Banner After Header

விஜய் ஆண்டனி கதை கேட்கும் ரகசியத்தை போட்டுடைத்த கிருத்திகா உதயநிதி!

0

‘அண்ணாதுரை’ படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்தை ரிலீஸ் செய்யத் தயாராகி விட்டார் நடிகர் விஜய் ஆண்டனி.

உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இப்படத்துக்கு ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘காளி’ என்ற டைட்டிலை வைத்திருக்கிறார்கள். இதில் விஜய் ஆண்டனிக்கு அஞ்சலி, சுனேனா, அம்ரிதா, சில்பா மஞ்சுநாத் என நான்கு ஹீரோயின்கள்.

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி பேசியதாவது..

”கிருத்திகா கல்லூரியில் எனக்கு ஜூனியர், பெரிய இடத்தில் இருந்தாலும் அன்று நான் அவரைப் பார்த்தபோது எப்படி எளிமையாக இருந்தாரோ அதேபோலவே இன்றும் மிகவும் எளிமையானவராக இருக்கிறார். இந்தப் படத்தில் நான்கு தோற்றங்களில் வருகிறேன்.

பெண்களுக்கு நிறைய திறமைகள் இருக்கின்றன. அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால் பெரிய சாதனைகளை நிகழ்த்துவார்கள். அதற்கு உதாரணமாக கிருத்திகா இருக்கிறார். அவர் என்னிடம் சொன்ன மூன்று கதைகள் மிகவும் பிடித்தது. இறுதியில் காளி கதையை தேர்வு செய்து நடித்தேன். எனக்கு அவர் சொன்ன முதல் கதையும் சிறந்த கதை தான். ஆனால் அது எனக்கென்று உள்ள வரையறைக்குள் இல்லாததால் அந்த படத்தை பண்ணவில்லை. அந்த கதையில் வேறு நடிகர்கள் யாராவது நடிக்கலாம்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்டும் என்னுடைய ஜூனியர் தான். எல்லா வேலையையும் தன் தோளில் போட்டுக் கொண்டு செய்தார். கலை இயக்குனர் சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி ரெண்டு பேருமே என் குடும்பத்தில் ஒருவராக தான் இருக்கிறார்கள். நான் ஒரு சூப்பர் ஹீரோ கிடையாது. சண்டைக் காட்சிகளில் பாதிக்கு மேல் எனக்கு டூப்பாக ஒருவர் சண்டை போட்டிருக்கிறார். அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர் அண்ணாமலை மறைவிற்கு பிறகு அந்த இடத்தை பாடலாசியர் அருண் பாரதி நிரப்பி வருகிறார். அடுத்து ‘திமிர் பிடிச்சவன்’ படம் ரிலீசாகப் போகிறது. அதற்கடுத்து ‘கொலைகாரன்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறேன் என்றார்.

பின்னர் பேசிய கிருத்திகா உதயநிதி விஜய் ஆண்டனியிடம் கதை சொல்லப் போன சுவாரஷ்யத்தை பகிர்ந்து கொண்டார்…

பெண்கள் தினத்தில் தான் மேடை முழுக்க பெண்கள் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இன்று இந்த மேடையில் அப்படி அமைய காரணம் விஜய் ஆண்டனி. அவருக்கு கதை சொல்ல நேரம் கேட்டேன். ஆனால், அவர் என் வீட்டுக்கே வந்து கதையை கேட்டார்.

எதற்காக அவர் என்னைத் தேடி வந்து கதை கேட்டார்? என்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் தெரிந்து கொண்டேன். ஆமாம், ஒருவேளை இயக்குனர்கள் சொல்லும் கதை பிடிக்கவில்லை என்றால் அவர்கள் வீட்டிலேயே சொல்லி விட்டால் அவர்கள் மனசு வருத்தப்படாது. மாறாக அவர்கள் என் வீட்டைத் தேடி வந்து கதை சொல்லி ஒருவேளை அது எனக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் மனசு வருத்தப்படும், அதற்காகத்தான் எந்த இயக்குனராக இருந்தாலும் அவர்களைத் தேடிப்போய் கதை கேட்டு ஓ.கே செய்யும் பழக்கத்தை வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி என்றார்.

தான் கதை கேட்கும் ரகசியத்தை கிருத்திகா பொதுவெளியில் போட்டு உடைத்ததை சிரித்தபடியே ரசித்தார் விஜய் ஆண்டனி.

தொடர்ந்து பேசிய கிருத்திகா உதயநிதி, தமிழ்சினிமாவில் பெரிய அளவில் கவனிக்கப்படாத ஒரு நடிகை சுனைனா. அவர் இந்த படத்தில் நடித்தே ஆகணும்னு நான் ஆசைப்பட்டு அவரை நடிக்க வைத்தேன். நான்கு கதாநாயகிகளுமே சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். திரைக்கதை எழுதும்போதே அது என்ன கேட்கிறதோ அதை தான் எழுதியிருக்கிறேன்.

பெண்களையோ, ஆண்களையோ முன்னிலைப்படுத்த வேண்டும் என்று எதையும் எழுதுவதில்லை. திறமையான பெண்கள் நிறைய இருக்கிறார்கள். பெண்களுக்கு பெரும் போராட்டம் இருந்தாலும் வெளியே வந்து சாதிப்பார்கள்” என்றார் கிருத்திகா உதயநிதி.

Leave A Reply

Your email address will not be published.