Banner After Header

காளி – விமர்சனம்

0

RATING – 2.8/5

நடித்தவர்கள் – விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத், நாசர், வேல ராமமூர்த்தி, மதூசூதனன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர்

ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம். நாதன்

இசை – விஜய் ஆண்டனி

இயக்கம் – கிருத்திகா உதயநிதி

வகை – ஆக்‌ஷன் – நாடகம்

சென்சார் பரிந்துரை – ‘U’

கால அளவு – 2 மணி நேரம் 13 நிமிடங்கள்

‘பிச்சைக்காரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தான் நடிக்கும் எல்லாப் படங்களிலும் அம்மா செண்டிமெண்ட் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார் விஜய் ஆண்டனி.

அந்த வகையில் ஐந்து மாதங்களுக்கு முன்பு ரிலீசான ‘அண்ணாதுரை’ படத்துக்குப் பிறகு மீண்டும் அதே அம்மா செண்டிமெண்ட்டுடன் கூடிய வித்தியாசமான கதைக்களத்தோடு ரிலீசாகியிருக்கும் படம் தான் இந்த ‘காளி’.

அமெரிக்காவில் டாக்டராக இருக்கும் விஜய் ஆண்டனிக்கு பாம்பு ஒன்றும், ஒரு மாடு முட்ட வருவது போலவும் அடிக்கடி கனவு வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் தனக்கு ஏன் இப்படி ஒரு கனவு வருகிறது? என்று குழப்பத்தில் இருக்கும் போது அவரது அம்மாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. ஒரு கிட்னியைக் கொடுத்தால் அம்மாவை காப்பாற்றி விடலாம் என்று டாக்டர்கள் சொல்ல, பெத்த அம்மாவுக்கு அவருடைய இரண்டு கிட்னிகளில் ஒன்றைத் தர முன் வருகிறார்.

அப்போதுதான் உன்னுடைய கிட்னி அம்மாவுக்கு சேராது என்கிறார். ஏனென்றால் நீ நாங்கள் பெற்ற பிள்ளை இல்லை . தத்தெடுத்த பிள்ளை என்கிற உண்மையைச் சொல்கிறார் அவரது அப்பா. அம்மாவை குணப்படுத்திய கையோடு வீட்டுக்கு திரும்பும் விஜய் ஆண்டனி அடிக்கடி தனக்கு வரும் கனவுக்கு விடை தேட தன்னுடைய உண்மையான அம்மா, அப்பாவைத் தேடி அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டில் கனவுக்கரை என்ற கிராமத்துக்கு வருகிறார்.

வந்த இடத்தில் அவருடைய அம்மாவும், அப்பாவும் கிடைத்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

வெறும் ஹீரோவாக மட்டும் படம் முழுக்க வந்து போகாமல் அம்மாவைத் தேடி வந்த இடத்தில் தங்களது ப்ளாஷ்பேக் சொல்லும் மதூசூதனன், நாசர், வேல ராமமூர்த்தி போன்ற மற்றவர்களின் கேரக்டர்களையும் தானே ஏற்று நடித்திருப்பது ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும்.

‘நான்’, ‘சலீம்’ என தனது ஆரம்ப கால படங்களில் வெரைட்டி காட்டிய விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன்’ படத்துக்குப் பிறகு ஒவ்வொரு படத்திலும் அம்மா செண்டிமெண்ட் என்கிற ஒரே வட்டத்துக்குள் தன்னை அடைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டாரோ என்கிற சந்தேகம் எழுகிறது.

ஐந்து மாதங்களுக்கு முன்பு ரிலீசான ‘அண்ணாதுரை’ படத்திலும் தொடர்ந்த அம்மா செண்டிமெண்ட் இப்போது இந்தப் படத்திலும் தொடர்கிறது. ரூட்டை மாற்றுங்கள் நண்பா.

படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என நான்கு நாயகிகள். குறும்புத்தனமான நடிப்பில் அஞ்சலி தன் பங்குக்கு கவர்ந்தால், காதல் காட்சிகளில் கிறங்கடிக்கிறார் கல்லூரி மாணவியாக வரும் அம்ரிதா. ஏழைப் பெண்ணாக வரும் சுனேனா, கிராமத்துப் பெண்ணாக வரும் ஷில்பா மஞ்சுநாத்தும் தங்கள் பங்குக்கு நடிப்பில் சிக்சர் அடிக்கிறார்கள்.

மதுசூதனன், நாசர், வேல ராமமூர்த்தி, ஆர்.கே. சுரேஷ், சர்ச் பாதராக வரும் ஜெயப்பிரகாஷ் என சீனியர் நடிகர்கள் அதே அக்மார்க் நடிப்பில் கவர்கிறார்கள்.

விஜய் ஆண்டனியின் கிராமத்து நண்பனாக வரும் யோகி பாபு படம் முழுக்க ஹீரோவுடனே வருகிறார். வருகிற காட்சிகளில் எல்லாம் தனக்கே உரிய டைமிங் வசனங்களால் தியேட்டரை சிரிக்க வைக்கிறார்.

ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவும், சக்தி சரவணன் சண்டைப் பயிற்சியும் படத்தின் விறுவிறுப்புக்கு துணை நிற்கின்றன.

விஜய் ஆண்டனி இசையில் ‘அரும்பே…’, ‘நூறாய்…’, ‘அடி வயிற்றில்…’ என எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட்!

படத்தை இயக்கியிருப்பவர் கிருத்திகா உதயநிதி.

கதைக்களம் வித்தியாசமாக இருந்தாலும், பெரும்பாலான காட்சிகள் 80, 90களில் வந்த பல பழைய படங்களை ஞாபகப்படுத்துகிறது. குடிசை வீடுகள் தீப்பிடித்து எறியும் போது விஜய் ஆண்டனி உள்ளே சென்று பெண்களையும், குழந்தைகளையும் காப்பாற்றுவது மாதிரியான காலாவதியான காட்சிகளை எல்லாம் தவிர்த்து விட்டு புதிதாக யோசித்திருக்கலாம்.

மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்ப்போம், சாதி, மதங்களைக் களைவோம் போன்ற சமூகக் கருத்துகளோடு, கூடவே திரைக்கதையையும், காட்சிகளையும் அழுத்தமாகக் தந்திருக்கலாம்.

இருந்தாலும் ‘வணக்கம் சென்னை’ படத்தை ஒப்பிடும்போது இயக்குனராக அடுத்த லெவலுக்கு சென்றிருக்கிறார் கிருத்திகா உதயநிதி.

Leave A Reply

Your email address will not be published.