Banner After Header

கலகலப்பு 2 – விமர்சனம்

0

RATING 3/5

நடித்தவர்கள் – ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரீன் தெரசா, ராதாரவி, சதீஷ் மற்றும் பலர்

இசை – ஹிப் ஹாப் ஆதி

ஒளிப்பதிவு – யு.கே.செந்தில்குமார்

இயக்கம் – சுந்தர்.சி

வகை – ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ்

சென்சார் பரிந்துரை – ‘U/A’

கால அளவு – 2 மணி நேரம் 34 நிமிடங்கள்

‘சுந்தர் சி’ படங்கள் என்றாலே காமெடி, காதல், ஃபேமிலி செண்டிமெண்ட் என எல்லாம் கலந்த கலவையாக இருக்கும். இதுவும் ஷேம் பிளட் தான் என்றாலும் கவர்ச்சியும், டபுள் மீனிங் வசனங்களும் தூக்கலாக இருக்கிறது. பக்கா காமெடிப்படமாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகம் என்ற அடையாளத்தோடு இப்படத்தை கொடுத்திருக்கிறார்கள்.

10 கோடி மதிப்புள்ள தனது பரம்பரை சொத்து ஒன்றைத் தேடி காசிக்கு வருகிறார் ஜெய். அந்த இடத்தில் தான் இன்னொரு ஹீரோவான ஜீவா மேன்ஷன் ஒன்றை நடத்தி பொழப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

தனது பூர்வீக இடத்தில் தான் ஜீவா மேன்சனை நடத்திக் கொண்டிருக்கிறார் என்கிற உண்மை ஜெய்க்கு தெரிய வரவும், ஜீவாவுடன் சேர்ந்து அந்த மேன்சனை நடத்த முடிவு செய்கிறார். அதற்காக வங்கியில் வாங்கிக் கொண்டு வருகிற பணத்தை லவட்டிக் கொண்டு ஓடி விடுகிறார் மிர்ச்சி சிவா. அவரைத் தேடி இருவரும் காரைக்குடிக்கு செல்ல, அடுத்தடுத்து என்ன நடக்கிறது? என்பதே மீதிக்கதை.

இதற்குள் தனது ரகசியங்கள் அடங்கிய லேப்டாப்பை தேடி வரும் அரசியல்வாதி, ஜெய் – நிக்கி கல்ராணி காதல், ஜீவா – கேத்ரீன் தெரசா காதல் என டஜன் கணக்கில் காமெடி நடிகர்களுடன் கலகலப்பூட்ட முயற்சித்திருக்கிறார் சுந்தர்.சி

சுந்தர்.சி படங்கள் என்றாலே கதையைத் தேட வேண்டிய அவசியமில்லை. எக்கச்சக்க நடிகர், நடிகைகளை எதிர்பார்க்கலாம். விழுந்து விழுந்து சிரிக்கக் கூடிய காமெடிக் காட்சிகளையும் எதிர்பார்க்கலாம்.

இந்தப் படத்திலும் ஜார்ஜ், ராதாரவி, யோகி பாபு, மதுசூதன் ராவ், சதீஷ், ரோபோ சங்கர், ராம்தாஸ், விடிவி கணேஷ், வையாபுரி, மனோபாலா, சிங்கம்புலி, சிங்கமுத்து, விச்சு, சந்தானபாரதி, தளபதி தினேஷ் என டஜன் கணக்கில் நடிகர், நடிகைகள் இருக்கிறார்கள்.

ஆனாலும் முதல் பாகமாக  ‘கலகலப்பு’ வில் தெறிக்க விட்ட காமெடி காட்சிகளில் இதில் இல்லாதது கொஞ்சம் ஏமாற்றம் தான். அதற்காக காமெடியே இல்லை என்கிற முடிவுக்கு வந்து விட வேண்டாம்.

அமாவாசை வந்து விட்டால் பக்கத்தில் இருப்பவர்களை அடித்து அலற விடும் ஜார்ஜ், கண்ணாடியை கழட்டி விட்டால் மங்கலானப் பார்வை பார்த்துக் கொண்டு வாங்கிக் கட்டிக் கொள்ளும் ரோபோ சங்கர், தேவையில்லாமல் பிரச்சனைகளில் சிக்கி அடி வாங்கும் விடிவி கணேஷ், போலிச்சாமியாராக வந்து டைமிங் டயலாக்குகளை அள்ளி விடும் யோகிபாபு ஆகியோர் வரும் காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறது.

ஜெய், ஜீவா இரண்டு ஹீரோக்களும் படத்தில் சமமான வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. யூத்புல் ஹீரோக்களாக புகுந்து விளையாடுகிறார்கள். நாயகிகளாக வரும் நிக்கி கல்ராணியும், கேத்ரீன் தெரசாவும் கவர்ச்சியில் கிறங்கடிக்கிறார்கள். அதிலும் கேத்ரீன் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக பந்தி வைக்கிறார்.

காசிக்கென்று ஒரு கலர் இருக்கிறது. அதை அறவே தவிர்த்து விட்டு, முழுப்படத்தையும் கலர்ஃபுல்லாக கண்ணுக்கு விருந்து வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில்குமார்.

‘ஹிப் ஹாப்’ ஆதியின் இசையில் ‘ஒரு குச்சி ஒரு குல்ஃபி’, ‘முகுந்தா முராரி’ பாடல்கள் மட்டுமே கேட்டவுடன் மனசுக்குள் நிற்கிறது. ஆர்மோனியத்துக்கு என்னாச்சு பாஸ்?

இடைவேளைக்குப் பிறகு திடீர் எண்ட்ரி கொடுக்கிற மிர்ச்சி சிவா தான் ஒற்றை ஆளாக காமெடியில் கதகளி ஆடியிருக்கிறார்.

குடும்பத்தோடு பார்க்கக் கூடிய காமெடிப்படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவரான சுந்தர்.சி  இதையும் அந்த ஜானரில் தான் கொடுத்திருக்கிறார். அதில்

”கோயில்ல இது என்ன இடம்?”

”பஜனை மண்டபம்”.

”என் கொள்ளு தாத்தாவோட பெட்ரூம்.”

”சாமியாருக்கு கோபம வருமா?”

”மூடே வருது. கோபம் வராதா?” போன்ற டபுள் மீனிங் வசனங்களை காமெடிக்காக பயன்படுத்தியிருப்பதை தவிர்த்திருக்கலாம்.

காரைக்குடியின் ஓட்டு வீடுகளின் மேல் சைக்கிளில் தப்பிக்க மனோபாலா பயிற்சி எடுப்பது, பல கோடி மதிப்புள்ள வைரக்கற்களை பாதுகாக்க சந்தான பாரதி வைத்திருக்கும் செக்யூரிட்டி சிஸ்டம் போன்ற கற்பனைகள் ரசிக்க வைக்கின்றன.

மனசு விட்டுச் சிரிக்க வைக்கவில்லை என்றாலும் வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறது இந்த ‘கலகலப்பு 2’.

Leave A Reply

Your email address will not be published.