காற்றின் மொழி – விமர்சனம்

RATING – 3.5/5

நடித்தவர்கள் – ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு, சிம்பு மற்றும் பலர்

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசுவாமி

இசை – ஹாசிப்

இயக்கம் – ராதா மோகன்

வகை – நாடகம், குடும்பம்

சென்சார் பரிந்துரை – ‘U’

கால அளவு – 2 மணி நேரம் 28 நிமிடங்கள்

‘மொழி’ படத்தில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நடித்துக் கலக்கிய ஜோதிகா சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ராதாமோகனுடன் இணைந்திருக்கும் படம் தான் இந்த ‘காற்றின் மொழி’.

இந்த முறை நேரடிப் படமாக இல்லாமல் ஹிந்தியில் வித்யா பாலன் நடிக்க சுரேஷ் த்ரிவேணி இயக்கத்தில் 2017ல் வெளிவந்த துமாரி சூலு என்ற படத்தின் தமிழ் ரீ-மேக்கை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற விதத்தில் தனக்கே உரிய ஃபேமிலி பாணியில் இயக்கித் தந்திருக்கிறார் ராதாமோகன்.

கணவர் விதார்த், மகன் மகன் சித்தார்த் ஆகியோருடன் அபார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வரும் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜோதிகா.

கணவனும், மகனும் தான் உலகம் என்றாகி விட்ட அவருடைய நான்கு சுவர் வாழ்க்கையில் அதைத் தாண்டி மனசுக்குப் பிடித்த வேலையைச் செய்ய வேண்டும். வெளி உலகை பார்க்க வேண்டும் என்பது ஆசை.

Related Posts
1 of 67

அவருடைய ஆசையை நிறைவேற்றும் பொருட்டு தனியார் பண்பலை வானொலி ஒன்றில் இரவு நேர நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் வேலையில் சேர்கிறார். செய்கிற வேலை அவருடைய மனசுக்கு நிறைவைத் தந்தாலும், அது அவருடைய குடும்பத்தில் பெரும் புயலைக் கிளப்புகிறது.

இதனால் வேலையை விடக்கூடிய சூழல் வர? மனசுக்குப் பிடித்த வேலையில் ஜோதிகா தொடர்ந்தாரா? அல்லது பழையபடி கணவன், மகன் என்று நான்கு சுவருக்குள் அவருடைய வாழ்க்கை அகப்பட்டதா என்பதே மீதிக்கதை.

ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக்காக இருந்தாலும் வட இந்தியச் சாயல் எந்த காட்சியிலும் தெரியாமல் அசல் தமிழ்ப்படத்தைப் போலவே திரைக்கதை அமைத்து காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்கள். குறிப்பாக ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் நூறு சதவீதம் பொருத்தமானவர்களை தேர்ந்தெடுத்திருப்பது அருமை.

மொத்த கதையையும் ஒற்றை ஆளாக தோளில் தூக்கி சுமந்திருக்கிறார் ஜோதிகா. திருமணத்துக்குப் பிறகு ஜோதிகா நடிப்பில் வெளியான முதல் இரண்டு படங்களுமே பழைய ஜோதிகாவை திரையில் பார்க்க முடியாத சூழல் இருந்தது. ஆனால் இதில் குஷி படத்தில் பார்த்த அதே குறும்புத்தனங்களுடன் கூடிய க்யூட் ஜோதிகாவை நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்கள். சின்னச் சின்ன உடல் மொழிகளில் படம் முழுக்க நம்மை காட்சிகளோடு கட்டிப் போடுகிறது அவருடைய ‘ஆஹா… ஆசம்’ நடிப்பு.

கதை ஜோதிகாவை சுற்றி வந்தாலும் அவருடைய கணவராகவும், ஹீரோவாகவும் வரும் விதார்த் எந்த மிகைப்படுத்தலும் இல்லாதவராக மனசுக்கு நெருக்கமாகி விடுகிறார். குறிப்பாக கணவன், மனைவியாக வீட்டுக்குள் ஜோதிகாவுடம் அவர் காட்டும் எல்லை மீறாத நெருக்கமும், அன்பும் அசர வைக்கிறது.

நவீன யுவதியாக வரும் லட்சுமி மஞ்சு, அதே பண்பலையில் வேலை செய்யும் குமரவேல் ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

ட்ரெண்ட்டில் உள்ள காமெடியன் என்பதால் சில காட்சிகளில் யோகிபாபு வருகிறார். ஆனால் அவருடைய காட்சிகள் மனதில் ஒட்டவில்லை. அவரை விட குறைவான காட்சிகளில் மட்டுமே வந்தாலும் காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்து விட்டுப் போகிறார் மயில்சாமி.

ராதாமோகன் படம் என்றாலே எம்.எஸ்.பாஸ்கரும், மனோபாலாவும் கண்டிப்பாக இருப்பார்கள் அவர்கள் இந்தப் படத்திலும் இருக்கிறார்கள். அதிலும் எம்.எஸ். பாஸ்கரின் கேரக்டர் அன்புக்கு ஏங்கும் வயதானவர்களின் ஏக்கத்தை மிக நெகிழ்வாக பிரதிபலிக்கிறது. சில நிமிடங்களே ஹெஸ்ட் ரோலில் வரும் சிம்பு ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை தந்து விட்டுப் போகிறார்.

கிடைக்கிற சின்னச் சின்ன இடங்களில் கூட பிளாஸ்டிக் பயன்படுத்துதலின் தீமையைச் சொல்லியிருப்பது சபாஷ்.

மகேஷ் முத்துசுவாமியின் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவும், ஹாசிப்பின் பின்னணி இசை மற்றும் டர்ட்டி பொண்டாட்டி உள்ளிட்ட பாடல்களும் விறுவிறுப்புக்கு கூடுதல் பலம்.

மிமிக்ரி செய்வது, கிளியுடன் தனியாகப் பேசுவது, பழைய பாடல்களைப் பாடுவது ஆகிய காட்சிகளில் ஜோதிகாவிடமிருந்து வெளிப்படும் செயற்கைத் தனத்தையும், வீடு, ரேடியோ ஸ்டேஷன் என மாறி மாறி காட்டப்படும் காட்சிகளையும் கொஞ்சம் பட்டி பார்த்து மாற்றுக் காட்சிகளை யோசித்து சேர்த்திருக்கலாம்.

பக்கத்து வீட்டில் இருப்பவரின் பெயரே தெரியாமல் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் மிடில் கிளாஸ் குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு மனிதனின் செயல்பாடுகளையும் தனித்தனியாக உற்றுக் கவனிப்பதும், அதை படத்தில் காட்சிப்படுத்துவதும் தான் ராதாமோகனின் திரைக்கதை யுக்தி. இதிலும் அந்த யுக்தியை கயாண்டிருக்கிறார்.

ஹிந்திப் படத்தின் ரீமேக் தானே? என்ற எந்த உறுத்தலும் இல்லாமல், ஆண்களும் பார்த்து குடும்பத்தோடு கொண்டாடும் படமாக தந்திருகிறார் இயக்குனர் ராதாமோகன்.