Banner After Header

இரவுக்கு ஆயிரம் கண்கள் – விமர்சனம்

0

RATING – 3/5

நடித்தவர்கள் – அருள்நிதி, மகிமா, அஜ்மல், வித்யா, ஆனந்தராஜ், சாயா சிங், சுஜா வருணி, ஜான் விஜய் மற்றும் பலர்

ஒளிப்பதிவு – அரவிந்த் சிங்

இசை – சாம் சி.எஸ்

இயக்கம் – மு. மாறன்

வகை – ஆக்‌ஷன், த்ரில்லர்

சென்சார் பரிந்துரை – ‘U/A’

கால அளவு – 2 மணி நேரம் 1 நிமிடம்

டத்துக்குப் படம் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் அருள்நிதியின் மற்றுமொரு வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் தான் இந்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’.

மழை பெய்யும் நள்ளிரவு.. சிட்டிக்குள் இருக்கும் பங்களா ஒன்றில் மர்மமான முறையில் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார்.

விசாரணையில் இறங்கும் போலீசாரிடம் கொலை நடந்த வீட்டிலிருந்து ஒருவன் வெளியேறிப் போனதை தான் பார்த்ததாகச் சொல்கிறார் எதிர் வீட்டுக்காரர்.

அதே நேரத்தில் சந்தேகத்தின் பேரில் போலீஸ் ஸ்டேஷன் வரும் ஹீரோ அருள்நிதியைப் பார்த்ததும் அதிர்ச்சியடையும் எதிர்வீட்டுக்காரர் ”இவன் தான் கொலை நடந்த வீட்டிலிருந்து வெளியே வந்தவன்” என்று கை காட்டுகிறார்.

அடுத்த நொடி போலீசிடமிருந்து தப்பிக்கிறார் அருள் நிதி.

கொலை செய்யப்பட்டது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையை செய்தது அருள்நிதி தானா? அவர் இல்லை என்றால் வேறு யார்? போன்ற கேள்விகளுக்கு ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திருப்பங்களோடு பதில் சொல்கிறது படம்.

தனக்கு என்ன கதைகள் செட்டாகுமோ அப்படிப்பட்ட கதைகளுக்குத் தான் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார் அருள்நிதி என்பதற்கு இந்தப்படமும் சிறந்த உதாரணம்.

சிரிப்பு, கோபம், வெறுப்பு, காதல், குழப்பம், டென்ஷன் என பல உணர்வுகளை எந்த சொதப்பலும் இல்லாமல் வெளிப்படுத்துவதில் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார்.

இவ்வளவு சீரியசான கதையில் சிரித்த முகமாக வருகிற மஹிமா அருள்நிதியுடனான அறிமுகக் காட்சியில் ‘வாவ்’ சொல்ல வைக்கிறார்.

அஜ்மல், சுஜா வரூணி, வித்யா பிரதீப், சாயா சிங், ஆனந்தராஜ், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், ஆடுகளம் முருகதாஸ் எனப் படத்தில் வருகிற சின்னச் சின்ன கேரக்டர்களில் கூட ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த முகங்களாக இருக்கிறார்கள்.

சீரியசாகவே நகரும் காட்சிகளில் தனக்கே உரிய ஸ்டைலில் சிரிக்க வைக்கிறார் ஆனந்தராஜ்.

இயக்குனர் மு. மாறன் ஒரு பத்திரிகையாளர் என்பதாலோ என்னவோ? பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, ராஜேஷ்குமார் என பிரபல எழுத்தாளர்களின் கிரைம் நாவல்களின் கலவையாக திரைக்கதையை நகர்த்திக் கொண்டு சென்றிருக்கிறார். அதற்கேற்றாற் போல படத்தில் வருகிற கேரக்டர்களுக்கும் பரத், கணேஷ், வசந்த் என நாவல்களில் வருகிற பெயர்களை வைத்து அழகு பார்த்திருக்கிறார்.

இரவு நேரக் காட்சிகளில் தியேட்டர் முழுக்க திகிலைப் பரப்புகிறது சாம் சி.எஸ் சின் பின்னணி இசை, அதற்கு கூடுதல் பலர் சேர்த்திருக்கிறது அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு!

அவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டலில் சிசிடிவி கேமராக்களின் பார்வையில் படாமல் ஹீரோயின் உடை மாற்றும் ரூமுக்குள் அஜ்மல் செல்ல முடிவது சாத்தியம் தானா? போன்ற பளிச்சென்று தெரியும் லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.

ரசிகர்களை சீட்டு நுனிக்கு வரவைக்கும் விறுவிறுப்பான க்ரைம் கதை.

அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட்டுகள், கதைக்குள் கதை, அந்தக் கதைக்குள் இன்னொரு கதை போன்றவை விறுவிறுப்பைக் குறைத்து குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருப்பது திரைக்கதையின் பலவீனம்.

ஆனால் இதெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று சொல்லும் கிரைம் த்ரில்லர் விரும்பிகளுக்கு ஏற்ற படம் தான் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’.

Leave A Reply

Your email address will not be published.