Banner After Header

தில்லுக்கு துட்டு 2 – விமர்சனம் #DhillukuDhuddu2

0

RATING – 3/5

ந்தானம் நடிப்பில் 2016-ம் ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘தில்லுக்கு துட்டு’ படத்தைத் தொடர்ந்து ஹாரர் காமெடிப்படமாக வந்திருக்கும் அதன் இரண்டாம் பாகம் தான் இந்த ‘தில்லுக்கு துட்டு 2’.

ஆட்டோ டிரைவரான சந்தானமும், அவரது மாமனார் மொட்டை ராஜேந்திரனும் சேர்ந்து செய்யும் கலாட்டாவால் அவர்கள் வசிக்கும் குடியிருப்பே நிம்மதியை தொலைக்கிறது. எப்படியாவது இருவரின் தொல்லையிலிருந்தும் விடுபட வேண்டுமென்று நினைத்து சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கிறார்கள்.

அப்போது தான் நாயகி ஸ்ரித்தா சிவதாஸிடம் யாராவது நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னால் அவர்களை ஒரு பேய் அடித்து, துவைத்து துவம்சம் செய்து விடுகிறது.

உடனே குடியிருப்பில் வசிக்கும் டாக்டர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் சந்தானத்தையும் ஸ்ரித்தா சிவதாஸின் காதல் வலையில் விழ வைக்கிறார்கள். அவர்கள் திட்டத்தை முறியடித்து பேயிடமிருந்து சந்தானம் தப்பித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

இப்படி ஒரு சந்தானத்தை தான் நாங்கள் பார்க்க ஆசைப்பட்டோம் என்று சொல்லும் விதமாக, நீண்ட நாட்களுக்குப் பிறகு நிஜமாகவே வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் படமாக கொடுத்திருக்கிறார் சந்தானம். இடைவேளை வரை தனக்கே உரிய கவுண்ட்டர் வசனங்கள் மூலம் தியேட்டரை திகட்ட திகட்ட சிரிக்க வைப்பவர், நடிப்பு, டான்ஸ், ஸ்டண்ட் ஆகியவற்றிலும் எந்த பில்டப்பும் இல்லாமல் அசத்தியிருக்கிறார். இந்த ரூட்டையே பாலோ பண்ணுங்க பாஸூ…

சில படங்களில் காமெடி என்ற பெயரில் கடுப்பேற்றிக் கொண்டிருந்த மொட்டை ராஜேந்திரன் இதில் சந்தானத்துடன் ஜோடி போட்டு கலகலப்புக்கு கூடுதல் உத்தரவாதம் தருகிறார்.

கேரள சேச்சியாக வரும் நாயகி ஸ்ரித்தா சிவதாஸ் முகத்தில் வசீகரம் அதிகம் இல்லை என்றாலும், கொடுத்த கேரக்டரில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இவர்களைத் தவிர விஜய் டிவி கலக்கப்போவது யாரு டீமில் உள்ள பலரை அவ்வப்போது காட்சிகளில் முகம் காட்ட வைத்திருக்கிறார் இயக்குனர் ராம்பாலா.

சந்தானத்தை வைத்து எப்படிப்பட்ட படத்தைக் கொடுத்தால் ரசிகர்கள் வரவேற்பார்கள் என்பதை நாடி பிடித்து பார்ப்பதைப் போல மிகத் தெளிவாக திரைக்கதை அமைத்திருக்கிறார் ராம்பாலா.

ரசிகர்களை சிரிக்க வைப்பதே நோக்கம் என்கிற முடிவுக்கு வந்து விட்டதால் பாடல்கள், பின்னணி இசையில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. ஆனாலும் எந்தளவுக்கு தேவையை அதை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சபீர்.

இரண்டாம் பாதியை ஒரு பங்களாவுக்குள்ளேயே காட்சிகளை ஓரளவுக்கு சோர்வில்லாமல் கடத்திச் சென்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தீபக்குமார் பதி.

வயிறு வலிக்க சிரிக்கக் கூடிய காமெடிக் காட்சிகள் இருந்தாலும் அதில் சில டபுள் மீனிங் வசனங்களாக இருந்ததை தவிர்த்திருக்கலாம். ஆனாலும் வெளிப்படையாக கெட்ட வார்த்தைகளை வைக்கக் கூடிய இயக்குனர்களுக்கு மத்தியில் இதில் பட்டும் படாமல் வைத்திருந்ததை பெரிதாக எடுக்கத் தேவையில்லை.

சமீபகாலமாக பல படங்களில் காமெடி என்ற பெயரில் கடுப்பேற்றும் நடிகர்களுக்கு மத்தியில், நிஜமாகவே வயிறு வலிக்க, குலுங்க குலுங்க சிரிக்க வைத்து முழுமைமாக ரசிக்கும் படமாகக் கொடுத்து தன் முத்திரையை திரையில் மீண்டும் பதித்திருக்கிறார் சந்தானம். இனி வரும் படங்களிலும் இப்படியே நடித்தால் இனிமேல் சந்தானத்துக்கு ஒவ்வொரு படத்திலும் ‘துட்டு’ தான்.

Leave A Reply

Your email address will not be published.