Banner After Header

கஜினிகாந்த் – விமர்சனம்

0

RATING – 3/5

நடித்தவர்கள் – ஆர்யா, சாயிசா, சதீஷ், ஆடுகளம் நரேன், உமா பத்மநாபன், சம்பத்குமார் மற்றும் பலர்

இசை – பாலமுரளி பாலு

ஒளிப்பதிவு -பல்லு

இயக்கம் – சன்தோஷ் பி. ஜெயக்குமார்

வகை – காமெடி, ரொமான்ஸ்

சென்சார் பரிந்துரை – ‘U’

கால அளவு – 2 மணி நேரம் 27 நிமிடங்கள்

‘அடல்ட் காமெடிப் படம்’ என்கிற லேபிளோடு ரிலீசான ‘ஹரஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை இயக்கிய சலசலப்பை உண்டுபண்ணிய சன் தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் க்ளீன் ‘யு’ சர்ட்டிபிகேட் படமாக வந்திருக்கும் படம் தான் இந்த ‘கஜினிகாந்த்’.

ரஜினி ரசிகரான ஆடுகளம் நரேன் ஞாபக மறதி குறைபாட்டோடு பிறக்கும் தனது மகன் ஆர்யாவுக்கு ‘கஜினிகாந்த்’ என்று பெயர் வைக்கிறார்.

அந்த ஞாபக மறதி நோயின் காரணமாகவே அவருக்கு யாரும் பெண் தர மறுக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர் நாயகி சாயிசாவை பார்த்த மாத்திரத்தில் இவரைத் தான் காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

அதற்காக தனக்கிருக்கும் ஞாபக மறதி நோயை மறைத்து சாயிஷாவை காதலிக்க தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் இந்த உண்மை தெரிய வர, காதல் ஜோடி பிரிகிறது.

பிரிந்த ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? ஆர்யாவின் ஞாபக மறதி நோய் குணமானதா? இல்லையா என்பதே மீதிக்கதை.

2015ல் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘பலே பலே மகாதிவோய்’ படத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அதை மறக்கடிக்கும் விதமாக இன்னொரு வேலை வந்ததும் ஞாபக மறதியால் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை மறந்து விடுகிற காட்சிகள் எல்லாமே காமெடிக் காட்சிகளாக தியேட்டரை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது.

சம்பத்தை சந்திக்க வரச் சொல்லி விட்டு மறந்து போவது, டூ வீலரில் வந்து தன்னுடைய காரை இடித்தவர்களுக்கு ஞாபக மறதியில் அவர் பணம் தருவது, திருப்பதி கோவிலுக்குப் போவதற்குப் பதிலாக பெங்களூருக்கு காரை திருப்பி விடுவது என ஞாபக மறதியால் அவர் படும் அவஸ்தைகளை காட்சிப்படுத்திய விதம் எல்லாமே கலகலப்புக்கு கியாரண்டி.

அந்த வகையில் தொடர்ந்து தமிழில் தோல்விப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த ஆர்யாவுக்கு இந்தப்படம் ஒரு மிகச்சிறந்த கம்பேக் படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சதீஷ், கருணாகரன் என்று இரண்டு காமெடியன்கள் படத்தில் இருந்தாலும் காமெடியில் ஸ்கோர் செய்வது சதீஷ் தான். அவருடைட டைமிங், பிளஸ் ரைமிங்க்கான வசனங்கள் நம்ம பல இடங்களில் மனசு விட்டு சிரிக்க வைக்கிறது.

சாயிஷா இன்னும் கொஞ்சம் சதை போட்டால் ஹன்ஷிகா மோத்வானி போல தமிழில் ஒரு ரவுண்ட் வரலாம்.

நீலிமா, ஆடுகளம் நரேன், உமா பத்பநாபன் என படத்தில் வருகிற அத்தனை பேரும் தங்கள் கேரக்டரை உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

என்னதான் இந்தப்படம் ஒரு ‘யு சர்ட்டிபிகேட்’ படம் என்றாலும் என் அடையாளம் ‘ஏ சர்ட்டிபிகேட்’ படங்கள் தான் என்பதை ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்தும் விதமாக படத்தில் ஆங்காங்கே தேவையில்லாத டபுள் மீனிங் வசனங்களையும் காமெடி என்ற பெயரில் வைத்திருக்கிறார் இயக்குனர் சன்தோஷ் பி. ஜெயக்குமார்.

இடைவேளைக்குப் பிறகான காட்சிகள் சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தை ஞாபகப்படுத்தினாலும், மனசு விட்டு சிரிக்க வைக்கக்கூடிய விறுவிறுப்பாக நகரும் காட்சிகள் அதையெல்லாம் நம்மை மறக்க வைத்து விடுகிறது.

சிரிக்க மறந்தவர்கள் மறக்காமல் குடும்பத்தோடு சென்று பார்த்து ரசிக்க வேண்டிய பக்கா காமெடிப் படம்!

Leave A Reply

Your email address will not be published.