எவனவன் – விமர்சனம்

0

evanavan-review

RATING : 1.3/5

மொபைலில் ஜாலியாக வீடியோ எடுக்கிறேன் பேர்வழி அந்த வீடியோ பரவுவதால் ஏற்படுகிற பாதிப்பைச் சொல்லும் படமாக வந்திருப்பது தான் இந்த ”எவனவன்.”

தன் காதலியான நாயகி நயனா குளிப்பதை ஒருமுறை விளையாட்டாக வீடியோ எடுக்கிறார் நாயகன் அகில். அந்த விஷயம் தெரிந்ததும் அதை மொபைலிருந்து அழித்து விடச் சொல்கிறார் நயனா.

காதலி சொன்னதும் அப்போதைக்கு அழித்து விடும் அகில் பிறகு மீண்டும் அதை ‘ரெக்கவரி’ மென்பொருள் மூலமாக அந்த வீடியோவை எடுத்து தன் மொபைலில் வைத்துக் கொள்கிறார். பின்னர் ஆட்டோ ஒன்றில் பயணப்படும் போது அந்த மொபைலை தவற விடுகிறார் அகில். அது சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் சரண் கையில் கிடைக்கிறது. தொலைந்து போன மொபைலைத் தர வேண்டும் என்றால் நான் சொல்கிற சில வேலைகளை நீ செய்ய வேண்டும் என்கிறார் சரண். அதன்பிறகு பல திருப்பங்களுடன் நடக்கும் சம்பவங்கள் தான் கிளைமாக்ஸ்.

இன்றைக்கு செல்பி என்ற பெயரில் மொபைலில் போட்டோவோ, வீடியோவோ எடுக்காத மனிதர்களே இல்லை. அந்தளவுக்கு மக்கள் மத்தியில் அன்றாட பயன்பாடுகளில் ஒன்றாக அமைந்து விட்ட மொபைலைப் பயன்படுத்தி விளையாட்டாக வீடியோ எடுப்பதால் ஏற்படுகிற விபரீதத்தை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் நட்டி குமார். சொல்ல வந்த விஷயம் நல்லது தான் என்றாலும் அதை திரைக்கதையாக்கி சுவாரஷ்யமாக காட்சிப்படுத்தும் வேலையில் கோட்டை விட்டிருக்கிறார்.

படத்தில் ஆங்காங்கே பல திருப்பங்களை வைத்திருந்தவர் அதை இன்னும் ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கலாம். நாயகனாக நடித்திருக்கும் அகில் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் நயனாவின் நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். போலீஸ் அதிகாரிகளாக வரும் வின்செண்ட் அசோகன், சோனியா அகர்வால் ஆகியோரின் நடிப்பு மட்டுமே கை கொடுக்கிறது. டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், சரண், சந்தோஷ், சாக்‌ஷி ஆகியோர் சின்ன சின்ன கேரக்டர்களில் வந்தாலும் மனதில் நி்ன்று போகிறார்கள்.

தொழில்நுட்பங்கள் வெகுவாக வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் அது ஏற்படுத்தும் பிரச்சனைகளில் இருந்தும் நம்மை பாதுகாக்க விழிப்போடு இருப்பது அவசியமாகிறது.

நாம் விளையாட்டாகச் செய்யும் சில தவறுகள் பின்னால் பெரிய பிரச்சனைகளை உருவாக்கி விடும். அதிலும் நாம் பயன்படுத்தும் மொபைலை பயன்படுத்துகிற விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

இப்படி தொழில்நுட்ப விஷயத்தை படமாக்க நினைத்த இயக்குநர் படத்தில் இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப விஷயங்களிலும் கவனம் செலுத்தியிருந்தால் இந்த எவனவன் எல்லோர் மனதையும் கவர்ந்திருப்பான்.

எவனவன் – தடுமாறுபவன்

Leave A Reply