Banner After Header

சென்னை 600028 பார்ட் 2 – விமர்சனம்

0

chennai-28-2nd-part


RATING : 3/5

2007ம் ஆண்டு ரிலீசான ‘சென்னை 600028’ படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே கிரிக்கெட் டீமோடு சுமார் 10 வருடங்கள் கழித்து களமிறங்கியிருக்கும் இயக்குநர் வெங்கட்பிரபு களமிறங்கியிருக்கும்  படம் தான் ‘சென்னை 600028 – பார்ட் 2.’

‘சென்னை 600028’ -ல் பேச்சுலராக வந்தவர்கள் இதில் திருமணம், குடும்பம், குழந்தை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் செட்டிலாகியிருக்கிறார்கள். அப்படி செட்டிலான எல்லோருமே அவர்கள் டீமில் ஒருவரான ஜெய்யின் திருமணத்துக்கு மீண்டும் ஒன்று கூடுகிறார்கள்.

ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் சானா அல்ஃதாப்பை காதலித்து திருமணம் செய்ய, அவர் ஊரான தேனிக்கு நண்பர்களுடன் செல்கிறார் ஜெய்.

அங்கு தனது நண்பர்களைப் பார்த்ததும் உற்சாகமாகும் இன்னொரு நண்பரான அரவிந்த் ஆகாஷ் 8 வருஷமாக தன்னுடைய கிரிக்கெட் டீமை தோற்கடித்து வரும் அதே ஊரைச்சேர்ந்த வைபவை தோற்கடித்து கோப்பையை வெல்ல திட்டமிடுகிறார்.

ஜெய் திருமணத்துக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கிற நிலையில் எல்லோரும் சேர்ந்து அரவிந்த் ஆகாஷுக்காக கிரிக்கெட் விளையாடி ஜெயிக்கிறார்கள்.

ஜெயித்து விட்ட சந்தோஷத்தில் மொத்த டீமும் ‘சொப்பன சுந்தரி’ மனிஷா யாதவ்வுடன் சேர்ந்து ஆட்டம் போட, தோற்று விட்ட கடுப்பில் இருக்கும் வைபவ்வோ ஜெய்யின் திருமணத்தை சதி செய்து நிறுத்துகிறார்.

அந்தச் சதியை சரி செய்து, மீண்டும் தான் காதலித்த பெண்ணையே ஜெய் கரம் பிடித்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

முதல் பாகம் எடுக்கப்பட்ட ஒரு படத்தின் இரண்டாம் பாகம் வரும் போது அதில் முதல் பாகத்தில் இருந்த திரைக்கதையின் விறுவிறுப்பு அவ்வளவு தென்படாது. ஆனால் இந்தப்படத்தை பொறுத்தவரை முதல் பாகத்தைக் காட்டிலும் இன்னும் கூடுதல் மசாலாவைச் சேர்த்து ‘சிரிக்க’ ‘சிரிக்க’ திரைக்கதை அமைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

முதல் பாகத்தில் பார்த்தவர்கள் எல்லாம் இப்போது இப்படி இப்படி இருக்கிறார்கள் என்று ஒரு நீளமான காட்சியில் வாய்ஸ் ஓவரில் விளக்கம் கொடுத்துக் கொண்டே போகும் போது எங்கே போரடிக்குமோ? என்று நினைக்கத் தோன்றுகிறது. அது முடியவும் திரைக்கதையின் இயல்பு ஜெட் வேகத்தில் சூடு பறக்கிறது.

படத்தில் வருகிற மிர்ச்சி சிவா கேரக்டருக்கு திருஷ்டி சுத்தித்தான் போட வேண்டும். மனுஷன் முகம் திரையில் தெரிய ஆரம்பித்ததும் ஆட்டோமேட்டிக்காக நம் முகமும் சிரிக்கத் தயாராகி விடுகிறது! திரைப்படங்களை யு-ட்யூப்பில் விமர்சிக்கிறவர்களை செம கலாய் கலாய்த்து கிழித்து தொங்க விடுகிறார். “எங்களுக்கு தெரியும் மிஸ்டர் கேமரூம் நீங்க அவதார் படத்தை எங்க ஊரு வியட்நாம் காலனில இருந்து தான் சுட்டீங்க” என யு-ட்யூப் விமர்சகராக அறிமுகமாகும் காட்சியிலேயே தியேட்டரில் கிளாப்ஸ்களை அள்ளுகிறார். இப்படி படம் முழுக்க அவர் கொளுத்திப் போடுகிற காமெடி நான் -ஸ்டாப் சரவெடி.

இந்த இரண்டாவது பார்ட்டிலும் பேச்சுலராகவே வருகிறார் பிரேம்ஜி. சதா எந்த நேரமும் சரக்கு சரக்கு சரக்கு என சுற்றிக்கொண்டே இருக்கிறார். குடித்துக் கொண்டே இருக்கிறார்.

கிரிக்கெட் மீதான மோகம் நிஜமாகவே குறைந்து விட்ட இந்த காலச்சூழலில் அதை மீண்டும் ரசிக்க வைக்கிற வித்தையை படத்தில் மிக அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

தான் எடுக்கின்ற படத்தையும் கலாய்த்தோடு அப்பா கங்கை அமரனையும் ஒரு சீனில் தலை காட்ட வைத்து எங்க குடும்பமே சரக்குக்காக அலையிற குடும்பம் தான் என்று திரையில் காட்டுவதெல்லாம் ஓவரா தெரியலையா வெங்கி சார்?

இப்படி சுற்றி வருகிற அத்தனை கேரக்டர்களும் சிரிக்க வைக்க வேண்டிய இடங்களில் சிரிக்க வைத்து, கலங்க வேண்டிய இடங்களில் கலங்க வைக்கிறார்கள்.

மற்றவர்களை விட ஜெய்க்கு கொஞ்சம் கனமான பாத்திரம், அதையும் அவர் அசால்ட்டாக சுமந்து க்ளாப்ஸ்களை வாங்குகிறார். அவரைப்போலவே கிராமத்தான் கேரக்டரில் மீசையை முறுக்கிக் கொண்டு புல்லட்டில் கெத்தாக திரியும் வைபவ்வும் சேம் பெஞ்ச்.

இவர்களின் மனைவிகளாக வரும் விஜயலட்சுமி, அஞ்சனா, சாந்தினி என எல்லோருமே குடும்பம்னா இப்படித்தான் இருக்கும் என்பதை மிக அழகாக காண்பித்து விட்டுப் போகிறார்கள்.

பேச்சுலர் ஃலைப்புக்கும், ஃபேமிலிமேன் ஆன பிறகான இளைஞர்களின் ஃலைப்புக்குமிடையேயான வித்தியாசத்தை காட்சிப்படுத்தியிருப்பதில் வெங்கியின் திரைக்கதைக்கு ஸ்பெஷல் பாராட்டு.

படத்தில் வருகிற டி.சிவா, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, சச்சு என மற்ற கேரக்டர்களும் மனசுக்குள் மணி அடிக்கிறார்கள்.

ஒரே ஒரு சிங்கிளுக்கு வந்து குத்தாட்டம் போட்டு விட்டுப் போனாலும் அந்தச் ‘சொப்பன சுந்தரி’யாலதானே இவ்ளோ பிரச்சனையும் என்று எல்லோருக்கும் டென்ஷன் ஏற்றி விட்டுப் போகிறார் மனிஷா யாதவ்.

ஒரே சீனில் தான் வருகிறார் சோமசுந்தரம், ”ஏம்பா மொத்தம் எத்தனை பால் என்று கேட்டு, அப்போ அந்த 90 பாலையும் நானே வாங்கிக் கொடுத்துடுறேன்” என்று சொல்கிற காட்சியில் தியேட்டரே வயிற்றுவலியில் சிரித்து விடும்.

முதல் பாகத்தில் தன்னை விட சின்னப் பசங்களிடம் தோற்று விட்டு தனக்கு பிடித்தமான கிரிக்கெட் பேட்டை இழந்த விஜய் வசந்த் இதில் அதை ஜெயித்து திரும்ப வாங்குகிற போது நமக்கே மனசுக்குள் ஒரு இனம் புரியாத சந்தோஷம்.

ரொம்ப நாள் கழிச்சு யுவனின் இசையை திரையில் கேட்க முடிகிறது. மனசுக்குள் அசை போட வைக்கும் அந்தப் பின்னணி இசைக்கு கூடுதலாக பிரேம்ஜியும் பவதாரணியும் கை கொடுத்திருக்கிறார்கள். பாடல்களும் ”கம் பேக் யுவனை” ”ஹிட் பேக் யுவனாக” காட்டியிருக்கிறது.

அப்பழுக்கற்ற கலர்ஃபுல்லான தேனி மாவட்டத்தின் கிராமத்து வாசனையை ஒளிப்பதிவில் கொடுத்திருக்கிறார் ராஜேஷ் யாதவ்.

போதுமான அளவுக்கு கிரிக்கெட், நெறைய காமெடி, கொஞ்சூண்டு ஃபேமிலி செண்டிமெண்ட் என 10 வருடங்களுக்குப் பிறகும், பழைய நெடி அதிகம் இல்லாத ஒரு அப்டேட் வெர்ஷனாக இப்படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

சென்னை 600028 பார்ட் 2 – செகண்ட் இன்னிங்க்ஸும் செஞ்சுரி!

Leave A Reply

Your email address will not be published.