ஹர ஹர மஹாதேவகி – விமர்சனம்

0

harahara

RATING : 3/5

நட்சத்திரங்கள் : கெளதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ், கருணாகரன், ராஜேந்திரன் மற்றும் பலர்

இயக்கம் : சந்தோஷ் பி. ஜெயக்குமார்

வகை : அடல்ட்\காமெடி

சென்சார் சர்ட்டிபிகேட் : ‘A’

கால அளவு : 2 மணி நேரம் 10 நிமிடங்கள்

மிழ்சினிமாவில்  ‘அடல்ட் காமெடி’ என்கிற புதுவகை ஜானருக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கும் படம் தான் இந்த ‘ஹர ஹர மஹாதேவகி.’

படம் சென்சார் செய்யப்பட்ட போதே எங்களுக்கு ‘A’ சர்ட்டிபிகேட் தான் வேண்டும் என்று கேட்டு வாங்கியிருக்கிறது படக்குழு. ஆனால் வழக்கமாக பல படங்களில் நாம் பார்க்கும் நாயகியின் நீச்சல் உடை குளியல், நாயகன் – நாயகியின் லிப் டூ லிப் கிஸ், பெட் ரூம் சீன் போன்ற முகம் சுளிக்க ஆபாசக் காட்சிகள் கூட படத்தில் ஆபாசக் காட்சிகள் இல்லை, மாறாக தியேட்டரே அதிர்ந்து சிரிக்கும்படியான நேரடியாக பேசப்படும் ஆபாச வசனங்கள் மட்டுமே குவிந்து கிடக்கின்றன.

சரி கதைக்குள் வருவோம்… படம் ஆரம்பித்த உடனேயே காதல் ஜோடியான நாயகன் கெளதம் கார்த்திக்கும், நிக்கி கல்ராணியும் காதல் முறிவு ஏற்பட்டு பிரிய நினைக்கிறார்கள். அதற்காக காதலித்த போது பரிமாறிக்கொண்ட பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்டு ரிசார்ட் ஒன்றுக்கு கெளதம் கார்த்திக்கை வரச்சொல்கிறார் நிக்கி கல்ராணி.

இதில் கெளதம் கார்த்திக் கொண்டு வரும் பேக்கைப் போலவே இன்னும் மூன்று பேக்குகள் வெடிகுண்டு, கள்ள நோட்டுகள், ஒரு கோடி ரூபாய் பணம் ஆகிவற்றோடு அதே ரிசார்ட்டில் சுற்றுகிறது. இந்த நான்கு பேக்குகளும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கை மாறி கை மாறிப் போக அதனால் ஏற்படுகிற குழப்பங்களும், அது எப்படி தீர்ந்தது என்பதையும் சொல்லுவது தான் கிளைமாக்ஸ்.

சில வருடங்களாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ‘ஹர ஹர மஹாதேவகி’ என்ற பெயரில் வைரலான ஆபாச ஆடியோவில் பேசப்பட்ட கருத்துகளை தான் படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தில் அறிமுகமான கெளதம் கார்த்திக் அதன்பிறகு சில படங்களில் ஹீரோவாக தலை காட்டினாலும் ரங்கூன், இவன் தந்திரன் என இப்போது தான் அடுத்தடுத்த ஹிட் படங்களைக் கொடுத்து வளர ஆரம்பித்திருக்கிறார். இந்த நேரத்தில் இப்படி ஒரு அடல்ட் காமெடிப்படம் தேவைதானா என்கிற கேள்வி படம் பார்க்கச் செல்லும் முன்பு நமக்கு எழுந்தாலும் நிக்கியுடன் நெருக்கமான காட்சிகளை தவிர்த்ததோடு ஆபாசமான வசனங்களையும் அளந்தே பேசி அதற்கு சிக்கல் வராதபடி உஷாராக நடித்திருக்கிறார்.

நாயகியாக வரும் நிக்கி கல்ராணி இன்னும் கொஞ்சம் வெயிட் போட்டால் ஷகிலா போல ஆகி விடுவார். அந்தளவுக்கு கொழுக் மொழுக் என்று ஒரு சுற்றுப் பெருத்துப் போயிருப்பவர் தனது குறும்புத் தனமான நடிப்பில் கவர்கிறார்.

காமெடிக்கு சதீஷ், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் ஆகியோர் இருந்தும் அவர்கள் கூட்டணியில் ரிசார்ட்டில் நடக்கும் கிளைமாக்ஸ் காட்சிகளில் மட்டுமே கொஞ்சம் சிரிக்க முடிகிறது. அரசியல்வாதியாக வரும் ரவிமரியாவும், அவரது அல்லக்கையாக வரும் நமோ நாராயணனும் பேசிக்கொள்ளும் அடுக்குமொழி வசனங்கள் செம…செம…

சீரியஸ் போலீசாக வரும் ஆர்.கே. சுரேஷ் முகத்தை திரையில் எப்போது காட்டினாலும் வில்லத்தனம் செய்பவர் போலவே காட்சியளிப்பதால் அவர் நல்லவரா? கெட்டவரா? என்பதை அவருடைய கடைசி சீனில் தான் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

பாலமுரளி பாலுவின் பின்னணி இசையும், செல்வகுமார் எஸ்.கே-வின் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவும் படத்தை ரசிக்க கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

குடும்பத்தோடு தியேட்டருக்கு போய் பார்க்க முடியாது. அப்படிச் சென்றால் சிரிக்க முடியாமல் நெளிய வைக்கும். ஆனால் கண்டிப்பாக உங்கள் மனசுக்குப் பிடித்த ஒரு ஆண் துணையுடனோ, அல்லது பெண் துணையுடனோ ஜோடியாகச் சென்றால் வாய் விட்டு சிரித்து ஒரு ஜாலியான படத்தைப் பார்த்த திருப்தியோடு வரலாம்.

அடல்ட் காமெடி என்ற ஜானர் படத்திலும் கூட டாஸ்மாக் கடைக்கு குடிக்க வருபவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதையும், அதை எதிர்த்து போராட்டம் செய்பவர்களை விரட்டி அடித்து கைது செய்வதையும் காட்சிப்படுத்தி தனக்கும் சமூக அக்கறை இருக்கிறது என்பதை காட்டியிருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இவ்வளவு சமூக அக்கறை உள்ளவரை ”அந்த மாதிரி” டைரக்டரா? என்கிற முத்திரை விழாமல் பார்த்துக் கொண்டால் சரி. ஏனென்றால் இதே இயக்குநரின் அடுத்த பட டைட்டில் என்ன தெரியுமா?

”இருட்டு அறையில் முரட்டு குத்து”

Leave A Reply