பயமா இருக்கு – விமர்சனம்

0

bayama-irukku-review1

RATING 2/5

நட்சத்திரங்கள் : சந்தோஷ் பிரதீப், ஜீவா, பரணி, ஜெகன், மொட்டை ராஜேந்திரன், ரேஷ்மிமேனன், கோவை சரளா மற்றும் பலர்.

இயக்கம் : ஜவஹர்

வகை : ஹாரர்/ காமெடி

சென்சார் சர்ட்டிபிகேட் :’U/A’

கால அளவு : 2 மணி நேரம் 2 நிமிடங்கள்

ப்போதெல்லாம் பேய்ப்படம் என்றாலே பயந்த நிலை போய் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடிப்படம் போல ஆகி விட்டது. அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றுமொரு நகைச்சுவைப் பேய்ப்படம் தான் இந்த ‘பயமா இருக்கு.’

இலங்கைப் பெண்ணான நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவி ரேஷ்மிமேனனை தனியாக வீட்டில் விட்டு விட்டு அவரது அம்மாவையும், அப்பாவையும் தேடி இலங்கைக்குச் செல்கிறார் ஹீரோ சந்தோஷ் பிரதீப்.

 உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் அந்த காலகட்டத்தில் அங்கு தங்களிடம் அகப்படும் தமிழர்களையெல்லாம் சிங்கள ராணுவம் சுட்டுக் கொண்டிருக்க, அதே வரிசையில் ஜெகன், லொள்ளு சபா ஜீவா, மொட்ட ராஜேந்திரன், பரணி நால்வரையும் சுட்டுக் கொலை செய்ய தயாராகிறது.

சிங்கள ராணுவத்திடமிருந்து அந்த நால்வரையும் காப்பாற்றி கள்ளத் தோணி மூலமாக தமிழ்நாட்டுக்கு கூட்டி வரும் சந்தோஷ் தன் வீட்டுக்கு எதிர்வீட்டிலேயே அவர்களை தங்க வைக்கிறார்.

அவர்கள் தங்கும் அந்த வீட்டில் பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. அந்த சம்பவங்களை நடத்துவது அவர்களுடன் இருக்கிற ஒரு பேய் தான் என்று மந்திரவாதியான கோவை சரளா சொல்கிறார். அப்படியானால் மனித உருவில் அவர்களோடு அவர்களோடு இருக்கும் உண்மையான பேய் யார்? என்பதே கிளைமாக்ஸ்.

பயமா இருக்கு என்று டைட்டிலிலேயே பயமுறுத்தினாலும் அது சம்பந்தமான பயமுறுத்தல் காட்சிகள் மட்டும் இல்லாமல் வயிறு குலுங்கச் சிரிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர் ஜவஹர்.

ஹீரோவாக வரும் சந்தோஷ் மனைவிக்காக உருகுவதும், நண்பர்களை காப்பாற்ற அவர் செய்யும் முயற்சிகளிலும் கவனிக்க வைக்கிறார். இருந்தாலும் நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெனக்கிடல் வேண்டும்.

அமைதியே உருவாக வரும் ரேஷ்மிமேனன் பிரசவ கால காட்சிகளில் துடிப்பது முதல் கிளைமாக்ஸில் பேயாக மாறி கணவனை பிரிய மனமில்லாமல் இருப்பது என தனது நடிப்பில் உச் கொட்ட வைக்கிறார். அதற்காகவே அழகுப் பிசாசான ரேஷ்மியை மேக்கப் போட்டு பேயாக்கி காட்டியதெல்லாம் ரொம்ப ஓவர்.

எந்தப் படத்தில் ஜெகனைப் பார்த்தாலும் எங்கே பேசியே கொல்வாரோ என்கிற பயம் வந்து விடும். நல்ல வேளையாக இந்தப்படத்தில் அடக்கியே வாசிக்க வைத்திருக்கிறார்கள்.

ஜீவா, பரணி, கோவை சரளாவை ஆகியோரை விட மொட்டை ராஜேந்திரன் வருகிற காட்சிகளில் காமெடி களை கட்டுகிறது.

சத்யாவின் இசையும்,. மகேந்திரனின் ஒளிப்பதிவும் படத்தின் விறுவிறுப்புக்கு பக்காவாக பலம் சேர்த்திருக்கிறது.

டைட்டிலுக்கு ஏற்றாற் போல ஒரு சீரியஸான பேய்ப்படமாக தந்திருந்தால் கண்டிப்பாக கூடுதல் விறுவிறுப்பு வந்திருக்கும், ஆனால் சீரியஸாக படத்தை ஆரம்பிக்கும் இயக்குநர் ஜவஹர் போகப்போக காட்சிகளை அப்படியே காமெடியாகக் கொண்டு சென்றது இதுவும் பத்தோடு பதினொன்றாக ஒரு பேய்ப்படம் தான் என்கிற எண்ணத்தை உருவாக்கி விடுகிறது.

அன்புக்குரியவர்கள் பேயாகவோ, ஆவியாகவோ இருந்தாலும் கூட அவர்கள் மனித உருவத்தில் இருந்தால் சேர்ந்து சந்தோஷமாக குடும்பம் நடத்தலாம் என்கிறார் டைரக்டர். ஜவஹர்.

அடங்கப்பா எப்படித்தான் இப்படியெல்லாம் பயமே இல்லாம யோசிக்கிறாய்ங்களோ…?

Leave A Reply