தூக்கி விட யாருமில்ல… தள்ளிவிட நிறைய பேர் இருக்காங்க..! : ஷாமின் வாழ்க்கை தத்துவம்

Get real time updates directly on you device, subscribe now.

shaam

லக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த அண்மையில் வந்துள்ள ‘புறம்போக்கு’ ஷாம் நடிப்பில் வெளிவரும் 25வது படம்.

அவர் நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு சாக்லேட் பாயாக இருந்து கொண்டு கதாநாயகிகளுடன் டூயட் பாடி அவர்களின் உள்ளங்கவர் கள்வனாக ரொமான்ஸ் செய்து வலம் வந்து கொண்டிருந்த ஷாம், ‘6’ படத்துக்குப் பின் ஆளே​ ​மாறினார். பாம்பு சட்டை உரிப்பதைப் போல தனக்குள் இருந்த அர்ப்பணிப்புள்ள நடிகனை உரித்துக் காட்டினார்.

அவரது 25 வது படமாக இப்போது வந்திருக்கும் ‘புறம்போக்கு’ படத்தில் அழுத்தமான மெக்காலே பாத்திரம் மூலம் விஸ்வரூபம் எடுத்து பலபடிகள் மேலேறி கம்பீரமாக நிற்கிறார்.
ஊடகங்களின் ஒட்டு மொத்த பாராட்டையும் வாழ்த்தையும் பெற்றவராக மகிழ்ச்சியுடன் இருக்கிறார் ஷாம்.

அவரைச் சந்தித்த போது மனம் திறந்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் முதலில் ‘இயற்கை’யில் நடித்தீர்கள். இப்போது ‘புறம்போக்கில் நடித்துள்ளீர்கள். இரு அனுபவங்களையும் ஒப்பிடமுடியுமா?

அப்போது எனக்கும் பெரிய அனுபவம் இல்லை. அவரும் புதுமுக இயக்குநர். போகப்போக அவரைப்பற்றி நிறைய அறிந்தேன். அப்போது எங்களுக்கும் அவ்வளவு புரிதல் இல்லை. ஆனால் போகப் போக புரிந்தது. அவர் ஒரு முதிர்ச்சியான சிந்தனை கொண்டவர். அவர் நடிகர்களுக்காக கதை செய்ய மாட்டார். பாத்திரங்களுக்காக நடிகர்களைத் தேடுபவர். ஜீவா சாருக்குப் பின் மீண்டும் ரெண்டாவது படவாய்ப்பை ஜனாசார் இயக்கியதில் மகிழ்ச்சி.

மக்களின் நாடித்துடிப்பு தெரிந்தவர் அவர். பலதுறை ஞானம் உள்ளவர். அவர் இயக்கத்தில் மீண்டும் நடித்தது நிச்சயமாக எனக்கு மறக்க முடியாதது.​ ​ஒரு கதாநாயகன் என்றால் 10 பேரை அடித்து தான் உருவாக வேண்டும் என்பதில்லை. ஜனாசார் அவ்வளவு அழகாகச் செதுக்குவார். அவர் பேசினால் மணிக்கணக்கில் கேட்டுக் கொண்டே இருக்கலாம். நான் பி.காம் படித்தது பற்றி எனக்கே சந்தேகம் வரும் அளவுக்குப் பேசுவார்.

அவர் ஹீரோக்களிடம் கதை சொல்வது தனி பாணி. அவர்களை அழுத்தமாகவும் யதார்த்தமாகவும் சித்தரிப்பது எனக்குப் பிடிக்கும். அவர் பழகும் எளிமை பிடிக்கும். இத்தனை ஆண்டுகளாக தொடர்பில் இருக்கிறோம். இயற்கையில் நான் சரியாக நடிக்கவில்லையோ என்று தோன்றும். அந்த குறையை ‘புறம்போக்கு’ படம் போக்கி விட்டது.​ இது நிச்சயமாக எனக்கு மறு அவதாரம் போல அழுத்தமான அடையாளமாகியுள்ளது. ​என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாத்திரம் இது என்பதில் சந்தேகம் இல்லை.​ ​தியேட்டரில் எனக்குக் கிடைத்த வரவேற்பையும் ஆரவாரத்தையும் பார்த்து சந்தோஷத்தில் எனக்கு கண்ணீர் வந்து விட்டது.

உடன் நடித்த ஆர்யா, விஜய் சேதுபதி பற்றி?

நான், ஆர்யா, விஜய் சேதுபதி மூன்று பேரும் இப்படத்தில் ஏற்று நடித்தவை மூன்றுவித தனிப்பட்ட குணங்கள் கொண்ட குணச்சித்திரங்கள். அவரவர் பார்வையில் அவரவர் செய்வது சரி. யாரும் கெட்டவர் இல்லை.நாங்கள் மூன்று பேரும் இயக்குநரின் மூன்று பாத்திரங்களை ஆளுக்கொன்றாக சுமந்திருக்கிறோம். ஆர்யா என்னுடன் ‘உள்ளம் கேட்குமே’ படத்தில் அறிமுகமானவர். ஆர்யா என் தம்பி மாதிரி. என்னுடன் அறிமுகமான ஆர்யா இன்று வளர்ந்து இருப்பதில் ஒரு சகோதரன் போல எனக்கு மகிழ்ச்சிதான். ஆர்யா ஆரம்பம் முதல் என் நண்பன் தான்.

இன்னொருவராக வரும் விஜய் சேதுபதியும் மிகவும் எளிய மனிதர். என்னிடம் மரியாதையும் அன்பும் காட்டினார். ஒருவருக்கு படப்பிடிப்பு இல்லை என்றாலும் அடுத்தவர் நடிப்பில் படப்பிடிப்பு நடந்தாலும் போவோம். ஒரே கேரவானில் பேசி அரட்டையடித்து சாப்பிட்டு ஜாலியாக இருந்தோம். எங்களுக்குள் ஆரோக்கியமான புரிதல் இருந்தது ஈகோ இல்லை.​ ​நல்ல நண்பர்களாகவே கடைசிவரை இருந்தோம்.​ பாலிவுட்டில் இதுமாதிரி பல நடிகர்கள் சேர்ந்து நடிப்பது வழக்கமாக உள்ளது. அது போல இங்கும் வர வேண்டும்.

Related Posts
1 of 2

அடுத்து நடிக்கும் படங்கள் என்னென்ன?

ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கத்தில் ‘ஒரு மெல்லிய கோடு​.​’ ​இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். எனக்கு மனீஷா கொய்ராலா, ஸ்ருதி ஹரிஹரன் என்று இரண்டு கதாநாயகிகள். ஜோடியாக நடிக்கிறார்கள்.​ ​அர்ஜுன் ​சாருடன் நடிக்கிறேன். இந்தப்படம் தமிழ், கன்னடம் என இரு மொழிப்படமாக உருவாகி வருகிறது. சென்னை பெங்களூர் என்று மாறிமாறி படப்பிடிப்பு நடந்து வருகிறது. என் கேரக்டர் கொஞ்சம் நெகடிவ் நிழல் விழுகிற மாதிரி இருக்கும்​.​ பாடல் காட்சிக்கு துருக்கி செல்ல இருக்கிறோம் இது ஒரு க்ரைம் கதை.

தெலுங்கில் நடிக்கிறீர்களா?

தெலுங்கில் இதுவரை 5 படங்கள் முடித்து விட்டேன். அடுத்து ‘கிக்’,’ரேஸ்குர்ரம்’ படங்களை இயக்கிய சுரேந்தர் ரெட்டியின் படம் செப்டம்பரில் தொடங்குகிறது

சொந்தப்பட அனுபவம் சொல்வது என்ன? மீண்டும் தயாரிப்பில் ஈடுபடுவீர்களா?

சொந்தப்படமான ‘6’ படம் எனக்கு லாபம் தரவில்லை தான் ஆனால் இழப்பையும் தரவில்லை. எனக்கு பெரிய மரியாதையையும் அடையாளத்தையும் பெற்றுத்தந்தது. ஷாம் விளையாட்டுப் பையனில்லை​.​ அர்ப்பணிப்பும் தேடலும் ஈடுபாடும் கொண்ட நடிகன் என்கிற பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. ​​அதுவரை மக்களும் ரசிகர்களும் என்னைப் பார்த்த பார்வை வேறு. ‘6’ படத்துக்குப் பிறகு பார்க்கிற பார்வை வேறு. மரியாதையும் கவனமும் கூடி இருக்கிறது. இப்படி நிறைய லாபம் கிடைத்து இருக்கிறது. மீண்டும் படம் தயாரிப்பேன்​.​ ​​அந்தப்படம்​ ​​இதுவரை நடித்த 25 படங்களிலிருந்து​ முற்றிலும் புதுமையான இளமையான அவதாரம் என்று சொல்லும்படி ​இருக்கும்.

25 படங்கள் தரும் அனுபவங்கள் உணர வைப்பது என்ன?

பெருமையாக இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. திருப்தியாக இருக்கிறது.ஆனால் இதை நினைத்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து இருந்து விட முடியாது. ஓடவேண்டும்; உழைக்க வேண்டும்; உயர வேண்டும். நான் நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைய போட்டி நிறைந்த சினிமா சூழலில் இவ்வளவு நாள் தாக்குப் பிடித்து நிற்பது பெரிய விஷயம்தான்.
எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் வந்தவன் நான்.

என்னை குருநாதர் ஜீவா அறிமுக​ப்படுத்தினார். ஊக்கம் தந்து வளர்த்தார். அவரும் திடீரென காலமாகி விட்டார். ​​கைதுதூக்கி விட யாருமில்லை. ​கீழே தள்ளிவிட நிறைய பேர் இருக்காங்க.. ​நானாகத்தான் சரியா த​​ப்பான்னு முடிவு பண்ணி நடிக்கிறேன். சிலர் கதை நல்லா சொல்றாங்க. ஆனா எடுக்கும்போது சொதப்புறாங்க. அந்த படத்தையும் பரவாயில்லைன்னு எப்படி பண்ணமுடியும்? இப்போதான் கரணம் அடிச்சு எழுந்திருக்கப் பார்க்கிறேன். மீண்டும் மீண்டும் கீழே விழுற தப்பை பண்ணிக்கிட்டே இருக்க முடியுமா? யாருமே படம் பண்ண வராதபோது என் சொந்தக் காசைப் போட்டு லேசா நிமிர்ந்திருக்கேன் பாஸ். உசாரா இருக்கலைன்னா நீங்க பேட்டி கூட எடுக்க மாட்டீங்க. அப்புறம் எப்படி நடிக்க?

நடிக்கலைன்னா கூட பரவாயில்லை. தப்பான படம் பண்ணி வீட்ல உக்காரக்கூடாது. அதுதான் மகாக் கொடுமை. ​​இடையில் அந்தக் கொடுமையை ரொம்பவே அனுபவிச்சிட்டேன்​.​ இருந்தாலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

பள்ளம் மேடுகள் ஏற்றம் இறக்கங்கள் இருந்தாலும் என் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறதே​.​ அதுவே மகிழ்ச்சி தானே?. நம்பிக்கையுடன் யதார்த்தமாகப் பேசுகிறார் ஷாம்.

‘ஆல் தி பெஸ்ட்’ ஷாம்.