Banner After Header

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம் #IspadeRajavumIdhayaRaniyum

0

RATING 3/5

சிறு வயதிலேயே தாய்ப்பாசத்துக்காக ஏங்கி மனதளவில் பாதிக்கப்படும் ஒரு மகனின் பாசப்போராட்டமும், அதனால் ஏற்படுகிற விளைவுகள் அவனுடைய பருவக்காதலில் ஏற்படுத்தும் தாக்கமும் தான் இந்த ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’.

சிறுவயதிலேயே அம்மாவை பிரிந்து அப்பாவின் அரவணைப்பில் வளர்கிறார் ஹீரோ ஹரீஸ் கல்யாண். அம்மாவின் அன்புக்காக ஏங்கும் அவர் தனிமை விரும்பியாகவும், கோபக்காரராகவும் வலம் வருகிறார்.

ஒருநாள் பார்ட்டி ஒன்றில் ஹீரோயின் ஷில்பா மஞ்சுநாத்தை சந்திக்கிறார். முதலில் மோதல் பின்பு காதல் என்று தமிழ்சினிமாவின் வழக்கமான ட்ராக்கில் செல்பவர், அவள் மீது அதீத அன்பு வைக்கிறார். அதே சமயத்தில் அம்மாவைப் போலவே இவளும் தன்னை விட்டு பிரிந்து போய் விடுவாளோ என்றும் பயப்படுகிறார். இதனால் ஷில்பாவை திருமணத்துக்கு அவசரப்படுத்துகிறார்.

ஷில்பாவோ குடும்பப் பிரச்சனையை காரணம் காட்டி திருமணத்தை தள்ளிப் போடுகிறார். இதனால் பதட்டப்படும் ஹரீஸ் தன் அம்மாவைப் போலத்தான் இவளும் என்று நினைத்து அவர் மீதான கோபத்தை காதலி ஷில்பா மீது காட்ட ஆரம்பிக்கிறார்.

அதனால் ஏற்படும் பிரச்சனைகளில் பிரிவு ஏற்பட, பிரிந்த காதலியுடன் ஹரீஸ் கல்யான் மீண்டும் இணைந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ரொமான்ஸ் ஹீரோ லுக்கில் இருக்கிறார் ஹீரோ ஹரீஸ் கல்யாண். ஆனால் சண்டை என்று வரும் போது யார்? எந்த இடம்? என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் போட்டுத் துவைக்கிற காட்சிகளில் மாஸ் ஹீரோக்கள் லெவலுக்கு ஆக்‌ஷன் ஹீரோவாக மாறியிருக்கிறார். பிரிந்து போன அம்மாவை மீண்டும் பார்க்கும் போது கோபப்படுவதும், அவரிடம் கிடைக்காத அன்பை தன் காதலியிடம் எதிர்பார்ப்பதும், எங்கே அவள் தன்னை விட்டு பிரிந்து விடுவாளோ? என்று பதட்டப்படுகிற காட்சிகளிலும் நடிப்பில் ‘ஸ்கோர்’ செய்கிறார்.

விஜய் ஆண்டனியின் ‘காளி’ படத்தில் குடும்ப குத்து விளக்காக வந்த ஷில்பா மஞ்சுநாத் இதில் பெரும்பாலான காட்சிகளில் உரித்த கோழியாக வருகிறார். ஹரீஸ் கல்யாணுடன் கம்பேர் செய்யும் போது முத்தின கத்தரிக்காய் தான். ஆனாலும் அவருடனான நெருக்கமான காட்சிகளில் பத்து வயசு குறைந்தவர் போல புகுந்து விளையாடியிருக்கிறார்.

நடிப்பென்று வரும் போது தன் காதலனின் மனநிலையை முழுமையாகப் புரிந்து கொண்டு அவனுக்காக பல சந்தர்ப்பங்களில் பொறுமையாகச் செல்கிற போது, இப்படி உருக உருக நேசிக்கிற காதலி தனக்கு கிடைக்க மாட்டாரா? என்று ஆண்களை ஏங்க வைத்து விடுகிறார்.

பால சரவணன், மா கா பா ஆனந்த் இருவரும் காமெடிக்காக இறங்கி விடப்பட்டிருக்கிறார்கள். இருவரில் பால சரவணனின் டைமிங் வசனங்களில் லேசாக சிரிக்க முடிகிறது. அதுவும் சில இடங்களில் மட்டுமே.

இளைஞர்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் படத்தில் இடம்பெற்றிருந்தாலும் படத்தின் நீளமும், திரும்ப திரும்ப வரும் ஒரே மாதிரியான காட்சிகளும் அலுப்பைத் தருகின்றன.

கவின் ராஜின் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவும், சாம். சி. எஸ்சின் மிரட்டலான பின்னணி இசையும் காட்சிகளின் விறுவிறுப்புக்கு துணை நிற்கின்றன.

பெற்றோர்களுக்கிடையே ஏற்படும் பிரிவு அவர்கள் குழந்தைகளை மனதளவில் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவர்கள் பெரியவர்கள் ஆனதும்  அவர்களிடத்தில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக திரைக்கதையாக்கித் தந்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – எதிர்பார்ப்பு

Leave A Reply

Your email address will not be published.