க/பெ ரணசிங்கம்- விமர்சனம்

அறிமுகத்திலே தெறிமுகம் காட்டும் இயக்குநர்கள் வெகுசிலர் தான். அந்த ஒருசிலரில் ஒருவராக இணைந்துள்ளார் இயக்குநர் விருமாண்டி. கணவனுக்காக ஒரு சாமானியப் பெண் எடுக்கும் சக்தி மிகுந்த போராட்டமே க/பெ ரணசிங்கம் படத்தின் கதை. அதை மிக வலிமையான வசனங்களோடு படமாக்கி இருக்கிறார் இயக்குநர். இதில் வசனங்களைத் துணையாகக் கொண்டது போலவே திரைக்கதையை இன்னும் உறுதுணையாகப் பிடித்திருந்தால் படத்தில் ரணம் இன்னும் தெறித்திருக்கும். மேலும் சிலபல லாஜிக் மிஸ்டேக்ஸும் டன் கணக்கில் இருக்கின்றன. ஆனாலும் அரசு அதிகாரிகளாலும் அரசியல் வியாதிகளாலும் ஒரு சாமானியப் பெண் தன் உரிமையைப் பெற எப்படியெல்லாம் பரிதவிக்க வேண்டியதிருக்கிறது என்பதைச் சொல்லி இருப்பதற்காகப் படத்தைக் கொண்டாடியே ஆகவேண்டும்.

Related Posts
1 of 3

நடிப்பில் வரிசைப்படுத்தினால் விஜய்சேதுபதி இரண்டாம் நிலையில் நிற்க, ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடத்தைப் பிடிக்கிறார். வலிபட்ட பெண்ணாகவும் வலிமைமிக்க நாச்சியாகவும் மாறும் இடங்களில் ஐஸ் வெரி நைஸ்! விஜய்சேதுபதி இனி தன் உடம்பிலும் வழக்கமான பாடிலாங்வேஜ் நடிப்பையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும். சில இடங்களில் டல் அடிக்கிறார். பாண்டே கேரக்டர் நேர்மறையாக இருப்பதும், படத்திற்கு நேர்மை சேர்ப்பதாக இருக்கிறது. முனிஷ்காந்த், பூ ராமு அபிஷேக் உள்பட நடிகர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

படத்தில் வசனம் பெருந்துணை செய்துள்ளது. அப்படியே ஜிப்ரானின் இசையும், ஏகாம்பரத்தின் கேமராவும்.

பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு டிராமா காட்சியெல்லாம் தேவையா? பாலம் காட்சி போலவே படத்தின் நீளமும் ரொம்ப நீளம். படத்தில் கத்தரி போல வசனங்கள் ஈர்த்தாலும் படத்திற்கு கொஞ்சம் கத்தரிப் போட்டிருந்தால் ரணசிங்கம் இன்னும் ஈர்த்திருப்பார்!