Banner After Header

அழகென்ற சொல்லுக்கு அமுதா – விமர்சனம்

0

asa-review1

RATING : 2.5/5

110 ரூபாய் கொடுத்து கவுண்ட்டர்ல டிக்கெட் வாங்கி தியேட்டருக்குள்ள போனா உள்ளுக்குள்ள இருக்கிற டென்ஷன் மொத்தமும் தெறிச்சி ஓடுற அளவுக்கு சிரிக்க வைக்கணும். அப்படி ஒரு காமெடி கதகளி தான் இந்த ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா.’

வட சென்னை வியாசர்பாடியில் வேலை வெட்டி எதுவும் இல்லாமல் வீட்டில் தெண்டச்சோறு தின்று கொண்டு நண்பர்களோடு வெட்டியாக ஏரியாவைச் சுற்றி வருகிறவர் ஹீரோ ராஜன் சுரேஷ்.

அப்படி சுற்றி வருகிற போதுதான் அதே ஏரியாவில் குனிந்த தலை நிமிராமல் போகிற ஹீரோயின் அர்ஷிதாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ”உன்னைப் பார்க்கவே புடிக்கல.., மீறி பின்னாடி வந்தேன்னா செருப்பு பிஞ்சிடும்” என்று வசை பாடுகிறார். ஆனாலும் நாயகன் விடுவதாக இல்லை. ”டான் மிரட்டல்”, ”போலீஸ் மிரட்டல்” என தன்னால் முடிந்த வரையில் எல்லா வகையிலும் மிரட்டிப் பார்த்தும் ம்ஹூம்.

ஒரு கட்டத்தில் ஹீரோவின் டார்ச்சர் தாங்காமலேயே வீட்டில் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொல்கிறார். அவரின் இந்த அதிரடி முடிவால் ஹீரோவின் காதல் என்னவானது? என்பதே சிரிக்க சிரிக்க முடியும் கிளைமாக்ஸ்.

சொந்த வீட்டில், அக்கம் பக்கத்தார் எவ்வளவு கேவலமான ஜந்துவாக பார்த்தாலும் எதையும் தலைக்குள் ஏற்றிக்கொள்ளாமல் தறுதலையாக ஊரைச்சுற்றி வரும் இந்த மாதிரியான கேரக்டர்களை நீங்கள் கண்டிப்பாக சந்தித்திருப்பீர்கள். அப்படி ஒரு ”கிறுக்குப் பயபுள்ள” கேரக்டர் தான் நாயகன் ராஜன் சுரேஷ்.

அறிமுக காட்சியில் ஆரம்பித்து அடுத்த சில காட்சிகளில் தலையை அசைத்து அசைத்து நிதானமாக பேசும் டயலாக் டெலிவரியைப் பார்க்கும் போது இயக்குரும், நடிகருமான சசிக்குமாரை ஞாபகப்படுத்தி சிரிக்க வைக்கிறார். களையான முகமில்லை. ஆனாலும் காதலுக்காக ஹீரோயின் பின்னால் செல்கிற காட்சிகளில் எல்லாம் சிரிக்க வைக்காமல் போவேனா? என்கிறார்.

இந்தக் கேரக்டருக்கு இவர் தான் பொருத்தமாக இருப்பார் என்று ராஜன் சுரேஷை தேர்வு செய்த விதத்திலேயே இயக்குநர் நாகராஜன் ”சரக்குள்ள ஆள் தான்” என்பது உறுதியாகி விடுகிறது.

ஹீரோயினாக வரும் அர்ஷிதாவுக்கு பாடல் காட்சிகள் தவிர மற்ற காட்சிகளில் எண்ணைச் சட்டியில் அள்ளிப்போட்ட கடுகாட்டம் கடுப்பாகிற கேரக்டர்! ஹீரோ காதல் முத்திப்போய் கவிதை என்று பிதற்றுகிற காட்சிகளில் இவர் உஷ்… அப்பா… என்க தியேட்டரோ சிரிப்பு சத்தத்தில் அதிர்கிறது.

ஹீரோவின் அப்பாவாக வருகிற பட்டிமன்ற ராஜா இப்படி ஒரு பிள்ளையைப் பெற்று விட்டோமே என்று பீல் பண்ணி ஹீரோ ராஜன் சுரேஷை திட்டித் தீர்க்கிற காட்சிகளும் சீரியஸ் இல்லை; சிரிப்பு தான். ”காதல்ல தோத்துப் போனவங்களுக்கு சாப்பாடே இறங்காதுன்னுதாண்டா கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் 40 இட்லியை சளைக்காம சாப்பிடுறவனை இப்பத்தாண்டா நேர்ல பார்க்கிறேன்” என்று விளக்கம் சொல்லுகிற போது தியேட்டரில் ‘கொள்…’ சிரிப்பு.

காதல், காமெடியோடு, சீரியஸ், செண்டிமெண்ட்டுக்கும் இடமிருந்தும் அதற்கெல்லாம் நுலிழை இடம் கூட கொடுக்காமல் ”நம்பி வாங்க, சந்தோஷமா சிரிச்சிட்டுப் போங்க” என்கிற எண்ணத்தில் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் நாகராஜன்.

ரஜினி ரசிகர் மன்றத்துக்கு தலைவரான ஹீரோ அந்தப் பதவியை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்க பேரம் பேசுவதும், அவரை தலைமைக்கு போட்டுக்கொடுத்து தான் அந்த இடத்துக்கு இன்னொருத்தர் வருவதும் வெட்டிப்பதவிக்கு கூட போட்டியிருக்கிறது என்று ரசிகர் மன்றங்களையும் செக் வைக்கிறார் இயக்குநர்.

நண்பர்களை நம்பி வீட்டை விட்டு வீராவேசத்தோடு வெளியேறுகிற ஹீரோவை அவரது நண்பர்கள் நடு ரோட்டில் விட்டு விடுவதும், ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்து முதலாளியையே கலாய்ப்பதுமாக படம் முழுக்க காமெடி வெடி ஆங்காங்கே வெடித்துக் கொண்டே போகிறது.

ராஜன் மகாதேவ்வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையோடு பிண்ணிப்பிணைந்து ரசிக்க வைக்கிறது. ஜே.கே. கல்யாண்ராமின் ஒளிப்பதிவில் வட சென்னையின் மொத்த ஏரியாவும் கண்முன்னே விரிகிறது.

எந்த இடத்திலும் சுவாரஷ்யம் குறையாமல் பார்த்துக் கொண்ட எடிட்டர் கோபி கிருஷ்ணா நாயகி வட சென்னையின் பிரபலமான டானை தேடிப்போகிற காட்சிகளிலும், காதலுக்காக நாயகியை துரத்துகிற காட்சிகளிலும் சில இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம்.

பிடிக்காத ஒரு பொண்ணை நாயகன் துரத்தி துரத்தி லவ் பண்ணுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று ‘ரேமோ’வை ஞாபகப்படுத்துகிற போது ”நாம காதலிச்சப் பொண்ணு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்ட நாம ஒதுங்கிப்போயிடணும். அதுவும் கூட காதல் தான்” என்று அதற்கு சரியான இடத்தில் டயலாக் வைத்து சரி செய்கிற விதத்தில் இயக்குநரின் டைரக்‌ஷன் திறமை படம் முழுக்க நிரம்பியிருக்கிறது.

வெளியில் மழையும், புயலும் வருகிறதோ இல்லையோ, இந்தப்படம் ஓடுகிற தியேட்டர்களில் வயிறு வலிக்க சிரிக்க வெச்சு மனசை லேசாக்குகிற ”மழையும், புயலுமாக கலந்து கட்டுகிற காமெடி” மட்டும் கியாரண்டி!

Leave A Reply

Your email address will not be published.