Banner After Header

பாகமதி – விமர்சனம்

0

RATING – 3/5

நடித்தவர்கள் – அனுஷ்கா, உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத், தலை வாசல் விஜய் மற்றும் பலர்

இசை – எஸ். தமன்

ஒளிப்பதிவு – ஆர்.மதி

இயக்கம் – ஜி.அசோக்

வகை – ஹாரர், த்ரில்லர்

சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U/A’

கால அளவு – 2 மணி 22 நிமிடங்கள்

‘அருந்ததீ’, ‘பாகுபலி’ என மிரட்டிக் கொண்டிருக்கும் அனுஷ்காவின் நடிப்பில் வந்திருக்கும் இன்னொரு த்ரில்லர் டைப் தான் இந்த ‘பாகமதி’.

நேர்மையான அரசியல்வாதியான ஜெயராமை சாமி சிலைகள் கடத்தல் விவகாரத்தில் சிக்க வைக்க முயற்சிக்கிறது ஆளுகிற அரசு.

அதற்காக அவரிடம் தனிச்செயலாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ்.அதிகாரி அனுஷ்காவை ஜெயராமுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைவாங்குவதற்காக விசாரணை நடத்துவதற்காக பாகமதி என்ற பேய் பங்களாவுக்கு கொண்டு செல்கிறார்கள்.

தனக்கு எதிராக அரசும், அதிகாரிகளும் செய்யும் சதித் திட்டத்திலிருந்து ஜெயராம் தப்பித்தாரா? அந்தப் பிரச்சனையிலிருந்து அனுஷ்கா எப்படி வெளியே வருகிறார்? பாகமதி என்பது யார்? போன்ற கேள்விகளுக்கு பதிலாக அமைவதே இந்த ‘பாகமதி’.

ஐ.ஏ.எஸ் அதிகாரியாக துடிப்பான அதே சமயம் நேர்மையான அதிகாரியாகவும், நாயகன் உன்னி முகுந்தனுடன் காதல் காட்சிகளில் அசத்துவதும், பேய் பங்களாவுக்குள் தானே ‘பாகமதி’யாக மாறி பயமுறுத்தும் மிரட்டலாக காட்சிகள் என படம் முழுக்க உழைப்பை நடிப்பின் வழியாக கொட்டியிருக்கிறார் அனுஷ்கா.

அருந்ததீ படத்துக்குப் பிறகு இந்தப் படத்தை நாம் பார்த்தாலும் அந்தப்படமும் பங்களா சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஞாபகத்தில் வந்து போகிறது.

முதல் பாதியில் ஆஹா இப்படியும் ஒரு நேர்மையான அரசியல்வாதி இருப்பாரா? என்று ஆச்சரியப்பட வைக்கும் ஜெயராம் இடைவேளைக்குப் பிறகு தனது கேரக்டரை மாற்றிக் கொள்வது எதிர்பாராத திருப்பம். அதிலும் தனக்கே உரிய ஸ்டைலில் ஸ்கோர் செய்கிறார்.

ஏ.சி.பி முரளி, ஷர்மா, தலைவாசல் விஜய் என படத்தில் வருகிற மற்ற கேரக்டர்கள் அளந்து தான் நடித்திருக்கிறார்கள். சி.பி.ஐ விசாரணை

அதிகாரியாக வரும் ஆஷா சரத் அந்த விசாரணை சம்பந்தப்பட்ட காட்சிகளில் அப்படியே அவரது அறிமுகப்படமாக பாபநாசம் படத்தை ஞாபகப்படுத்துகிறார்.

பாழடைந்த பழைய பங்களா என்பதை தத்ரூபமாக காட்டுவதற்காக ரொம்பவே மெனக்கிட்டிருக்கிறார் கலை இயக்குநர் ரவீந்திரன். கட்டிடத்தில் ஏற்பட்டிருக்கும் விரிசல்கள், கதவுகள் உள்ளிட்ட இடங்களில் படிந்திருக்கும் தூசு, நூழாம்படை என அத்தனை சின்னச் சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்தி வடிவமைத்திருப்பது பாராட்டுக்குரியது.

திரைக்கதை பல தளங்களில் பயணிப்பதால் இது சரித்திரப் படமா..? பேய் படமா? த்ரில்லர் படமா? அல்லது சமூகப்படமா? என்ற குழப்பம் படம் பார்ப்பவர்களுக்கு தானாகவே எழுகிறது. அல்லது இதை எந்த மாதிரியான படமாகத் தர நினைத்தாரோ? என்கிற கேள்வியும் எழுகிறது.

தமன் இசையில் தெலுங்கு படங்களுக்குரிய அக்மார்க் வாடை அப்படியே அடித்தாலும் பேய், திகில், த்ரில்லர் படங்களுக்குரிய பின்னணி இசையை மிரட்டலாகக் கொடுத்திருக்கிறார்.

மிரட்டலும், வியப்புமாக அன்னார்ந்து பார்க்க வைக்கிறது ஆர்.மதியின் ஒளிப்பதிவு.

திருப்புமுனை இல்லாத, ஏற்கனவே பல பேய்ப்படங்களில் பார்த்த வழக்கமான பயமுறுத்தல் காட்சிகளை தவிர்த்திருக்கலாம் இயக்குநர் ஜி.அசோக்.

‘பாகுபலி’ அளவுக்குக் கூட வேண்டாம், அட்லிஸ்ட் ‘அருந்ததீ’ லெவலுக்காவது இருக்கும் என்கிற பெரிய எதிர்பார்ப்போடு போனால் கொஞ்சம் ஏமாற்றத்தைத் தான் தருகிறாள் பாகமதி. இருந்தாலும் அனுஷ்காவின் மிரட்டலான நடிப்புக்காகவும், அந்த பிரம்மாண்ட பாழடைந்த பங்களாவின் தத்ரூபத்துக்காகவும் படத்தை ரசிக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.