Banner After Header

அசுரன் – விமர்சனம் #Asuran

0

RATING : 4/5

நடித்தவர்கள் – தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே அருணாச்சலம், பசுபதி, பிரகாஷ்ராஜ், பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், சுப்ரமணிய சிவா, அம்மு அபிராமி மற்றும் பலர்

இசை – ஜி.வி.பிரகாஷ்குமார்

இயக்கம் – வெற்றிமாறன்

ஒளிப்பதிவு – வேல்ராஜ்

தயாரிப்பு – வி.கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு

வகை – ஆக்‌ஷன், நாடகம்

சென்சார் பரிந்துரை – U/A சர்ட்டிபிகேட்

கால அளவு – 2 மணி நேரம் 20 நிமிடங்கள்

மிழ்சினிமாவில் நாவல்களை ரசிகர்கள் ரசனைக்கேட்ப திரைப்படமாக்கும் வித்தை தெரிந்த ஒரு சில இயக்குனர்களில் வெற்றிமாறன் முக்கியமானவர். அந்த நாவலை அப்படியே காட்சிப்படுத்தாமல், அதன் இயல்பும் கெட்டுப்போகாமல், அதை தனக்கே உரிய பாணியில் சந்தையில் பந்தி வைப்பதில் கை தேர்ந்தவர்.

அப்படித்தான் பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலின் வெட்டுக்குத்து ஏரியாவையும், மீதிக்கு தன் சொந்த சிந்தனையையும் இணைத்து தனக்கே உரிய ‘வட சென்னை’ பாணியில் வெற்றிமாறன் வெட்டுமாறனாக மாறி படையல் வைத்திருக்கும் படம் தான் இந்த ‘அசுரன்’.

ஆதிக்கச் சாதியினருக்கும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் இடையே நடக்கின்ற பிரச்சனைகளும், மோதல்களும் தான் இந்தப் படத்தின் சாராம்சம்.

சொந்த ஊரில் சிமெண்ட் ஆலை ஒன்றை அமைக்க முயற்சிக்கிறார் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த நரேன். அதற்காக பலரிடம் நிலங்களை வாங்கிப் போடும் அவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த தனுஷுக்கு சொந்தமான நிலத்தையும் பட்டா போட முயற்சிக்கிறார். அதற்கு தனுஷ் மறுக்க, அதன் விளைவு இருவர் குடும்பத்தினருக்கும் மோதல் வருகிறது. வெட்டுகுத்து, பழிக்குப் பழி என்று நகரும் காட்சிகளின் முடிவு என்ன என்பதே மீதிக்கதை.

இந்தப்படம் உலகமெங்கும் இருந்து பல உயரிய விருதுகளை தனுஷுடம் கொண்டு சேர்க்கப் போவது உறுதி. விறுவிறுப்பான காட்சியமைப்புகள் ஒரு பக்கம் நம்மை இருக்கையோடு கட்டுப்போட, இன்னொரு பக்கம் கேரக்டரோடு ஒன்றிப்போய் அசுரத்தனமான நடிப்பைக் கொட்டி பிரமிக்க வைக்கிறார் தனுஷ்.

ஜாடிக்கேத்த மூடி போல பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் கேரக்டரில் தனுஷ் மனைவியாக வருகிறார் மஞ்சு வாரியர். மூத்த பிள்ளையை பறிகொடுத்து விட்டு தூக்கமில்லாமல் தவிக்கும் போதும், உன்னோட கோபம் யார்கிட்ட இருந்து வந்துச்சுன்னு இப்பத் தெரியுதா? என்று கணவனின் கம்பீரத்தைப் பற்றி இளையமகனிடம் விவரிக்கும் போதும் தியேட்டரில் கண்கலங்கவும், கைதட்டவும் வைத்திருக்கிறார்.

தனுஷின் மூத்த மகனாக வரும் டிஜே அருணாச்சலம், இளைய மகனாக வரும் கென் கருணாஸ் இருவரும் சரிசமமாக திரையில் தங்களுக்காக இடத்தை நிரப்பி அதகளம் செய்திருக்கிறார்கள். இருவருக்குமே தமிழ்சினிமாவில் நல்ல எதிர்காலம் தயார்.

வழக்கமான வில்லனாக வரும் பசுபதி, இதில் பாசமுள்ள மச்சானாக வந்து நம்மை கவர்கிறார். தனுஷுன் முறைப்பெண்ணாக வரும் அம்மு அபிராமி வரும் காட்சிகளில் பதைபதைக்க வைக்கிறார். குறிப்பாக செருப்பு போட்டு தெருவில் நடந்தார் என்பதற்காகவே அவருக்கு நடக்கும் அநியாயம் மனித இனத்தின் வெட்கக்கேடான பக்கங்களில் ஒன்று.

ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரலாகவும், வக்கீலாகவும் வரும் பிரகாஷ்ராஜ், ப்ளாஷ்பேக் காட்சிகளில் தனுஷின் அண்ணனாக வரும் இயக்குனர் சுப்ரமணிய சிவா, இன்ஸ்பெக்டராக வரும் இயக்குனர் பாலாஜி சக்திவேல், சாதி திமிர் காட்டும் ஆடுகளம் நரேன், ஏ.வெங்கடேஷ், நிதிஷ் என படத்தில் வருகிற ஒவ்வொரு கேரக்டருக்கும் வெயிட்டேஜ் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சாதிய ஒடுக்கு முறைகளை மீண்டும் திரையில் காட்டி இக்கால இளைஞர்களின் மனதிலும் அதை விதைக்க வேண்டுமா? என்கிற எண்ணம் படம் பார்க்கும் பலருக்கும் எழுவது இயல்பான ஒன்று தான். ஆனால் அன்று முதல் இன்று வரை சாதிய ஒடுக்குமுறை என்பது நின்றபாடில்லை. என்பது தான் கள யதார்த்தம்.

இப்படிப்பட்ட சூழலில் சக மனிதனை மனிதனாக மட்டுமே பார் என்கிற பாடத்தை தருகிற இதுபோன்ற படங்கள் இக்காலத்துக்கு தேவை என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

கதை நடக்கும் இடங்களில் நாமும் ஒரு கேரக்டராகவே மாறி விட்ட உணர்வைத் தருகிறது வேல்ராஜின் ஒளிப்பதிவு. பாடல்களை கிராமியத்தனத்தோடு கொடுத்திருக்கும் ஜி.வி.பிராகாஷ் பின்னணி இசையில் நம் இதயத்தின் பதட்டம் குறையாமல் பார்த்துக் கொள்கிறார்.

”நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துக்குவானுவ, ரூவா இருந்தா புடுங்கிக்குவானுவ, படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது” போன்ற நெல்லைத் தமிழில் வருகிற வசனங்கள் சாதி வெறியர்களில் முதுகில் சவுக்கடியாக விழுகிறது.

வன்முறை என்பது மனித வாழ்க்கையில் அறவே தவிர்க்க வேண்டியது. ஆனால் வெற்றிமாறன் படங்களில் அதுவே அடி நாதமாக இருக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற வன்முறை கதைகளுக்கு குட்பை சொல்லி விட்டு மனித வாழ்வியலின் மகிழ்ச்சியான பக்கங்களை படமாக்கினால் பார்க்கிற ரசிகர்களும் தியேட்டரை விட்டு மகிழ்ச்சியோடு வருவார்கள்.

அசுரன் – சாதிவெறியர்களுக்கு சமட்டி

Leave A Reply

Your email address will not be published.