தினமும் 1 கோடி நஷ்டம்! – தியேட்டர் உரிமையாளர்களை கதற விட்ட தயாரிப்பாளர் சங்கம்

0

க்யூப், யூ.எப்.ஓ உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களின் அதிகப்படியான சேவைக்கட்டணங்களை குறைக்கக் கோரி தென்னிந்திய திரையுலக அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சு வார்த்தைகளில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

இதனால் ”மார்ச் 1-ம் தேதி முதல் எந்த புதுப்படங்களும் ரிலீஸ் ஆகாது” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த போராட்டம் இரண்டாவது வாரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நியாயமான போராட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஆதரவு தராமல், டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் பக்கம் சாய்ந்த தியேட்டர் உரிமையாளர்கள் தற்போது கதற ஆரம்பித்திருக்கிறார்கள்.

கடந்த 8 நாட்களாக புதுப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், ஏற்கனவே வெளியான முன்னணி நடிகர்களின் பழைய ஹிட் படங்களை திரையிட்டு வருகிறார்கள்.

ஆனால் என்னதான் ஹிட் படங்களாக இருந்தாலும் பழைய படங்களை தியேட்டர்களில் வந்து பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் தியேட்டர்களில் கூட்டமும் இல்லாமல் எதிர்பார்த்த வருமானமும் இல்லாமல் தமிழகத்திலுள்ள அத்தனை தியேட்டர்களும் களையிழந்து காணப்படுகின்றன.

அந்த வகையில் தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் இந்த போராட்டத்தினால் தியேட்டர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது 1 கோடி முதல் வருமான இழப்பு ஏற்பட்டிருப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை நிலவரம் இப்படியிருக்க, டிஜிட்டல் நிறுவனங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து தற்போது வருமானம் குறைய ஆரம்பித்ததும் தாங்களே இறங்கி வந்து விட்டதாக நினைத்து விடக்கூடாது என்று வருகிற மார்ச் 16-ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்த போராட்டத்தை தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி நடக்கும் போராட்டம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் படங்களை தயாரிக்கவில்லை என்றால் தியேட்டர்கள் இல்லை. அவர்கள் தருகின்ற படப்பெட்டிகளை வைத்துத்தான் தியேட்டர்களை நடத்தி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

அப்படிப்பட்ட தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த நியாயமான போராட்டத்துக்கு ஆதரவாக நிற்காமல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு லாபநோக்கத்தோடு தமிழ்த்திரையுலகில் காலடி எடுத்து வைத்து தயாரிப்பாளர்களின் பணத்தை பல வழிகளில் உறிஞ்சும் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு ஆதரவாக தியேட்டர் உரிமையாளர்கள் நிற்பது நியாயம் தானா? என்பதே ஒட்டுமொத்த திரையுலகினரின் வேதனையான கருத்தாக இருக்கிறது.

நன்றி மறப்பது நன்றன்று!

Leave A Reply

Your email address will not be published.