அச்சமின்றி – விமர்சனம்

0

achamindri-review

RATING : 3/5

ரசாங்கம் நடத்த வேண்டிய பள்ளிகளையும், கல்லூரிகளையும் தனியார் நிறுவனங்கள் நடத்துகின்றன, தனியார் நிறுவனங்கள் நடத்த வேண்டிய டாஸ்மாக் கடைகளை அரசாங்கம் நடத்துகிறது. பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அரசுகள் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கைகளை அதிகரித்து அதில் எலைட் என்ற உயர்ரக கடைகளையும் திறந்து வைக்கிறது.

இப்படி எதிர்கால சந்ததிகளுக்கு தரமான கல்வியைத் தர வேண்டிய அரசுகள் அதை தனியாருக்கு தாரை வார்த்து விட்ட பிறகு கல்வித்துறையில் ஊழல் புரையோடிப்போய் விட்டது. அதன் விளைவாக கல்வியின் தரமும் குறைந்து, உலக அளவில் இந்திய மாணவர்களின் கல்வித் திறனும் கேவலப்பட்டு நிற்கிறது.இந்த அவலங்களின் பின்னணியை, துணிச்சலோடும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய விதத்திலும் தோலுரித்துக் காட்டும் விதமாக வெளியாகியிருக்கும் படம் தான் இந்த ”அச்சமின்றி.”

ஹீரோ விஜய் வசந்த் கருணாஸ், தேவ தர்ஷினியோடு பிக் பாக்கெட் அடிப்பது தான் முழுநேர வேலை.

அந்த பிக் பாக்கெட் வேலைக்கு நடுவிலும் ஒரு பஸ் பயணத்தில் நாயகி சிருஷ்டி டாங்கேவை பிக்கப் பண்ண ஆரம்பிக்கிறார். திருடனுக்கும், போலீசுக்கும் இருக்கிற சகவாசம் தெரியாமல் விஜய் வசந்திடம் இருக்கிற போலீஸ் ஐடிகார்டைப் பார்த்து அவரை ஒரு போலீஸ் என்று நினைத்து நெருங்கிப் பழகுகிறார்.

இந்த லவ் ட்ராக்குக்கு நடுவே சிருஷ்டி டாங்கே வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியின் மகள் பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் குறைந்து விட, அதற்காக மறுகூட்டலுக்கு விண்ணப்பிகிறார் சிருஷ்டி டாங்கே. ஆனால் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கூடாது என்று கல்வி அமைச்சர் ராதாரவியின் உதவியாளர் அடியாட்களோடு வந்து மிரட்டி அவரையும், விஜய் வசந்த்தையும் கொலை செய்ய துரத்துகிறார்.

இன்னொரு புறம் தனது வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி காதலியான வித்யாவின் மரணத்தில் இருக்கிற சந்தேகத்தை விசாரிக்கப் போக, அவரை அவரது சக போலீஸ் அதிகாரியான நண்பரே ஒரு கூலிப்படையின் துணையோடு கொலை செய்ய முயற்சிக்கிறார்.

இந்த மூன்று பேரும் ஒரு இடத்தில் சந்திக்கிற போது மூன்று பேரையுமே கொலை செய்யத் துரத்துவது ஒரே பெரும்புள்ளியும், அவரைச் சார்ந்திருக்கிற ஒரு சிறு கூட்டமும் தான் என்கிற உண்மை தெரிய வருகிறது.

யார் எந்த பெரும்புள்ளி? இவர்களை கொலை செய்ய முயற்சிக்க காரணம் என்ன என்பதே கிளைமாக்ஸ்.

ஒரு கமர்ஷியல் ஜானருக்குரிய காமெடி, காதல், செண்டிமெண்ட் போன்ற விஷயங்களோடு இன்றைய கல்விச்சுழலின் தரங்கெட்ட நிலையையும் விறுவிறுப்பான திரைக்கதையோடு, தீப்பொறி பறக்கும் வசனங்களோடும் இயக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் ராஜபாண்டி.

தமிழ்சினிமாவில் கமர்ஷியலை மட்டுமே தரும் இயக்குநர்களுக்கு மத்தியில் கமர்ஷியலோடு சமூகத்துக்கு நல்ல கருத்தையும் வலியுறுத்துகிற படமாகவும் தந்திருக்கும் இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

நாயகன் விஜய் வசந்த் விஜய் ஆண்டனிக்குப் பிறகு தனது உடல் வாகுக்கும், நிறத்துக்கும் எந்த மாதிரியான கதையும், கேரக்டரும் செட்டாகும் என்பதில் தெளிவாக இருக்கிறார். அதற்கேற்றாற்போலவே இந்தப்படத்தில் மொட்டைத் தலை கெட்டப்பில் ஆக்‌ஷன் காட்சிகளிலும், தேவதர்ஷிணி, கருணாஸ் உடன் சேர்ந்து பிக்பாக்கெட் அடிக்கிற போது கொடுக்கிற காமெடி அளப்பறைகளிலும், சென்னை லோக்கல் பாஷையை பிசிரு தட்டாமல் பேசுவதிலும் கலக்கியிருக்கிறார்.

நாயகியாக வரும் கன்னக்குழியழகி சிருஷ்டி டாங்கே வந்தோம், போனோம் என்கிற ரகமில்லை. நடிப்பதற்கு நெறைய வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

விஜய் வசந்த்தை போலீஸ் என நினைத்து அப்பாவி முகத்தோடு அவர் பேசுகிற வசனங்கள் எல்லாமே டைம்பாஸுக்கு குறை வைக்காத காமெடிகள். அதே சமயம் பாடல் காட்சிகளில் கவர்ச்சி விருந்து படைக்கவும் தவறவில்லை.

மக்களுக்கு அட்வைஸ் சொல்கிற படமாக இருந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் இயக்குநர் ராஜபாண்டி. அதனாலோ என்னவோ முக்கால்வாசிப்படத்தை ஆக்‌ஷன் வித் காமெடியாகத் தந்து விட்டு கிளைமாக்ஸில் நீங்க வாங்குகிற குண்டூசியில கூட கல்விக்கு வரி கட்டுறீங்க. இனிமேலாவது அந்த உரிமைக்காக அரசாங்கத்தை எதிர்த்து போராடுங்க என்று நெற்றிப்பொட்டில் அடித்தாற் போல் சொல்லி அனுப்புகிறார்.

விஜய் வசந்த் கூட்டாளிகளாக வரும் கருணாஸ், தேவதர்ஷினி, சண்முகசுந்தரம் ஆகியோரு காமெடிக்கு கேரண்டி கொடுக்க, ராதாரவிநடிப்பில் மிரள வைத்திருக்கிறார். அவருக்கே உரிய தோரணையில் திரையில் மிண்ணுகிறார்.

நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி மனிதாபிமானமிக்கவராக கனகச்சிதம் காட்டியிருக்கிறார். அவருடைய மாற்றுத்திறனாளி காதலியாக வரும் வித்யா வாய் பேச முடியாத பெண்களின் சைகை பாஷைஅவரது நடிப்பில் மிக அழகான பிரதிபலிப்பு!

ராதாரவியைப் போல படத்தில் மிரள வைத்திருக்கும் இன்னொரு கேரக்டர் சரண்யா பொன்வண்ணன். வழக்கமாக ஹீரோக்களுக்கு பாசமான அம்மாவாக வரும் இவர் இதில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளராக வந்து மிரட்டுகிறார். அவருடைய கெட்டப்பும், புன்னகை ததும்ப செய்கிற விஷமத்தனங்களும் தனியார் கல்வி நிறுவனங்களின் கொட்டத்தை உள்ளதை உள்ளபடி காட்டியிருக்கிறது.

ஏ. வெங்கடேஷின் ஒளிப்பதிவும், நறுக்க வேண்டிய இடத்தில் நறுக்கி கோர்த்திருக்கும் எடிட்டர் கே.எல்.பிரவீனின் எடிட்டிங்கும் படத்தின் விறுவிறுப்புக்கு பலம். பிரேம்ஜி அமரனின் பின்னணி இசையில் ஆக்‌ஷன் படத்துக்குரிய ஆவேசம் ஆங்காங்கே வெளிப்பட்டிருக்கிறது. பாடல்களில் இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்.

சீனாவுல 85 சதவீத மக்கள் ஆங்கிலம் பேச மாட்டாங்க. அந்த நாடு முன்னேறலையா? நீங்க வாங்குற எல்லாப் பொருட்களிலும் கல்விக்கு வரி கட்டுறீங்க, ஆனால் நல்ல கல்வியைத் தரச்சொல்லி என்னைக்காவது அரசாங்கத்தை எதிர்த்து போராடியிருக்கீங்களா?

அரசாங்க பள்ளிக்கூடத்துல படிச்சா கேவலம்னு நெனைக்கிற மக்களுக்கு வேலை மட்டும் அரசாங்க வேலை வேணும். பொண்ணுங்களுக்கு அரசாங்க வேலை பார்க்கிற மாப்பிள்ளை வேணும்னு நெனைக்கிற பெற்றோர்கள் தானே இருக்காங்க.

கரை வேட்டிக்குள்ளேயே இவ்ளோ அழுக்கு இருந்தா? காக்கிச் சட்டைக்குள்ள எவ்ளோ அழுக்கு இருக்கும்? என்பது மாதிரியான வசனங்களில் தீப்பொறி பறக்கிறது.

கல்வித்துறையில் தனியாரின் ஆதிக்கம் அதிகரித்து அதன் தரமே சீரழிந்து போயிருப்பதற்கு அரசாங்கமோ, மக்களோ, தனியார் நிறுவனங்களோ தனித்தனியாக காரணம் இல்லை. மூன்று பேருமே தான் காரணம் என்றும் அதை புனிதப்படுத்தும் பலம் மக்கள் என்கிற மாபெரும் சக்தியின் கைகளில் தான் உள்ளது என்று எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயங்களை காட்சிப்படுத்தி சிறந்த படமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் ராஜபாண்டி.

‘அச்சமின்றி’ – தரமான கல்விக்கான அறப்போர்!

Leave A Reply