Banner After Header

ஜோக்கர் – விமர்சனம்

0

joker-2

RATING : 4/5

ரு பத்திரிகையாளராக தனது எழுத்துகளில் சமூக சீர்திருந்த சிந்தனைகளை துணிச்சலாக வெளிப்படுத்தி வரும் ராஜூ முருகனின் பேனாவிலிருந்து ‘குக்கூ’ படத்துக்குப் பிறகு  பெரிய திரையில் வந்திருக்கும் இன்னொரு துணிச்சலான படம் தான் இந்த ‘ஜோக்கர்.’

ஜனாதிபதி, பிரதமர், தமிழகத்தின் முன்னாள், இந்நாள் முதல்வர்கள், அரசு எந்திரங்கள், அதிகாரிகள் என யாரையும் விட்டு வைக்கவில்லை. எல்லோரையும் சகட்டு மேனிக்கு கேள்வி கேட்கிறார். அந்த துணிச்சலுக்கு ஒரு பிக் சல்யூட்!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் உள்ள குரு சோமசுந்தரம் தன்னையே ஒரு ஜனாதிபதியாக நினைத்துக் கொண்டு கூடவே காயத்ரி கிருஷ்ணாவையும், ராமசாமியையும் துணைக்கு வைத்துக் கொண்டு அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையின் அட்டூழியங்களையும், விதி மீறல்களையும் கேள்வி கேட்கிறார்.

அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாயல் திணறும் அரசாங்க ஊழியர்களும், அதிகார வர்க்கத்தினரும் கை கோர்த்துக் கொண்டு எப்படி அந்த எளியவனின் குரலை அடக்கி ஒடுக்குகிறார்கள் என்பதே கிளைமாக்ஸ்.

இந்த நாட்டில் எளியவனின் குரல் வளை எப்போதுமே நசுக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. அரசாங்கம் செய்யும் தில்லு முல்லுகளை எதிர்த்து கேள்வி கேட்டால் இந்த சமூகமே அவனை பைத்தியக்காரன் என்று பட்டம் கட்டுகிறது.

அடப்பாவிகளா…? பைத்தியக்காரன் அவன் இல்லையடா..? எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல் தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று போகிறதே ஒரு பெருங்கூட்டம், அந்தக் கூட்டம் தானடா பைத்தியம் என்கிற ராமசாமி கிளைமாக்ஸில் பேசுகிற வசனம் நியாயமானது.

அதை மக்கள் தங்கள் மரமண்டையில் ஏற்றிக்கொண்டால் அவர்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கும் நல்லது.

‘மன்னர் மன்னர்’ என்கிற கதாபாத்திரப் பெயரில் கதையின் நாயகனாக வருகிறார் சோம சுந்தரம். அறிமுக காட்சியே டாய்லெட்டில் ஆரம்பிக்கிறது. தமிழ்சினிமாவில் இப்படி ஒரு அறிமுகத்தை இதுவரை எந்த ஹீரோவிடமும் ரசிகர்கள் பார்த்திருக்க முடியாது.

எப்போதுமே சோகமே உருவான முகத்தோடு வருகிறார் நாயகிகளில் ஒருவரான ரம்யா பாண்டியன். கக்கூஸ் கட்ட வக்கில்ல, உனக்கெல்லாம் எதுக்கு கல்யாணம் என்பது தான் சோம சுந்தரத்தைப் பார்த்து அவர் கேட்கும் கேள்வி.

பின்னர் அவளை துணைவியாக்கிக் கொள்வதற்காகவே குரு சோம சுந்தரம் கழிப்பறையை கட்ட ஆரம்பிக்க, அரசாங்கம் தரும் அந்த திட்டத்திலும் அதிகாரிகள் ஊழல் செய்து ரம்யா பாண்டியன் உயிர் போக காரணமாகிறது.

குடியாலேயே இறந்து போகிற கணவனை இழந்த பிறகு போராளியாகிறார் காயத்ரி கிருஷ்ணா. ”மதுவால் இறந்தவர் இங்கே! மதுக்கடை திறந்தவர் எங்கே?” என்கிற கேள்வியோடு அவரும் குரு சோமசுந்தரத்துடன் சேர்ந்து போராட ஆரம்பித்து விடுகிறார்.

மிலிட்டரியாக வரும் பவா செல்லத்துரை மனதில் நிற்காமல் போவதில்லை. அவர் மட்டுமா ஜனாதிபதியாக அச்சு அசல் பிரணாப் முகர்ஜி போல வருபவர், ஜனாதிபதி போற வரைக்கும் வீட்டுக்குள்ளேயே இரு என்றும் சொல்லும் காக்கி என திரையில் தெரிகிற அத்தனை பேரையும் உள்ளது உள்ளபடியே காட்டியிருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன்.

ஒரு கிராமத்தை அதன் இயற்கைத்தனம் மாறாமல் பார்த்ததுண்டா..? இந்தப் படத்தில் அதை நம் கண்முன்னே அப்படியே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன். அதற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது கலை இயக்குநரின் கை வண்ணமும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் மனசை ஊடுருவிச் செல்லும் மெல்லிய இசையும்!

”உங்களை சகாயம் பண்ணச் சொல்லல… சகாயம் மாதிரி நடந்துக்கங்கன்னு தான் சொல்றோம்…” ”கக்கூஸ் கட்டுறதுல கூட ஊழல் பண்றீங்க..? உங்ககிட்ட எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?” ”வானத்துல பறக்கிற ஹெலிகாப்டரைப் பார்த்து கும்பிடாதீங்கன்னு சொன்னேன். அரைநாள் உண்ணாவிரதத்துக்கு ஏர்கூலர் கொண்டு போறீங்களேன்னு கேட்டேன்.” ”நகைக் கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?” என படத்தில் வருகிற அத்தனை வசனங்களும் சமகால அரசியலை துணிந்து பேசுகிறது.

அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பவனை இந்த சமூகம் பைத்தியக்காரன் என்று பட்டம் கட்டும், அவனுக்கு மண்ணு லாரியில் மரணம் தான் பரிசாகக் கிடைக்கும் என்கிற காட்சியோடு முடிக்கிற இயக்குநர் ராஜூ முருகன் ”நாளை ஒரு போராட்டம் நீயும் வா தோழா” என்கிற டைட்டில் கார்டில் அழைப்பது பெரிய முரணாக இருக்கிறது. அது போராட முன் வருபவர்களை பயமுறுத்துவது போலாகாதா?

இருந்தாலும் ‘ஜோக்கர்’ போன்ற படங்கள் அடுத்தடுத்து இன்னும் கூட அதன் இயல்பு மாறாமல் வருமேயானால் இந்த சமூகம் மாற்றம் என்கிற ஒன்றை காலப்போக்கில் பெற்றுத்தானே ஆக வேண்டும்.

ஜோக்கர் – சீரியஸாக சிந்திக்க வைப்பவன்!

Leave A Reply

Your email address will not be published.