அசுரகுரு-விமர்சனம்

கோட்டைத் தொடுற முயற்சியில மொத்தமா கோட்டை விடுற சினிமாக்கள் தமிழ்சினிமாவில் அவ்வப்போது வரும். அப்படி வந்து வெந்து போயிருக்கும் படம் அசுரகுரு..

பணம் மேல் ஏன் என்றே தெரியாமல் மோகம் உள்ள ஹீரோ எக்கச்சக்கமாகக் கொள்ளையடிக்கிறார்.டிடெக்டிவ் ஆபிஸரான ஹீரோயின் ஹீரோவைக் கண்டுபிடிக்கிறார். ஹீரோ ஏன் கொள்ளையடிக்கிறார். ஹீரோயின் கண்டுபிடித்து பணத்தை இழந்த வில்லன் டீமிடம் ஹீரோவை மாட்டி விட்டாரா? இல்லையா? என்பது தான் அசுரகுரு.

அசுரகுரு என்ற பெயரில் இருக்கும் கம்பீரம் திரைமொழியில் வெளிப்பட்டிருந்தால் படத்திற்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். ஆனால் திரைக்கதையில் ஒரு நிலக்கரி ட்ரைன் நீளத்திற்கு ஓட்டையோ ஓட்டை. முதல்காட்சியில் படம் மீது நமக்கு ஏற்படும் நம்பகத்தன்மை படம் நெடுக ஏற்படுகிறது..

ஹீரோ ஆச்சர்யமானவன் என்றால் அதற்கான மாயாஜாலம் நிறைந்த காட்சிகள் பக்கா லாஜிக்கோடு இருக்க வேண்டாமா? பாடல்கள் காதல் காட்சிகள் கூட போதிய சுவாரஸ்யத்தைத் தரவில்லை.

விக்ரம்பிரபு நடிப்பிலும் ஒரு மெச்சூட் இல்லை. ஒரு சூப்பர் ஹீரோ ரேஞ்சிற்கு கலக்க வேண்டியவர் பல இடங்களில் கலங்கிய படியே இருக்கிறார். மஹிமா நம்பியார் எக்கச்சக்க அழகோடு வருகிறார். அவ்வப்போது நடிப்பும் எட்டிப்பார்த்துச் செல்கிறது. அவர் சிகரெட் அடிக்கும் காட்சிகளில் நிறைய செயற்கைத்தனம். நண்டு ஜெகன் யோகிபாபு இருவரும் நல்ல தேர்வு. வில்லன்கள் ஏரியா வாஷ் அவுட்!

பின்னணி இசை பாடல்கள் இரண்டுமே கவனிக்க வைக்கத் தவறியுள்ளன. சிஜி வொர்க் எல்லாம் ரணகள சொதப்பல். படத்தின் ஆறுதல்களில் சிறந்த ஒளிப்பதிவும்,யோகிபாபு அடிக்கும் ஓரிரு பன்ச்களும் இடம்பெறும். இத்தனை குறைகள் இருந்தாலும் சலிப்பு ஏற்படாத வகையில் படம் இரண்டு மணி நேரத்திற்குள் வேகமாக முடிந்து விடுகிறது. அது பெரிய ஆறுதல்!
2.5/5