துருவங்கள் பதினாறு – விமர்சனம்

0

dhuruvangal-16-review-1

RATING : 3.5/5

ரு போலீஸ் அதிகாரி தான் துப்பு துலக்கிய கொலை வழக்கு ஒன்றை தன் பார்வையில் சீன் பை சீன் நுணுக்கமாக விவரிப்பது தான் இந்த ‘துருவங்கள் 16’.

ஒரு படம் ரிலீசாவதற்கு முன்பே திரையுலக பிரபலங்கள் அதைப்பற்றி சிலாகித்தால் ”அப்படியென்ன இந்தப் படத்துல இருக்கு?” என்கிற ஆவல் எழும்.

‘துருவங்கள் 16’ படத்தைப் பொருத்தவரை 21 வயசே ஆன ஒரு இளைஞர் இயக்கியிருக்கிறாரே? என்கிற ஆவல். படத்தின் மேக்கிங் பத்து மணிரத்னங்களையும், பத்து ஷங்கர்களையும் ஒரு சேர குவித்து வைத்திருக்கிறது என்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! அதுதான் படம் ரிலீசாவதற்கு முன்பே திரையுலக பிரபலங்கள் இப்படத்துக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கவும் முக்கிய காரணம்.

அதற்கான முழுத் தகுதியையும் படத்தின் ஒவ்வொரு ப்ரேமிலும் படர விட்டு தமிழ்சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் ஒவ்வொருவரும் இவர் இயக்கத்தில் நடித்தே தீருவார்கள் என்கிற உத்தரவாத இயக்குநர்களில் ஒருவராகியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கார்த்திக் நரேன். வெல்டன் அண்ட் வெல்கம் ப்ரோ…!!!

கோயம்புத்தூரில் ஒரு ரம்மியமான மழை இரவில் நடக்கும் ஒரு சம்பவத்தில் இரண்டு ஆண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். ஒரு பெண் காணாமல் போகிறார். அதன் பின்னணியை நூல் பிடித்தாற் போல அஸ்வின் என்கிற இளம் போலீஸ் அதிகாரியோடு பின் தொடரும் மூத்த போலீஸ் அதிகாரியான ரகுமான், அந்த பின் தொடர்தலில் தன் ஒரு காலையே விபத்தில் இழந்து பணியிலிருந்தும் ஓய்வு பெறுகிறார்.

அத்தோடு அந்த ஃபைல் மூடி வைக்கப்பட்டு விட்டது என்று நினைத்தால் மீண்டும் அதே கொலை வழக்கு அவரைத் தூசி தட்டி துரத்துகிறது? அந்த கொலைகளில் தொடர்புடையவர் யார்? என்பதே நொடிக்கு நொடி ஹார்ட் பீட்டை எகிற வைக்கிற கிளைமாக்ஸ்.

படத்தில் நாயகி இல்லை, காமெடி இல்லை, ஃபேமிலி செண்டிமெண்ட் இல்லை. ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் ஜீவன் இருக்கிறது. ஒட்டுமொத்த பாராட்டுகளையும் ஒற்றை ஆளாக கதையின் நாயகனாக பின்னிப் பிணைந்து அள்ளிக் கொள்கிறார் நடிகர் ரகுமான்.

ரகுமான் என்கிற ஆளுமைக்கு ஏற்ற போலீஸ் கேரக்டர். அவர் இதற்கு முன்பும் பல படங்களில் இதே கேரக்டரை ஏற்று நடித்திருக்கிறார். ஆனாலும் இதில் இன்னும் புதிதாகத் தெரிகிறார்.வசனங்களை பேசுகிற விதம், அங்கே, இங்கே திரும்புகிற ஸ்டைல் என மனுஷன் மிரட்டியிருக்கிறார்.

படத்தில் வருகிற அந்த மூன்று புதுமுக இளைஞர்களும் எங்கே நாம் போலீசில் மாற்றிக் கொண்டு விடுவோமோ? என்கிற பதட்டத்தை கண்களில் காண்பிப்பதாகட்டும், பார்த்துக் கொள்ளலாம் என்று அசால்ட்டாக செல்கிற பாவனைகளாகட்டும், பணம் கேட்டு மிரட்டும் போது படபடப்பாகிற முகமாகட்டும் படத்தின் விறுவிறுப்புக்கு எந்த பங்கமும் வைக்காமல் உழைப்பை கொட்டியிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த படத்தில் நம்மை புருவம் உயர்த்தி ஆரம்பம் முதல் எண்ட்டு டைட்டில் கார்டு வரை வியப்பைத் தருவது டைரக்டர் கார்த்திக் நரேனின் ஹைவேஸ் ஸ்பீடு மேக்கிங் தான். ஹாலிவுட் தரத்தை ஒரு தமிழ்ப்படத்தில் பார்த்த அனுபவத்தை முழுமையாகத் தருகிறது.

அசம்பாவிதம் நடக்கும் அந்த ரம்மியமான மழை இரவு, ரகுமான் தங்கியிருக்கும் மலைப்பிரதேச பிரம்மாண்ட பங்களா, போலீஸ் ஸ்டேஷனின் உள் அறைகள் என அத்தனையிலும் சுஜித் சரங்கின் கேமரா சளைப்பே இல்லாத நேர்த்தியான ஒளிப்பதிவை திரையில் சப்ளை செய்திருக்கிறது.

எந்த இடத்திலும் எல்லைக் கோட்டைத் தாண்டாத, பிக்ஸ் பண்ணப்பட்ட ஜாக்ஸ் பிஜாய்யின் பின்னணி இசை படத்தின் வேகத்துக்கும், விறுவிறுப்புக்கும் எக்ஸ்ட்ரா பலம்.

அதிபுத்திசாலித்தனத்தின் உச்சம் என்றெல்லாம் கமெண்ட் அடித்து பழக்கப்பட்டவர்கள் தங்கள் மூளையை ஒருமுறை ஓவர் ஆயிலிங் பண்ணிக் கொண்டு வந்து தியேட்டரில் படத்தைப் பார்த்தால் ஒரு நல்ல சினிமாவைப் பார்த்த அனுபவம் நிச்சயம் கிடைக்கும்!

துருவங்கள் 16 – ‘மேக்கிங்’ மேஜிக்!

Leave A Reply

Your email address will not be published.