ஆயிரத்தில் இருவர் – விமர்சனம்

0

Aayirathil Iruvar

RATING : 2.5/5

ரு காலத்தில் ஓஹோ இயக்குநர்கள் லிஸ்ட்டில் இருந்த இயக்குநர் சரண் பலகட்ட இடைஞ்சல்களையும் தாண்டி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி ரிலீசாகியிருக்கும் படம் தான் இந்த ‘ஆயிரத்தில் இருவர்.’

கதைப்படி திருநெல்வேலியில் வசிக்கும் ஹீரோ வினய் ( டபுள் ரோல்) செவத்தக்காளை, செந்தட்டிக்காளை என்ற பெயர்களோடு வளர்கிறார். இந்த இரட்டையர்கள் எதற்கெடுத்தாலும் “ஏல செந்தட்டி… ஏல செவத்த” எனத் தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் ரகம்.

சின்ன வயதில் குடும்பப் பகையால் ஏற்படும் குழப்பம் ஒன்றால் செந்தட்டிக் காளை வீட்டை விட்டு ஓடி பக்கத்து மாநிலமான ஹைதராபாத்தில் போய் செட்டிலாகிறார். தலைமறைவானவரை அவர் இறந்து விட்டார் என்று மொத்தக் குடும்பமும் நம்புகிறது.

இன்னொரு பக்கம் திருநெல்வேலியில் இருக்கும் செவத்தக்காளை, வேலைக்கு போகாமல், சொத்தில் பங்கு கேட்டு குடும்பத்தினருக்கு தொந்தரவு கொடுத்து வருகிறார்.

இந்த விஷயம் ஹைதராபாத்தில் இருக்கும் செந்தட்டிக்காளைக்கு தெரிய வரவும் செவத்தக் காளையை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு தான் செந்தட்டிக் காளையாக திருநெல்வேலிக்கு வந்து சொத்துகளை அபகரிக்க திட்டம் போடுகிறார்.

இப்படி ஒரு குழப்பமான ஆள் மாறாட்டக் கதைக்குள் மூன்று லட்டு லட்டான ஹீரோயின்களை கவர்ச்சி காட்ட வைத்து மசாலா, ஆக்‌ஷன், காமெடி என சரண் தனது பாணியில் தந்திருக்கிறார்.

இரட்டை வேடம், ஆள் மாறாட்டம் ஆகியவை தமிழ் சினிமாவுக்கு புதுசில்லை என்றாலும் அதற்கு சரண் தனது பாணியில் திரைக்கதையில் கொஞ்சம் காமெடி கலந்து வித்தியாசமான திரைக்கதையமைத்து தந்திருப்பது புதிதாக இருக்கிறது.
அதே சமயம் படத்தில் வரும் கிளைக்கதைகளால் ரசிகர்கள் ரசிப்பதை மறந்து குழம்பவும் வாய்ப்பிருக்கிறது.

திருநெல்வேலி பாஷை பேசும் இளைஞராக டபுள் ரோல் கேரக்டரில் வருகிறார் வினய். வேஷ்டியும், சட்டையும் அவருக்கு மேட்ச் ஆனாலும் அவர் பேசும் பாஷை தான் கொஞ்சம் கூட ஒட்டவில்லை.

சாமுத்ரிகா, ஸ்வஸ்திகா என்று இரண்டு ஹீரோயின்களும் அள்ள அள்ளக் குறையாத கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை சூடேற்றியிருக்கிறார்கள்.

வில்லத்தனம் காட்டும் காஜல் கையில் சுருட்டைப் பிடித்துக் கொண்டு கெத்தாக உட்காருவதும், அவரை மதுரை ரவுடியான அருள்தாஸ் துரத்தி துரத்தி காதலிப்பதும் காமெடியில் களை கட்டுகிறது.

சரண் – பரத்வாஜ் கூட்டணி என்றாலே படத்தில் கண்டிப்பாக பாடல்கள் சூப்பர் ஹிட்டாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் ஒரு தடவை கேட்கும் ரகமாகத்தான் உள்ளன.

காதல் ப்ளஸ் ஆக்‌ஷன் அதோடு காமெடியையும் சேர்த்து ஒரு முழுமையான கமர்ஷியல் படமாகத் தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சரண்.

படத்தின் ரசிப்புத் தன்மையைக் குறைக்கும் கிளைக்கதைகளை மட்டும் எடிட்டரை வைத்து முழுமையாக வெட்டியெறிந்திருந்தால் இந்தப்படம் ஆயிரத்தில் ஒன்றாக தனித்து நின்றிருக்கும்!

Leave A Reply