Banner After Header

கடைக்குட்டி சிங்கம் – விமர்சனம்

0

RATING – 3/5

நடித்தவர்கள் – கார்த்தி, சாயிஷா, சூரி, சத்யராஜ், ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா பினு மற்றும் பலர்

ஒளிப்பதிவு – வேல்ராஜ்

இசை – டி. இமான்

இயக்கம் – பாண்டிராஜ்

வகை – ஆக்‌ஷன், நாடகம், ரொமான்ஸ்

சென்சார் பரிந்துரை – ‘U’

கால அளவு – 2 மணி நேரம் 28 நிமிடங்கள்

திருமணம் ஆன கையோடு கணவனோடு தனிக்குடித்தனம் செல்ல நினைக்கும் இக்கால இளம் பெண்களுக்கு கூட்டுக் குடும்பத்தின் பெருமைகளை பொட்டில் அடித்தாற் போல் காட்சிப்படுத்தியிருக்கும் படம் தான் இந்த ‘கடைக்குட்டி சிங்கம்’.

கூடவே விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், ஆணவக்கொலைகளின் பின்னணியில் இருக்கும் சாதிக்கட்சித் தலைவர்களுக்கும் சவுக்கடி கொடுத்திருக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களாகவே பேய், திகில், ஆபாசம் என ஒரே மாதிரியான படங்களைப் பார்த்து சலித்துப் போன ரசிகர்களுக்கு இந்தப்படம் ஒரு புதிய ட்ரெண்ட்டை உருவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சொல்லப்போனால் தியேட்டர்களுக்கு மீண்டும் பெண்களையும், குழந்தைகளையும் படையெடுக்க வைக்கும் விதமாக வந்திருக்கிறது இப்படம்.

படத்தில் டஜன் கணக்கில் நடிகர், நடிகைகள் இருந்தாலும் அத்தனை பேரையும் கடைக்குட்டி சிங்கமாக ஒற்றை ஆளாக கிளைமாக்ஸ் வரை தன் தோள்மீது சுமந்து செல்கிறார் ஹீரோ கார்த்தி.

அவருடைய ஓப்பனிங் ரேக்ளா ரேஸ்சில் வழக்கமான மாஸ் ஹீரோ லெவலில் இருந்தாலும், ஜல்லிக்கட்டு விளையாட்டை ஞாபகப்படுத்துவதும், கல்லூரியில் இளைஞர்கள் மத்தியில் பேசுகிற போது விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், அதன் புனிதத்தையும் புட்டு புட்டு வைத்து கைத்தட்டல்களை அள்ளுகிற காட்சிகளும் செம! செம!!

இரண்டு முறைப்பெண்கள் இருந்தும் மூன்றாவதாக ஒரு பெண்ணை காதலிப்பதும், எதற்காக முறைப்பெண்கள் மீது தனக்கு காதல் வரவில்லை, அவர்களை தான் சிறு வயதிலிருந்தே எப்படிப் பார்க்கிறேன் என்று சொல்லி கண்கலங்குகிற இடம் கதை சொல்லில் புதிது! அந்த இடத்தில் ஒரு இயக்குனராகவும் ஜொலிக்கிறார் பாண்டிராஜ்.

இரண்டு பொண்டாட்டிக்காரராக வரும் சத்யராஜ், அவரது மனைவிகளாக வரும் விஜி சந்திரசேகர், பானுப்ரியா, மாமன்களாக வரும் மாரிமுத்து, இளவரசு என படத்தில் வருகிற அத்தனை கேரக்டர்களுக்கும் சரிசமமாக இடம் கொடுத்து உறவுகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

கார்த்தி ஜோடியாக வரும் சாயிஷாவை விட அவரது முறைப்பெண்களாக வரும் பிரியா பவானி சங்கரும், அர்த்தனா பினுவும் தான் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்கள்.

கார்த்தி கூடவே வரும் சூரி சிறிய இடைவெளிக்குப் பிறகு அதிகம் பேசாமல் அளந்து பேசி டைமிங் வசனங்களால் சிரிப்புக்கு கியாரண்டி தந்திருக்கிறார்.

”ஒரு நாள் விவசாயியா இருந்து பாருங்க. வேணாம் ஒரு நாள் விவசாயி கூட இருந்து பாருங்க. அப்பத்தான் அவங்க கஷ்டம் என்னன்னு தெரியும்”.

”சொத்த சேர்த்து வைக்கிறது மட்டும் சேமிப்பு இல்ல. சொந்தத்தை சேர்த்து வைக்கிறதும் சேமிப்பு தான்.” போன்ற வசனங்கள் படத்தின் விறுவிறுப்புக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

”தண்டோரா கண்ணால…” பாடலில் மயங்க வைத்த டி.இமான் அட வெள்ளைக்கார வேலாயி… நீ கொள்ளக்காரி ஆனாயே…பாடலை முழுதாகவே படத்தில் இடம்பெறச் செய்திருக்கலாம்.

பச்சே பசேல் என்ற வயல்வெளிகளின் அழகை உள்ளது உள்ளபடியே கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது வேல்ராஜின் பரிசுத்தமான ஒளிப்பதிவு!

இடைவேளைக்குப் பிறகு வரும் ஓவர் செண்டிமெண்ட் சீரியல் டைப் காட்சிகளில் கொஞ்சம் ‘கத்தரி’ போட்டிருக்கலாம் எடிட்டர் ரூபன்.

நான்கைந்து கேரக்டர்களை மட்டுமே வைத்து ஒரு படத்தை சரியாகத் தர முடியாமல் தடுமாறும் சில இயக்குனர்களுக்கு மத்தியில், ரெண்டு டஜன் நடிகர், நடிகைகளை வைத்து எந்த பிசிறுத் தட்டலும் இல்லாமல் தந்திருப்பது திரைக்கதையின் புத்திசாலித்தனம்!

மறந்து போன, கூட்டுக் குடும்பத்தின் உன்னதம், அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தின் முக்கியத்துவம், மீண்டும் வேர் விட்டிருக்கும் ஆணவக்கொலைகளுக்கு சவுக்கடி என மூன்று முக்கியமான விஷயங்களையும் கோர்வையாக்கி, குடும்பத்தோடு சென்று பார்த்து ரசிக்கக் கூடிய பெருமைமிகு படமாகத் தந்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

Leave A Reply

Your email address will not be published.