Banner After Header

தேவ் – விமர்சனம் #Dev

0

RATING 3/5

‘தேவ்’ என்ற டைட்டிலைப் பார்த்ததும் இது ஏதோ ஒரு ஆக்‌ஷன் படம் என்று நினைத்து விட வேண்டாம். இது ஒரு பக்காவான காதல் சாகசப்படம்.

எல்லோரும் வாழும் ரெகுலர் வாழ்க்கையை நாமும் வாழ்வதில் என்ன சுவாரஷ்யம் இருக்கப் போகிறது? என்று யோசிக்கும் கார்த்தி ஏதாவது சாகசம் செய்வது தான் வாழ்க்கை.

அப்படித்தான் எவரெஸ்ட் சிகரத்தை தொட வேண்டுமென்கிற வேட்கையோடு இருக்கும் அவரை ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங் காதல் வலையில் விழ வைக்க முடிவு செய்கிறார் அவரது நெருங்கிய நண்பர்களான விக்னேஷும், அம்ருதாவும்.

அப்பாவை இழந்து அம்மாவின் அரவணைப்பில் மட்டுமே வாழும் ரகுலுக்கு ஆண்கள் என்றாலே வெறுப்பு. அப்படிப்பட்டவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார் கார்த்தி. எல்லோரையும் போல ஆரம்பத்தில் கார்த்தியையும் வெறுக்கும் ரகுல், அவருடைய சில நல்ல நல்ல நடவடிக்கைகளை பார்த்து மெல்ல மெல்ல காதலில் விழுகிறார்.

ஒரு சந்தர்ப்பத்தில் காதல் ஜோடிக்குள் பிரிவு வரக்கூடிய சூழல் வருகிறது. ஈகோவால் ஜோடி மீண்டும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

காதலைத் தாண்டி உக்ரைன், அமெரிக்கா, லண்டன், சென்னை, மும்பை, அமெரிக்கா என ஒரு பயணக்கதையாக காட்சிகளாக நகர்த்திய அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் கூடவே காதல் ஜோடி, அவர்களுக்குள் வரும் ஈகோ என கொஞ்சம் தடுமாறி எதை ரசிகர்களிடத்தில் முழுமையாக கடத்துவது என்பதில் தடுமாறியிருக்கிறார்.

பணக்கார வீட்டுப் பையனுக்கான ஸ்டைலீஸ் லுக்கோடு, உடல்மொழிகளிலும் ஸ்கோர் செய்கிறார் கார்த்தி. கார்த்தியின் நெருங்கிய நண்பர்களாக வரும் விக்னேஷ், அம்ருதா இருவரில் ஸ்டாண்டப் காமெடியனாக வருகிறார் விக்னேஷ். சில இடங்களில் சிரிக்க வைக்கிறார், பல இடங்களில் ”எப்பப்பா பேசுறதை நிப்பாட்டுவ?” என்று கெஞ்சவும் வைக்கிறார்.

பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ரேணுகா என படத்தில் வரும் மற்ற நட்சத்திரங்களை தேவைக்கு ஏற்ப மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

வயதில் சிறியவராக இருந்தாலும் ‘வாங்க தம்பி’ என்று மகன் கார்த்தியை பிரகாஷ்ராஜ் மரியாதையுடன் அழைப்பதும், அவரை நம்பி ஒரு வேலையை ஒப்படைப்பதுமான காட்சிகளெல்லாம் ஃபேமிலி ஃபீல்குட் ரகம்.

உலகத்திலுள்ள பல அழகான இடங்களை ஓசியில் சுற்றிப் பார்த்த வந்த திருப்தியை தருகிறது வேல்ராஜின் ஒளிப்பதிவு. குறிப்பாக எவரெஸ்ட் சிகரம் சம்பந்தப்பட்ட பனிப்பிரதேசக் காட்சிகள் குளுமையோ குளுமை!

‘அனங்கே சினுங்குதே’, ‘எங்கடி நீ போன’ ஏன ஏற்கனவே போட்ட மெட்டுகளையே ரிபீட் அடித்திருக்கிறார் ஹாரீஸ் ஜெயராஜ். பல காட்சிகளில் பின்னணி இசையை ட்ரம்ஸ் சத்தங்களால் நிரப்பியிருக்கிறார்.

திருப்புமுனை காட்சிகளோ, ஞாபகத்தில் வைத்து ரசிக்கக் கூடிய காட்சிகளோ இல்லாதது பெரும்குறை. காட்சிகளில் காட்டிய பணக்காரத்தனத்தை, திரைக்கதையை விறுவிறுப்பாக அமைப்பதில் காட்டியிருக்கலாம்.

இருந்தாலும் மெதுவாக நகரும் எஸ்க்லேட்டர் போல ஒரு சுகமான அட்வெஞ்சர் பயண அனுபவத்தை தந்ததற்காக இந்த ‘தேவ்’ டீமை பாராட்டலாம்.

Leave A Reply

Your email address will not be published.