Banner After Header

இரும்புத்திரை – விமர்சனம்

0

RATING – 3.5/5

நடித்தவர்கள் – விஷால், சமந்தா, அர்ஜூன், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் மற்றும் பலர்

ஒளிப்பதிவு – ஜாஜ் சி. வில்லியம்ஸ்

இசை – யுவன் ஷங்கர் ராஜா

இயக்கம் – பி.எஸ்.மித்ரன்

வகை – ஆக்‌ஷன் – த்ரில்லர்

சென்சார் பரிந்துரை – ‘U’

கால அளவு – 2 மணி நேரம் 40 நிமிடங்கள்

ஒவ்வொருவரின் கையிலும் ஸ்மார்ன் போன் வந்த பிறகு போன் ஸ்மார்ட் ஆகி விட்டது. மக்கள் முட்டாளாகி விட்டார்கள்”.

எந்த ‘டிஜிட்டல் இந்தியா’வை மத்தியில் இருக்கும் மோடி அரசு பெருமையோடு மக்கள் மத்தியில் சொல்லிக் கொண்டிருக்கிறதோ அதே டிஜிட்டல் உலகத்தால் தான் ஒவ்வொரு தனி மனிதனின் சுதந்திரமும் பாதிக்கப்படுகிறது.

உங்களைப் பற்றிய ஒவ்வொரு ரகசியத் தகவலும் கோடிக்கணக்கில் விலை வைத்து விற்கப்படுகிறது, அதைப் பாதுகாப்பதற்குரிய கட்டமைப்பு இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இன்னும் வரவே இல்லை, இந்த நேரத்தில் ஆளும் அரசு எல்லோரையும் டிஜிட்டலுக்கு மாறுங்கள் என்று சொல்வது வேடிக்கையானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட என்கிற டிஜிட்டல் உலகத்தின் இன்னொரு பக்கத்தின் அதி தீவிர பயங்கரத்தை தோலுரித்துக் காட்டியிருக்கும் படம் தான் இந்த ‘இரும்புத்திரை’.

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ஆதார் கார்டு, பார் கோர்டு என எல்லா டிஜிட்டல் செளகரியங்களும் நம்மை ஒவ்வொரு நொடியும் கண்காணிக்கின்றன. நம்மைப் பற்றிய ரகசியத் தகவல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு முகமே தெரியாத சிலர் அதை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் நிழல் உலக தாதாக்கள் போல செயல்படுகிறார்கள். அதிலிருந்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென்று விழிப்புணர்வைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பி.எஸ். மித்ரன்.

ராணுவ மேஜரான விஷால் தன் தங்கையின் திருமணத்துக்காக 10 லட்சம் ரூபாய் பணத்தை புரட்டும் முயற்சியில் இறங்குகிறார். அதற்காக சொந்த வீட்டை விற்று அதன் மூலம் 4 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. மீதி 6 லட்சம் ரூபாய்க்காக பெர்சல் லோன் என வங்கிகள் படியேறி இறங்குகிறார். ராணுவ அதிகாரி என்பதால் எல்லா வங்கிகளும் பெர்சனல் லோன் தர மறுக்க, வங்கிக்கு அருகிலேயே ஒருவர் மூலமாக போலி ஆவணங்களை தயார் செய்து 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கி மொத்தம் 10 லட்சம் ரூபாயை அப்பா டெல்லி கணேஷின் அக்கவுண்ட்டில் போடுகிறார்.

அடுத்த நாள் திருமணச் செலவு ஒன்றுக்காக 5 ரூபாயை அக்கவுண்ட்டிலிருந்து எடுக்கச் செல்லும் போது தான் உங்கள் அக்கவுண்ட்டில் போதிய இருப்பு இல்லை என்று ஏ.டி.எம் மிஷின் தகவலைச் சொல்கிறது.

ஆமாம், அக்கவுண்ட்டிலிருக்கும் மொத்த பணமும் ஹேக்கர்களால் திருடப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடையும் விஷால் இழந்த பணத்தை மீட்கும் முயற்சியில் இறங்குகிறார். அப்போது தான் டிஜிட்டல் உலகில் நடக்கும் மோசடிகளும், அதற்கு மூளையாக கண்ணுக்குத் தெரியாமல் எங்கேயோ ஒளிந்து கொண்டு நோகாமல் பணத்தை அள்ளும் தலைவனைப் பற்றியும் தெரிய வருகிறது.

அவர் யார்? அங்கு நடக்கும் மோசடிகள் என்னென்ன என்பதை அம்பலத்துக்கு கொண்டு வருவதே கிளைமாக்ஸ்.

கார்களை மேலே பறக்க விடுவது, பத்து பதினைந்து வில்லன்களை மண்ணில் புரட்டியெடுப்பது போன்ற எந்த கமர்ஷியல் பில்டப்புகளும் இல்லாமல் செம ஸ்மார்ட் ஹீரோவாக இதில் விஷாலைப் பார்க்க முடிகிறது.

ராணுவ மேஜர் கேரக்டருக்கு ஏற்ற உசரமும், அர்ஜூன் உடனான சண்டைக்காட்சிகளில் வெளுத்து வாங்குவதுமாக படம் முழுக்க ஆக்ரோஷம் காட்டி விறுவிறுப்புக்கு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார் விஷால்.

சிரித்த முகத்தோடு, அமைதியான அழகுப் பெண்ணாக வருவாரோ? அதுபோலவே இதிலும் மனநல மருத்துவராகவும், விஷாலின் காதலியாகவும் வருகிறார் சமந்தா. சில நேரங்களில் எந்தத் திருப்புமுனையும் இல்லாமல் அமைந்த அவருடைய கேரக்டர் படத்துக்கு தேவையா என்கிற கேள்வியும் எழுகிறது.

எவ்வளவு கடன்களை வேண்டுமானாலும் வாங்க யோசிக்காத நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அப்பாவாக வரும் டெல்லி கணேஷ் சில இடங்களில் நெகிழ வைக்கிறார். சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். கூடவே வரும் ரோபோ சங்கர் சிரிப்புக்கு உத்தரவாதம்.

ஆக்‌ஷன் கிங்காக பல படங்களில் ஹீரோவாக வந்த அர்ஜூன் இதில் ஒயிட் டெவில் என்ற டிஜிட்டல் உலக தாதாவாக வருகிறார். மிரட்டலான, அதே சமயம் அசால்ட்டான நடிப்பும் படத்தின் விறுவிறுப்புக்கு கூடுதல் பலம்.

என்ன தான் டிஜிட்டல் உலகத்தைப் பற்றிச் சொல்லுகிறேன் என்று படமெடுக்கும் இயக்குனர்கள் ஏதாவது ஒரு இடத்திலாவது லாஜிக் மீறல் காட்சியை வைத்திருப்பார்கள். ஆனால் அந்த மாதிரியான குறைகள் இந்தப் படத்தின் ஒரு இடத்தில் கூட இல்லாமல் பார்த்திருக்கிறார் இயக்குனர் பி.எஸ் மித்ரன்.

ஸ்மார்ட்போன், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் உலகால் எதிர்காலத்தில் மக்களின் தனி மனித சுதந்திரம் எந்தளவுக்கு பாதிக்கப்படும் என்பது பாமரனும் புரியும் வண்ணம் மிக எளிதாக திரைக்கதை அமைத்து காட்சிப்படுத்தியிருக்கிறார்.

நம்முடைய ஒவ்வொரு தகவலும் குறைந்தது 30 லட்சம் பேரிடமாவது இருக்கும் என்கிற அதிர்ச்சித் தகவலை கிளைமாக்ஸில் சொல்கிற போது பேசாமல் நோக்கிய 1100 பேஸிக் போனுக்கு மாறி விடலாமோ என்று கூட படம் பார்ப்பவர்களை யோசிக்க வைத்து விடுகிறது.

அதுதான் இப்படத்தின் திரைக்கதையின் நேர்த்திக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

Leave A Reply

Your email address will not be published.