இவன் தந்திரன் – விமர்சனம்

0

Ivan-thanthiran

RATING 3.5/5

சில வாரங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒரு ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கும், அந்தப் படிப்பை சொல்லித்தரும் ஆசியர்களும் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் இன்ஜினியரிங் படிப்பின் தரமும், அதைப்படித்தவர்களுக்கு எந்தளவுக்கு வேலைக்கு உத்திரவாதம் இருக்கிறது என்பதைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

அதில் பேசிய பெரும்பாலான மாணவர்கள் படித்த படிப்புக்கு சரியான வேலை கிடைக்காமல் ஏதோ கிடைத்த வேலையைச் செய்வதாகச் சொன்னார்கள். இன்னும் சிலரோ நான் சிவில் இன்ஜினியரிங் படித்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு என்னிடம் ஒரு கட்டிடத்தை கட்டுகிற வேலையைக் கொடுத்தால் அதைச் செய்யவே முடியாது என்றார். இன்னொருவரோ நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருக்கிறேன். இன்றைக்கு ஒரு மின் விசிறியைக் கழற்றி கூட மாற்றத் தெரியாது என்றார்.

இன்றைக்கு இன்ஜினியரிங் படிக்கின்ற அத்தனை மாணவர்களின் நிலையும் இப்படிப்பட்ட பரிதாபத்துக்குரியவைகளாகத்தான் இருக்கின்றன. ஆனால் இதுபோன்ற வேலைவாய்ப்பில்லாத அல்லது அரைகுறையாகச் சொல்லித் தருகின்ற படிப்புகளைப் படிக்க மாணவர்களும், இளைஞர்களும் லட்சக்கணக்கில் கட்டணம் என்ற பெயரில் கல்லூரிகளுக்கு கட்ட வேண்டியிருக்கிறது.

அப்படி மாணவர்கள் படிப்புக்காக லட்சக்கணக்கில் கட்டுகிற பணமெல்லாம் எங்கே? யாருக்கு செல்கிறது? என்பதைப்பற்றி படம் துணிச்சலாகப் பேசியிருக்கும் படம் தான் ”இவன் தந்திரன்” .

கதையின்படி ஹீரோ கெளதம் கார்த்திக்கும், அவரது நண்பரான ஆர்.ஜே.பாலாஜியும் இன்ஜினியரிங் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு ரிச்சி தெருவில் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் கடையை நடத்தி வருகிறார்கள்.

அவர்களிடம் அமைச்சர் சூப்பர் சுப்பராயன் வீட்டில் சிசி டிவி கேமராவைப் பொருத்தும் வேலை வருகிறது. வேலையைச் செய்து முடிக்கிற கெளதம் கார்த்திக்கிடம் அதற்குரிய கூலியை கொடுக்காமல், அவர் வைத்திருந்த டூவீலரையும் பிடுங்கி வைத்துக் கொண்டு ஏமாற்றுகிறார் அமைச்சரின் மைத்துனரான ஸ்டன் சில்வா.

கெளதமும் அமைச்சரை நேரில் சந்தித்துக் கூட செய்த வேலைக்கு கூலியைக் கேட்டு பார்க்கிறார். அவரும் ”கோவிந்தா… கோவிந்தா..” என்கிறார்.

இதனால் ஆத்திரமடையும் கெளதம் கார்த்திக் தன்னை ஏமாற்றிய அமைச்சருக்கும், அவரது மைத்துனருக்கும் எப்படியாவது பாடம் புகட்ட வேண்டும் என்கிற வெறியோடு இருக்கிறார். அதற்காக அவர் செய்கிற ”தொழில்நுட்ப தந்திரம்” தான் கிளைமாக்ஸ்.

மணிரத்னத்தின் உதவியாளராக அறியப்பட்ட இயக்குநர் ஆர். கண்ணனின் இயக்கத்தில் இதற்கு முன்பு வந்த படங்கள் எல்லாமே எதிர்பார்த்த வெற்றியைத் தராமல் தோல்வியைத் தழுவியவை. அதனாலேயே இந்தப் படத்தின் மீதான பார்த்து ரசிக்கிற நம்பிக்கையும் குறைவாகவே இருந்தது. ஆனால் படத்தை பார்த்து விட்டு வெளியில் வந்தபிறகு உண்மையிலேயே இந்தப்படம் ஆர். கண்ணன் இயக்கிய படம் தானா? என்கிற ஆச்சரியம் எழுந்ததை தவிர்க்க முடியவில்லை. அந்தளவுக்கு விறுவிறுப்பான, நேர்த்தியான திரைக்கதை அமைத்து ரங்கூன் வெற்றிக்குப் பிறகு கெளதம் கார்த்திக் ஹிட் லிஸ்ட்டில் இரண்டாவது வெற்றியை உறுதி செய்திருக்கிறார்.

தொடர் தோல்விகளையே கொடுத்துக் கொண்டிருந்த கெளதம் கார்த்திக் சினிமா கேரியர் ரங்கூனுக்குப் பிறகு வேகம் எடுக்க ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஓவர் டோஸ் இல்லாத கேரக்டருக்கு தேவையான நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் கெளதம் கார்த்திக். கடல் படத்தில் பார்த்த கெளதமா இது என்று வட சென்னையின் லோக்கலான பாஷையை எந்தவித தடங்களும் இல்லாமல் பேசி ரங்கூனில் ரசிக்க வைத்தவர் இதில் நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் அடுத்த லெவலுக்குச் சென்றிருக்கிறார். இனி இதுபோன்ற சமூக அக்கறையுள்ள கமர்ஷியல் படங்களைத் தேர்ந்தெடுத்தால் அப்பா கார்த்திக்கைப் போல ஒரு ரவுண்ட் வர வாய்ப்பிருக்கிறது. வெல்டன் ப்ரோ!

கல்லூரி மாணவியாக வரும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் கவர்ச்சிக்கு துளியும் இடம் கொடுக்காமல் ஒரு கல்லூரி மாணவி எப்படியிருப்பாரோ? எப்படி நடந்து கொள்வாரோ? அதற்குரிய நடிப்பை எந்த வித எல்லை மீறலும் இல்லாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். கை நிறையை சம்பளம் தருகிற வேலை கிடைத்தாலும் கெளதம் மீதான காதல் போதையில் இண்டர்வியூவில் கேட்கிற கேள்விகளுக்கு அவர் சொல்கிற பதில்கள் ஹைக்கூ க்யூட்!

கெளதம் கார்த்திக்கின் நண்பனாக வந்தாலும் கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோ ரேஞ்சில் தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது ஆர்.ஜே.பாலாஜியின் கேரக்டர். ஆனாலும் எந்த இடத்திலும் ஹீரோ இடத்தை மீறாமல் ஹேராம், பீட்டா, ஹர்பஜன் சிங், அம்பானி என தனக்கே உரிய ஸ்டைலில் அவர் அடிக்கும் பஞ்ச் வசனங்கள் வாய் விட்டு சிரிக்க உத்தரவாதம் தருகின்றன. அதிலும் ஆட்டோ டிரைவர்களின் கட்டண கொள்ளையை அழகாக சுட்டிக்காட்டிப் பேசுகிற வசனம் ஆட்டோ ஓட்டுனர்களை சிந்திக்க வைத்து தியேட்டரில் கைதட்டல்களை அள்ளுகிறது.

தேவையான இடங்களில் பாடல்கள் வைத்தால் போதும் என்கிற இயக்குநரின் முடிவு இப்படத்தில் மிகச் சரியாக அமைந்திருக்கிறது. பாடல் வந்து இம்சிக்குமோ? என்று நாம் நினைக்கிற இடங்களில் பாடல்களை தவிர்த்திருப்பது பாராட்டுக்குரியது.

படத்தில் பார்த்தவுடன் பயமுறுத்தி நடிப்பால் நம்மை ஈர்ப்பவர் வில்லனாக வரும் சூப்பர் சுப்பராயன் தான். பணம் சம்பாதிக்க அரசியல்வாதிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு அவருடைய கேரக்டரே மிகப்பெரிய சாட்சி. அவரும் தன்னுடைய மிரட்டலான நடிப்பால் அந்த அரசியல்வாதி கேரக்டரை தூக்கி நிறுத்தியிருக்கிறார்.

சூப்பர் சுப்பராயனின் மைத்துனராக வரும் ஸ்டண்ட் சில்வா சில காட்சிகளே வந்து விட்டுப் போனாலும் அசால்ட்டான நடிப்பு.

சாலையில் பொருத்தப்படும் சிறிய கருவி, கடந்து செல்லும் வாகனங்களையெல்லாம் ஸ்கேன் செய்வதாக காட்டுவது, பழுதடைந்த பகுதியை மட்டும் தனியாக கழற்றி மாற்றிக் கொள்ளும்படியான மொபைலை கண்டுபிடிப்பது போன்ற டெக்னாலஜி சீன்கள் சந்தேகத்தை கிளப்பினாலும், இப்படியெல்லாம் தொழில்நுட்பம் வளர்ந்தால் எப்படியிருக்கும்? என்கிற எதிர்ப்பார்ப்பும் எழுகிறது.

பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவும், எஸ்.தமனின் இரண்டு இனிய பாடல்களும், காதுகளை சேதப்படுத்தாத அளவான எஸ்.தமனின் பின்னணி இசையும் படத்துக்கு கூடுதல் பலம்.

காலச்சூழலுக்கு ஏற்ப கதையை எழுதி, அதற்கு வி்றுவிறுப்பான திரைக்கதை அமைத்து ”மூணாம் கிளாஸ் படிச்ச நீயெல்லாம் கோடிகோடியா சம்பாதிக்கிறப்போ, இன்ஜினியரிங் படிச்ச நாங்கெல்லாம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறதுக்கு காலம் முழுக்க கஷ்டப்படணுமா? போன்ற நிஜத்தைப் பேசும் வசனங்களுமாக இதற்குப் பிறகு இப்படித்தான் கதை நகரும் என்று எளிதில் யூகிக்க முடியாத வண்ணம் ஒரு வெற்றிப்படத்துக்குரிய அத்தனை அம்சங்களுடனும் படத்தை இயக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.

இவன் ‘மந்திரன்’

Leave A Reply

Your email address will not be published.