தமிழனின் ரத்தத்தை உறிஞ்சு ராஜ வாழ்க்கை வாழும் ரஜினி – பாரதிராஜா கடும் தாக்கு!

0

சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின் போது அதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களில் சிலரால் போலீஸ்காரர்கள் தாக்கப்பட்ட சம்பவம் வன்முறையின் உச்சம் என்று வர்ணித்து ட்விட்டரில் வக்காலத்து வாங்கினார் ரஜினிகாந்த்.

ஆனால் அதே போலீஸ் அதற்கு முன்பு நடத்திய திருப்பூரில் பெண்ணின் கன்னத்தில் டிஎஸ்பி அறைந்த சம்பவம், திருச்சி உஷா உயிரிழந்த சம்பவம், தி.நகரில் தாய், சகோதரி கண் முன்னே இளைஞர் ஒருவரை போலீஸ் தாக்கியது, போன்ற செயல்களைச் செய்தபோது அதைக் கண்டித்து ரஜினி வாய் திறக்கவில்லை. அதேபோல காஷ்மீர் சிறுமி கொலை உள்ளிட்டவைகளுக்கு வாய்த்திறக்கவில்லை என்று அவரை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

இப்படி ரஜினி பொதுமக்களுக்கு எதிராகவும், அவர்களின் உரிமைகளுக்காக தெருவில் இறங்கி போராடும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்த ரஜினிகாந்த்தைப் பற்றி கடுமையாக தாக்கி தனது பன்னாட்டுத் திரைப்பட பயிற்சிப் பட்டறை சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ”காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முழுத் தமிழகமும் ஒரே குரலில் தங்கள் உணர்வுகளை எதிரொலித்த இந்த நேரத்தில்.. நம் , தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையும், அற வழியில் போராடியது. ஆனால் , நம் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு, நம் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு, நம் மீது கத்தி வைத்து பதம் பார்க்க நினைக்கும், ரஜினிஅவர்களின் சமீபத்திய ட்விட்டர் பேச்சு !

நான் அவரை கேட்கிறேன், எது வன்முறையின் உச்ச கட்டம் ரஜினி அவர்களே! அற வழியில் போராடிய எம் தமிழர்கள் உங்களுக்கு வன்முறையாளர்களா? தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டார்கள், என்ற காழ்ப்புணர்ச்சியில் பேசும், பேச்சு இது.

தங்களுடைய திரைப்படம் வெளியாகும் போது மட்டும் பூச்சாண்டி காட்டும், உங்களைப் போன்ற ஒரு நடிகனை தமிழ்த்திரை உலகம் இதுவரை சந்தித்ததே இல்லை.. தமிழ்நாட்டிலும் சரி.. உலக அளவிலும் சரி… தமிழன் கொட்டிக்கொடுத்த பணத்தில் சேர்த்து வைத்த செல்வத்தில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

இலங்கை தமிழர்களை கொன்று குவித்த போது குரல் கொடுத்தீர்களா? நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் இறங்கி போராடினீர்களா? இல்லை ,ஓர் அறிக்கையாவது விட்டீர்களா? மீத்தேன் பற்றி ஏதாவது வாய் திறந்தீர்களா?

எதற்கும் வாய் திறக்காத நீங்கள், இன்று காவிரிக்காக ஒன்று கூடிய தமிழர்களின் ஒற்றுமை உணர்வை வன்முறைக் கலாச்சாரம் “இதை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும் என்கிறீர்களே!”

ஓ! இப்போது தான் பட்டவர்த்தனமாக தெரிகிறது, நீங்கள் தமிழன் அல்லாத கர்நாடகக்காவியின் தூதுவர் என்று!

உங்கள் வேஷம் மெல்ல மெல்லக் கலைகிறது, ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள்!

காவிரிப் பிரச்சனை பற்றி எரிந்த போது, வெந்து செத்தது , எங்கள் தமிழ் இனம்.. சேதமடைந்தது எங்கள் தமிழரின் சொத்துக்கள்.

அங்குள்ள கலைஞர்களெல்லாம் ஒன்று கூடி , எதிர்க்குரல் கொடுத்த போதும், அங்குள்ள காவலர்கள் தமிழர்களை துரத்தி துரத்தி அடித்த போதும், தமிழ்நாடு பதிவு எண் கொண்ட அத்தனை வாகனங்களையும் அடித்து நொறுக்கியபோதும் வாய் திறக்காத நீங்கள் இன்று தமிழ்நாட்டிலேயே இருந்து கொண்டு தமிழனிடம் உறிஞ்சிய ரத்தத்தில், ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டு , எங்களையே வன்முறையாளர்கள் என்று பட்டம் சுமத்துகிறீர்கள் !

சீருடையில் இருந்தவரும் எங்கள் தமிழன் தான், எங்கோ கூட்டத்தில் அடையாளம் இல்லாத ஒருவன் , அல்லது , இந்த நிகழ்ச்சியை கறைபடுத்த நினைத்த ஒருவன், செய்த செயலுக்கு நாங்கள் வருந்துகிறோம் .

நீங்கள், எங்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம்.. நடந்த போராட்டம் தனி மனிதர்களுக்கானது அல்ல, என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டுச் சாப்பாட்டிற்கும் , உங்கள் வீட்டுக் குடிதண்ணீருக்கும் சேர்த்துத்தான் , எங்கள் வீரத்தமிழ் இளைஞர்கள் பலர், காவல்துறை நடத்திய அடிதடியில் ரத்தம் சிந்தினார்கள், என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.. பேசும்போது எதைப் பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேசுங்கள்.

இல்லையென்றால் , எம் தமிழ் மக்களால் நீங்கள் ஓரங்கட்டப்படுவீர்கள், அந்த நாளும் வெகு தூரத்தில் இல்லை என்பதையும் நீங்கள் நன்கு உணர்வீர்கள் என்பதையும் உங்களுக்கு சொல்லிக்கொள்ள நினைக்கிறேன்” இவ்வாறு பாரதிராஜா அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.