Banner After Header

கனா – விமர்சனம் #Kanaa

0

RATING – 3.5/5

நடித்தவர்கள் – சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன், இளவரசு, தர்ஷன் மற்றும் பலர்

இசை – திபு நினன் தாமஸ்

ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்

இயக்கம் – அருண்ராஜா காமராஜ்

வகை – நாடகம், விளையாட்டு

சென்சார் பரிந்துரை – ‘U’

கால அளவு – 2 மணி நேரம் 26 நிமிடங்கள்

விவசாயத்தை கவனிக்கவே ஆள் இல்லாத நாட்டில் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்ணின் கிரிக்கெட் கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதே இந்த ‘கனா’.

தனது முதல் தயாரிப்பையே உச்சி முகர்ந்து பாராட்டும் படைப்பாக தந்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கு முதலில் மனமார்ந்த பாராட்டுகள்.

திருச்சிக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வரும் சத்யராஜூக்கு விவசாயத்தைப் போலவே கிரிக்கெட் என்றால் உயிர்.

உலகக் கோப்பை ஒன்றில் இந்தியா தோற்று விட, அதனால் சோகமாகிறார் சத்யராஜ். அப்பாவின் சோகத்தைப் பார்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்குப் பிடித்த கிரிக்கெட்டை தானும் விளையாண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்து, அதை தன் அப்பா பார்த்து சந்தோஷப்பட வேண்டுமென்று இந்திய மகளிர் கிரிக்கெட் டீமில் சேர முயற்சிக்கிறார்.

”பொம்பள புள்ளைக்கு கிரிக்கெட்டா?” என்று ஒட்டுமொத்த கிராமமும் ஐஸ்வர்யா ராஜேஷை கேலியும், கிண்டல் ஒருபுறம், விவசாயம் பொய்த்துப் போனதால் வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாத குடும்பச் சூழல் ஒருபுறம். இந்த இரண்டையும் தாண்டி தன் கிரிக்கெட் கனவை நிஜமாக்கி, தன் அப்பாவின் ஆசையை ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

கிரிக்கெட், விவசாயம் என இரண்டு தளங்களில் கதையை கட்டமைத்திருக்கிறார் அருண்ராஜா காமராஜா. காட்சிகளை கோர்த்துத் தந்தலிலும், திரைக்கதை அமைப்பிலும் எந்த குழப்பமும் இல்லாமல் மிக அழகாக கொண்டு செல்கிறார்.

‘யதார்த்த நாயகி’ என்கிற புகழ் வார்த்தைக்கு பொருத்தமானவராக வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கிரிக்கெட் விளையாட வேண்டும் என்கிற ஆர்வத்தை அவர் கண்களில் காட்டுகிற காடசிகளில் நிஜத்திலும் இவர் கிரிக்கெட் பைத்தியமாகத்தான் இருப்பாரோ என்று சந்தேகப்படுகிற அளவுக்கு கிரிக்கெட் வீரராக வாழ்ந்திருக்கிறார். மொத்தப் படத்தையும் ஒற்றை ஆளாக தன் தோள் மீது சுமந்து செல்பவர் கிளைமாக்ஸ் காட்சியில் பேசும் வசனங்களில் ஆளும் அரசுகளுக்கு சவுக்கடி கொடுக்கிறார்.

இவரைத் தவிர வேறு யாரையும் பொருத்திப் பார்க்க முடியாது என்று சொல்கிற அளவுக்கு நிஜமான விவசாயிகளின் வேதனைகளையும், வலிகளையும், வைராக்கியத்தையும் தனது அசூர நடிப்பால் விவசாயி கேரக்டரில் வெளிப்படுத்தி பிரம்மிக்க வைக்கிறார் சத்யராஜ். ஒரு சராசரி கிராமத்து அம்மாவின் உணர்வுகளை உள்ளபடியே கொண்டு வந்திருக்கிறார் அவருடைய மனைவியாக வரும் ‘என்னுயிர் தோழன்’ ரமா.

இடைவேளைக்குப் பிறகு சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கிற சிவகார்த்திகேயன் நிஜமான கிரிக்கெட் கோச்சருக்காக அத்தனை உடல் மொழிகளிலும் அசர வைக்கிறார். அவர் வந்த பிறகு வரும் காட்சிகள் டாப் கியரில் விறுவிறுப்பாக வேகம் எடுக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷை ஒருதலையாக காதலிப்பவராக வரும் அறிமுக நாயகன் தர்ஷன் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கொடுக்கும் அலப்பறை காமெடி கலாட்டாவாக ரசிக்க வைக்கிறது.

திபு நினான் தாமஸ் இசையில் ‘வாயாடி பெத்த புள்ள’, ‘கனா’ என படத்தில் இடம்பெற்றுள்ள அத்தனை பாடல்களும் திரும்ப திரும்ப கேட்கத் தூண்டும் அடடே ‘ரா’கம்! தினேஷின் ஒளிப்பதிவும், ரூபனின் எடிட்டிங்கும் நேரம் போவதே தெரியாத அளவுக்கு செம ஷார்ப்.

”இந்த உலகம் ஜெயிச்சுருவேன்னு சொன்னா கேட்காது. ஜெயிச்சவங்க சொல்றத தான் கேட்கும்”

”இந்த வேர்ல்ட் கப்ல இந்தியாவை ஜெயிக்க வைக்க நாங்க 11 பேர் இருக்கோம். ஆனா விவசாயியை காப்பாத்த எத்தனை பேர் இருக்கோம்? ” போன்ற வீரியமுள்ள வசனங்கள் பலத்த கைத்தட்டல்களை அள்ளுகின்றன.

”கிரிக்கெட்டை நாட்டின் பெருமையாகக் கொண்டாடுகிற நாம் இந்தியாவின் இதயமாக இருக்கும் விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும்” என்கிற கருத்தை எந்தவித பாசாங்கும் இல்லாமல் சீன் பை சீன் விறுவிறுப்பான படமாகத் தந்து முதல் படத்திலேயே தனது இயக்குனர் கனவை வெற்றியாக்கியிருக்கிறார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.

Leave A Reply

Your email address will not be published.