அதர்வா ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன்
‘பூமராங்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் அதர்வா முரளியோடு புதுப்படம் ஒன்றில் இணைகிறார் இயக்குனர் ஆர்.கண்ணன்.
முழுக்க முழுக்க காதல் கதையாக தயாராகும் இப்படத்தில் அதர்வா முரளி பிஎச்டி மாணவராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.
இந்த படத்தில் அதர்வா முரளியை ரசிகர்கள் ஒரு இளமையான கதாபாத்திரத்தில் பார்க்கலாம். நாயகி அனுபமா பரத நாட்டியத்தில் ஈர்க்கப்பட்ட ஒரு மருத்துவ மாணவியாக நடிக்கிறார். மொத்தத்தில் குடும்ப உணர்வுகளை கொண்ட ஒரு ஜாலியான படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் கண்ணன்.
படப்பிடிப்பு ஜூலை 15 முதல் சென்னையில் தொடங்கப்பட உள்ளது. மேலும் வெளிநாட்டில் மிகவும் அழகான இடங்களில் ஒரு பகுதியை படமாக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். படத்துக்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதுகிறார்.
மேலும் முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, இது குறித்த முறையான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்திலிருந்து விரைவில் வெளியாகும்.
எழுதி, இயக்குவதோடு எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்குகிறார் ஆர்.கண்ணன்.