குடி மக்களை அழிக்க நினைக்கிறார்கள்- தங்கர் பச்சான்

எழுத்தாளரும் இயக்குநருமான தங்கர் பச்சான் அரசு மதுக்கடைகளைத் திறந்ததிற்கு எதிரான மிக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையின் ஒரு பகுதி இது,

“எது நடந்தாலும் எதைச் செய்தாலும் மக்கள் மறந்து விடுவார்கள்! அதனால் தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என அரசியல்வாதிகள் கணக்கு போடலாம். அதற்கும் மக்கள் உயிரோடு இருந்தால்தான் முடியும்.

ஒரு வேளை அவர்களின் கணக்கு இப்படியும் இருக்கலாம்! பதிவாகின்ற வாக்குகளின் எண்ணிக்கையின் வித்தியாசத்தில் தானே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்பதால் மக்கள் தேர்தலில் வாக்களிக்கத் தேவையில்லாமல் போனாலும் பரவாயில்லை. வேட்பாளர்களின் குடும்பம் மட்டுமே வாக்களித்து மக்களாட்சி எனும் பெயரில் குடி மக்களை அழித்து குடியாட்சி நடத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்களா? நிதி நெருக்கடியிலுள்ள தமிழகத்தை தனிப்பகை மறந்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தயவு செய்து மதுக்கடைகள் இயங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்! மக்களைக் காப்பாற்றுங்கள்!”