Banner After Header

கடம்பன் – விமர்சனம்

0

Kadamban-Review

RATING : 3/5

ண்ணன் – தம்பிகளான இரண்டு கார்ப்பரேட் களவானிகளிமிடமிருந்து காட்டு வளங்களைக் காப்பாற்றப் போராடும் ஒரு இளைஞனின் கதை தான் இந்த ‘கடம்பன்.’

தேனி மாவட்டத்தில் இருக்கும் கடம்பவனம் என்கிற காட்டுப் பகுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகிறார்கள் ஆர்யாவைத் தலைவனாக்கிய சில நூறு பேர்களைக் கொண்ட மலைவாழ் மக்கள்.

அந்தப் பகுதியில் சிமெண்ட் தயாரிப்பதற்கான சுண்ணாம்புக் கற்கள் ஏராளம் இருப்பதை கண்டுபிடிக்கும் தொழிலதிபரான வில்லன் ஏரியா போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கை கோர்த்துக் கொண்டு ஆர்யா உள்ளிட்ட மலைவாழ் மக்களை அடித்து விரட்ட திட்டம் தீட்டுகிறார்.

இந்த போராட்டத்தில் யாருக்கு வெற்றி கிடைக்கிறது என்பதே கிளைமாக்ஸ்.

நாடு நன்றாக இருக்க வேண்டுமென்றால் காடு நன்றாக இருக்க வேண்டும் என்கிற ஒற்றை வரியில் சொல்லி விடக் கூடிய கதை தான். என்றாலும் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும், ‘கடம்பன்’ என்கிற தனது கேரக்டருக்காக ஆர்யா போட்டிருக்கும் உழைப்பும் அபரிமிதமானது.

படத்தின் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை எந்தக் காட்சியிலும் காலில் செருப்பே போடாமல் மலை உச்சியிலிருந்து தொங்குவது, மரத்தின் வேர்களைப் பிடித்து அசால்ட்டாக தாண்டுவது, மரக்கிளைகளுக்கு நடுவிலும், இடுக்கிலும் சர் சர்ரென்று பாய்ந்து ஓடுவதுமாக மனுஷன் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

கோதுமை நிறத்தழகியாக வரும் கேத்ரீன் தெரசா பாடலில் மட்டுமில்லாமல் ரொமான்ஸ் காட்சிகளிலும் ஆர்யாவுடன் அம்பூட்டு நெருக்கம்!

காமெடிக்கு ஆடுகளம் முருகதாஸ் இருக்கிறார். ஏ ரகத்தோடு அவர் செய்கிற காமெடியை போகிற போக்கில் ரசித்து சிரிக்கலாம்.

வில்லனாக வரும் அந்தப் போலீஸ்காரர் எக்ஸ்பிரஷன்களில் தப்பு செய்யவில்லை என்றாலும் வசனங்களைப் பேசுவதில் தமிழ் என்ன பாவம் செய்ததோ?

காட்டுக் கத்தலாக இல்லாமல் பார்வையாலேயே வில்லத்தனத்தை முழுமையாக திரையில் காட்டியிருக்கிறார் தொழிலதிபர் கம் வில்லனாக வரும் தீப்ராஜ் ராணா.

வழக்கமாக பல படங்களில் படு வில்லத்தனம் காட்டும் சூப்பர் சுப்பராயனை இதில் அமைதியான ஊர்த்தலைவராகப் பார்ப்பதே புதுசு!

ரொம்ப நாளைக்கப்புறம் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் யுவனின் மிரட்டலான பின்னணி இசையை எரிச்சல் இல்லாமல் கேட்க முடிகிறது. ஒற்றைப் பார்வையில் பாடலும், படமாக்கப்பட்ட விதமும் மனசுக்கு இதம்.

கொட்டும் அருவி, பசுமையாகக் காட்சியளிக்கும் பிரம்மாண்ட மலைகள், பச்சைப் பசேலென்ற மரங்கள், செடி, கொடிகள் என படம் முழுக்க பசுமையைப் படர விட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதீஸ்குமார்.

யானைகளுக்கு நடுவே நீளும் அந்தப் பரபரப்பான சண்டைக் காட்சியில் பிரம்மாண்டமாக மிரட்டியிருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்.

‘வாழ்க்கைத் தரம்கிறது வாழ்ற முறையில தான் இருக்கு’.

‘காட்டை அழிக்க உன்னைப் போல ஆயிரம் பேர் வந்தா, காட்டைக் காப்பாத்த என்னைப் போல நூறு பேர் வருவாங்க’.

‘காட்ட அழிக்க நினைக்கறது, உன் ஆத்தாளோட கர்ப்பப் பையில் இருந்துகிட்டு அவளோட வயித்த கிழிக்கிறது மாதிரிடா, அதனால சாகப் போறது உன் அம்மா மட்டும் இல்ல நீயும் தான்டா’. போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.

அரசாங்கத்துக்கு தெரியாமலேயே வனப்பகுதிக்குள் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் இவ்வளவு பெரிய சட்ட விரோதச் செயலை செய்ய முடியுமா? அதுவும் அரசு அதிகாரிகளின் துணையோடு? என்கிற சந்தேகத்துக்கு இயக்குநர் தான் விளக்கம் தர வேண்டும்.

இருபது பேர் நான்-ஸ்டாப்பாக சுடும் போது ஒரு குண்டு கூட படாமல் தப்பிப்பது, டயர்களை உருட்டி விட்டு எதிரிகளை ஓட ஓட விரட்டுவது என ஹீரோ லெவல் ட்ரீட்மெண்ட் காட்சிகளை தவிர்த்து இன்னும் கொஞ்சம் யதார்த்தமான காட்சிகளை யோசித்திருக்கலாம்.

‘காடு வாழ்ந்தால் நாமும் வாழ்வோம்’ என்கிற நல்ல கருத்தை வலியுறுத்தும் படமாகத் தர நினைத்த அந்த நற் சிந்தனைக்காகவே இயக்குநர் ராகவாவைப் பாராட்டலாம்.

Leave A Reply

Your email address will not be published.