Banner After Header

‘பரதம் 5000’ : உலக சாதனைக்காக 5000 கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட பரத நாட்டிய விழா!

0

bharatham-5000

வெறும் சினிமா இசைக் கச்சேரிகளோடு தங்கள் பணியை சுருக்கி விடாமல், கர்நாடக இசைக்கச்சேரிகளிலும் பங்குபெற்று ஆண்டுதோறும் ‘சென்னையில் திருவையாறு’ என்கிற கர்நாடக இசை நிகழ்ச்சியை நடத்தி புகழ்பெற்று வரும் லக்‌ஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினர் அடுத்து பரத நாட்டியக் கலையில் புதிய சாதனையைச் செய்யத் தயாராகியிருக்கிறார்கள்.

அந்த வகையில் பாரத நாட்டின் பழம்பெரும் கலைகளில் ஒன்றாகவும் தமிழ்த்திருநாட்டில் தோன்றி இன்றளவும் உயிர்ப்புடனும், உலகின் உயரிய கலைகளின் வரிசையில் முன்னிலையில் திகழ்வதுமான நமது பரதநாட்டியக் கலையில் ஓர் உலக சாதனை படைக்கும் நோக்கத்தில் ஒரு பிரம்மாண்டமான பரதநாட்டிய கலை விழா ஒன்றை நடத்துகிறது லஷ்மண் ஸ்ருதி இசைக்குழு!

இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப் பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் நடராஜர் வடிவத்தில் ஆடும் நடனம் ‘தாண்டவம்’ என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் ‘ஆனந்த தாண்டவம்’ என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் ‘ருத்ர தாண்டவம்’ என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் ‘லாஸ்யா’ என்று அழைக்கப்படுகிறது.

பரதக் கலையை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்த பெருமை திருமிகு. ருக்மணிதேவி அருண்டேல் அவர்களையே சேரும். மேலும் இக்கலையை வளர்ப்பதற்காகவே சென்னையில் கலா ஷேத்ரா என்ற கலைக் கூடத்தை நிறுவினார். இங்கே நடனம் பயின்ற ஆயிரக்கணக்கான பெண்கள் இன்று உலகம் முழுவதும் சென்று பரதக் கலையின் சிறப்பைப் பறை சாற்றி வருகின்றனர்.

அப்படிப்பட்ட இந்த பரதக்கலையின் மேம்பாட்டை உலகெங்கும் பரப்புவதற்கு புதிய முயற்சியாகவும் இக்கலையின் அருமை பெருமைகளை இளைய தலைமுறையினர் அறிந்து அதை ஆர்வத்தோடு பயிலவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும் ஒரு மாபெரும் பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

நாட்டியக்கலைஞர் திரு. அதிர்ஷ்ட பாலன் நடன அமைப்பில் உலகப் பொதுமறையான திருக்குறளின் முப்பது திருக்குறள்களை கருவாகக் கொண்டு இசையமைக்கப்பட்ட 26 நிமிட பாடலுக்கு 5000 பரத நாட்டியக் கலைஞர்கள் ஒன்று கூடி நடனமாட உள்ளனர்.

பரத மாமேதை நாட்டியப் பேரரசி, பத்மபூஷண் திருமதி. பத்மா சுப்ரமணியம் அவர்கள் தலைமையேற்க உள்ளார். மேலும் பரத நாட்டியக் கலைஞர்களும், திரைப்பட நடன இயக்குநர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார்கள்.

இந்நிகழ்வில் நடனமாடுவதற்கு பதிவு செய்த கலைஞருக்கு 26 நிமிடங்களுக்கான பாடலும், அப்பாடலுக்கு நடனக் கலைஞர் ஒருவர் ஆடுகின்ற ஆடல் வடிவமும் பதிவு செய்யப்பட்ட காணொளித்தட்டு (டிவிடி) வழங்கப்படும். இந்த காணொளியைப் பார்த்து பயிற்சி செய்து கலைஞர்கள் இந்நிகழ்வில் ஆடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் நடனப் பள்ளி ஆசிரியர்களும், நடனப் பள்ளி இயக்குநர்களும் பல்வேறு வகையில் பணியாற்றி வருகிறார்கள். வெளியூரிலிருந்து வருகின்ற கலைஞர்களுக்கு தங்கும் இடவசதியும், பயிற்சி செய்வதற்கான வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அயல்நாடுகளில் இருந்தும் பரதக்கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

5000 கலைஞர்கள் பங்கேற்க இருக்கும் ”கின்னஸ் உலக சாதனை” நிகழ்வென்பதாலும், 5000 கலைஞர்களின் பெற்றோர்கள், 500க்கும் மேற்பட்ட நடன ஆசிரியர்கள், 100க்கும் மேற்பட்ட நடனப் பள்ளிகளின் இயக்குநர்கள், 5000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் என்று ஆயிரக் கணக்கானோர் வருகை தந்து நிகழ்ச்சியினை சிறப்பு செய்ய உள்ளதாலும் இதற்கான ஏற்பாடுகளை வேல்ஸ் பல்கலைக்கழகம், லஷ்மன் ஸ்ருதி, விசாகா மீடியா ஆகிய நிறுவனங்கள் இரண்டு மாத காலமாக செய்து வருகின்றனர்.

இந்த மாபெரும் நிகழ்ச்சியில் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று மாலை 5.00 மணியளவில் சென்னை ‘’பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழக’’ வளாகத்தில் 5000 பரதக் கலைஞர்கள் ஒன்றிணைந்து புதிய கின்னஸ் உலக சாதனை படைக்க உள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.