மாறுவோம் மாற்றுவோம் : வங்கிகளின் கட்டணக் கொள்ளைக்கு செக் வைத்த நடிகர் ஆரி!

aari1

மோடி அரசின் ”டிஜிட்டல் இந்தியா” திட்டம் வந்த பிறகு ஏழை, நடுத்தர மக்களை வாட்டி வதைக்கிற வேலைகளில் இறங்கியிருக்கின்றன வங்கிகள்.

அந்த வகையில் வங்கிக் கிளைகளில் ஒரு மாதத்தில் 4 இலவச ரொக்கப் பணப் பரிவர்த்தனைகளுக்குப் பிறகு, ஒவ்வொரு டெபாசிட்டுக்கும், திரும்ப எடுக்கும் தொகைக்கும் ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று சில தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. மேலும், எஸ்.பி.ஐ உள்ளிட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் குறிப்பிட்ட தொகையை இருப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அந்த இருப்பு தொகை குறைந்து விட்டால், குறிப்பிட்ட தொகை அபாரதாமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளின் இந்த பகல் கொள்ளை அறிவிப்புகளால் சாமான்ய மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தக் கொள்ளைக்கு முடிவு கட்டும் விதமாக வங்கிகளுக்கு பதிலாக அஞ்சலகங்களில் அனைத்து வகை பயன்பாடுகளும் கொண்ட கணக்கை துவக்கும் மாற்று வழியை மக்களிடையே வலியுறுத்தியிருக்கிறார் நடிகர் ஆரி. வலியுறுத்தியது மட்டுமில்லாமல் அதே அஞ்சலகத்தில் தனது பெயரில் கணக்கு ஒன்றையும் துவக்கியுள்ளார்.

Related Posts
1 of 3

இதன்மூலம், ரூ.1000-க்கு மேல் வங்கிகளில் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் நிலையில், அஞ்சலங்களில் ரூ.100 கொடுத்து, நமது பெயரில் கணக்கு ஒன்றை தொடங்கிவிடலாம். கையிருப்பு ரூ.50 இருந்தாலே போதுமானது. வங்கியில் என்னென்ன சேவைகள் இருக்கிறதோ? அது அத்தனையும் அஞ்சலக சேவைகளிலும் வருகிறது.

வங்கிகளைப் போலவே பாஸ்புக், ஏடிஎம் கார்டும் கொடுத்து விடுகிறார்கள். இந்த ஏடிஎம்-ஐ வைத்து அனைத்து வங்களின் ஏடிஎம்-களிலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளாலாம். இதற்காக எந்த கட்டணமும் கிடையாது.

இது குறித்து நடிகர் ஆரி மேலும் கூறும்போது, அஞ்சலகங்களில் 50 ரூபாய் கையிருப்பில் அனைத்து வகை பயன்பாடுகளும் கொண்ட கணக்கை துவக்கும் மாற்று வழியை மக்களிடத்தில் பரப்புவதில் ஒரு தமிழனாய் இந்த விழிப்புணர்வு புரட்சியை மாணவச் சகோதர சகோதரிகளுடன் இணைந்து ஆரம்பித்ததில் நான் பெருமை கொள்கிறேன்.

இந்தச் செய்தியை விழிப்புணர்வை மக்களிடம் பரப்புவோம். நாம் மாறினால் மாற்றங்கள் உருவாகும். மக்களிடமும் மாற்றத்தை உருவாக்குவோம். தமிழனாய் நான் உருவாக்கிய இந்த மாற்றம் இந்தியா முழுவதும் உருவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

இதற்கு ஒத்துழைப்பு தந்த மாணவர்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் நண்பர்களுக்கும், அனைத்து தொலைக்காட்சிளுக்கும், இணையதள நண்பர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.