Banner After Header

வடிவேலு, சந்தானம் மாதிரியெல்லாம் இல்லை : ரொம்பத் தெளிவா இருக்கார் சூரி!

0

soori

புகழ் போதை யாரை விட்டது? தள்ளாடாமல் வண்டி நகர்ந்து போகிற ரூட் சரியான ரூட்டாக இருந்தாலும், சுற்றியிருப்பவர்கள் ஏற்றி விடும் பில்டப்புகள் சில பிரபலங்களுக்கு புகழ் போதையாகி விடுகிறது.

அந்த புகழ் போதைக்கு மயங்கினார்களோ என்னவோ? வடிவேலு, சந்தானம் என தமிழ்சினிமாவில் கோலோச்சுக் கொண்டிருந்த இரண்டு முக்கியமான காமெடி நடிகர்களுக்கும் ஹீரோ ஆசை வர, மற்ற ஹீரோக்களின் படங்களில் காமெடி செய்வதை அடியோடு நிறுத்தி விட்டார்கள். அவர்கள் விட்டுப் போன அந்த வறட்சியான நகைச்சுவை இடத்தை இன்றுவரை முக்கால்வாசி நிரப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் சூரி.

தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சத்தைப் போலவே தமிழ்சினிமாவில் அண்மைக்காலமாக நகைச்சுவைப் பஞ்சமும் கொடி கட்டிப் பறக்கிறது. இருந்தாலும் ”அட்லிஸ்ட் இவர் இருந்தால் கூடப் போதும் போட்ட பணத்தையாவது திரும்ப எடுத்து விடலாம்” என்கிற முடிவுக்கு தயாரிப்பாளர்கள் வர, பெரும்பாலான இயக்குநர்களின் காமெடி நடிகர் சாய்ஸ் ஆகி விட்டார் சூரி.

இன்றைக்கும் கைவசம் டஜன் கணக்கில் படங்களை வைத்திருக்கும் சூரியின் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிற நகைச்சுவைக் காட்சிகளுக்கு ஆதரமாக ”வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்”,” கத்திச் சண்டை” ஆகிய படங்களைச் சொல்லலாம். அதிலும் ”கத்திச் சண்டை” படத்தில் வடிவேலுவும் இருந்தார். அது அவருக்கு கம்பேக் படமாக விளம்பரப்படுத்தப் பட்டாலும் படத்தில் மனசு விட்டு சிரிக்க வைத்தது என்னவோ சூரி தான்.

நம்பி வருகிற ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்கிற சூரியின் அந்த மெனக்கிடல் தான் இன்றைக்கும் தங்கள் படங்களில் நண்பராக ஹீரோக்கள் டிக் செய்ய முக்கிய காரணம்.

இப்படி சினிமா உலகில் தனது தொடர் இருப்பை பதிவு செய்து வரும் சூரி அந்த வெற்றிக்குக் காரணமானவர்களுக்கு நன்றி தெரிவிக்க பத்திரிகையாளர்களை சந்தித்தார்…

96ல தான் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தேன். சாப்பாட்டுக்கு பணம் தேவைப்படும் போது செட் ஒர்க்குக்கு போவேன், பெயிண்ட் அடிக்கிற வேலையெல்லாம் பார்ப்பேன். அப்புறமா நானும் என்னோட நண்பர்களும் சேர்ந்து நாடகம் போடுவோம். அப்படியே படங்கள்ல சின்னச் சின்ன கேரக்டர்கள்ல நடிச்சேன். வெண்ணிலா கபடி குழு படத்துல சுசீந்திரன் அண்ணன் தான் எனக்கு ஒரு நல்ல காமெடி கேரக்டரை கொடுத்தார். அந்தப் படத்துல பரோட்டோ சூரிய ரசிகர்களுக்கு தெரிய ஆரம்பிச்ச நான் இன்னைக்கு புஷ்பா புருஷன்ங்கிற பேர்ல பாப்புலர் ஆகியிருக்கேன். ஒவ்வொரு படத்திலும் ரொம்ப சின்சியரா தான் நடிக்கிறேன். ரசிகர்களை சிரிக்க வைக்கணும், அதுலேயே இன்னும் அடுத்தடுத்த கட்டத்துக்கு போகணும் என்றவரிடம் எப்போது ஹீரோ ஆகப் போறீங்க? என்கிற கேள்வியை முன் வைத்தார் ஒரு நிருபர்…

அதற்கு பதிலளித்த சூரி சத்தியமா சொல்றேம்ணே இந்த நிமிஷம் வரைக்கும் அப்படி ஒரு ஆசையே எனக்குள்ள இல்லை, இந்தா இன்னைக்கு வரைக்கும் என்னோட கேரியர் நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இப்படியே படங்கள்ல ஹீரோக்களுக்கு ப்ரெண்ட்டாவே நடிக்கிறேனே? கண்டிப்பாக எனக்கு ஹீரோ ஆசை வரவே இல்லைண்ணே… என்றார் மீண்டும் அழுத்தமாக…

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பார்கள். அந்தத் தெளிவோடு இருக்கும் வரை சூரியின் காமெடிப் பயணம் வெற்றிப்பயணமாக தொடரட்டும்!

Leave A Reply

Your email address will not be published.