகம்

சென்சார் பரிந்துரை – ‘யு’ சர்ட்டிபிகேட்

கால அளவு – 1 மணி நேரம் 49 நிமிடங்கள்

ஞ்சு இல்லாத மெத்தையில் சுகமில்லை, அப்படித்தான் சந்தானம் இல்லாத காமெடியையும் நம்மால் ரசிக்க முடிவதில்லை.

சில் வண்டுகள் எல்லாம் ‘காமெடி’ என்ற பெயரில் கடந்த பல மாதங்களாக தமிழ்சினிமா ரசிகர்களை கடுப்பேற்றி பேங்க் பேலன்ஸை புடைக்க வைத்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழு காமெடிப் படமாக வந்திருக்கிறது இந்த ‘ஏ1’.

கதையெல்லாம் தேவையில்லை, தியேட்டருக்குப் போனால் ரெண்டேகால் மணி நேரம் மனசு விட்டுச் சிரிக்க வைத்தால் போதும் என்கிற எதிர்பார்ப்போடு போகிறவர்களை சந்தானம் ஏமாற்றவில்லை. அதே சமயத்தில் பிராமண சமூகத்தை கொஞ்சம் ஓவராக கலாய்த்து காயப்போட்டு விட்டாரோ? என்று தோன்றுவதையும் மறுப்பதற்கில்லை.

ஒரு பிராமணப் பொண்ணுக்கும், ஒரு லோக்கல் பையனுக்கும் வரும் காதல். அதைச்சுற்றி நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் மெல்லிசான கதை. கதை மெல்லிசாக இருக்கலாம். அல்லது அறுதப்பழசாகவும் இருக்கலாம். அதற்கு டைரக்டர் ஜான்சன். கே கொடுத்திருக்கும் ட்ரீட்மெண்ட் தான் நம்மை காட்சிகளோடு கட்டிப் போடுகிறது.

இனி ஹீரோ வேஷம் தான் என்று முடிவெடுத்து நடிக்க ஆரம்பித்த சந்தானம் இப்போது தான் தனக்கான சரியான ரூட்டில் பயணப்பட ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் முந்தைய படமான தில்லுக்கு துட்டு 2 படத்தின் வெற்றி வரிசையில் இந்தப்படமும் சேரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முந்தைய படங்களைப் போல் இல்லாமல், பில்டப் காட்சிகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, கேரக்டருக்கு எந்தளவுக்கு தேவையோ அந்தளவுக்கான நடிப்பை மட்டும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தாரா அலிஷா பெர்ரி என அறிமுக நாயகியின் பெயர் நமக்கு அந்நியமாக தெரிந்தாலும், ஒரு அக்மார்க் பிராமணப் பெண்ணாக ஜொலிக்கிறார்.

மாறன், தங்கதுரை, கிங்ஸ்லி மூவர் கூட்டணியோடு சந்தானம் செய்யும் அலப்பறை சிரிப்பு பட்டாசாக படம் முழுக்க வெடிக்கிறது.

சந்தானத்தின் அப்பாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், நாயகியின் அப்பாவாக வரும் யாட்டின் கார்யேகர், சிசிடிவி சிதம்பரமாக வரும் மொட்டை ராஜேந்திரன், போலீஸ் அதிகாரியாக வரும் சாய்குமார் என படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களும் போட்டி போட்டு சிரிக்க வைக்கிறார்கள்.

”பத்து பதினைஞ்சு பேனர் எடு. கடையில இருக்கிறதே மூணு தான். நீ பத்து பதினைஞ்சு கேட்டா எங்க போறது

”என்ன எழும்பு ஓட்டையில ஏஞ்சல் தெரியுது”.

”எச்சக்களை இந்தா உடைச்ச கட்ல”.

என டைமிங்கில் அடிக்கும் வசனங்கள் தியேட்டரில் கைதட்டல்களை அள்ளுகிறது.

அவ்வப்போது வரும் கானா பாடல்களால் படத்தின் விறுவிறுப்பு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அதிலும் ‘மாலை நேரம்’ பாடல் டாப் க்ளாஸ்.

படத்தில் திருப்புமுனை காட்சிகள் என்று பெரிதாக எதுவுமில்லை. முதல் பாதி காமெடியில் களைகட்ட, இரண்டாம் பாதியில் கதையின் ஓட்டத்தை மிக எளிதாக யூகித்து விட முடிகிறது. ஆனாலும் காட்சிகள் எல்லாமே காமெடியை பிரதானப்படுத்தி நகர்வதால் சிறுசிறு குறைகளுக்கு குட்பை சொல்ல வைத்து விடுகிறார் இயக்குனர் ஜான்சன். கே!

மனசு விட்டுச் சிரிச்சு ரொம்ப நாளாச்சு என்று குறைபட்டுப் கொள்பவர்களுக்கு நிறைவைத் தரும் படம்.

ஏ 1 – காமெடி கலாட்டா

Leave A Reply

Your email address will not be published.