Banner After Header

கண்ணே கலைமானே – விமர்சனம்

0

RATING – 2.8/5

யற்கை விவசாயத்தை மக்கள் மத்தியில் ஊக்கும்விக்கும் உன்னதமானப் பணியை வாழ்நாள் வேலையாகச் செய்து வரும் இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே இந்த ‘கண்ணே கலைமானே’.

கிராமத்தில் மண்புழு உரம் தயாரிக்கும் தொழில் நடத்தி வரும் உதயநிதி ஸ்டாலின் ஊரில் உள்ள மக்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து பாடம் எடுப்பது. ஆடு, மாடு வாங்க வங்கிக் கடன், கல்விக் கடனுக்கு அத்தாட்சி என்று எல்லா நல்ல வேலைகளையும் செய்கிறார்.

அவருக்கும் அங்குள்ள கிராம வங்கிக்கு மேலாளராக வரும் தமன்னாவுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. உதயநிதியின் அப்பா முதலில் தயங்கினாலும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் தமன்னாவை திருமணம் செய்கிறார் உதயநிதி.

இல்வாழ்க்கை சில நாட்கள் மகிழ்ச்சியாக செல்ல, திடீரென்று தமன்னாவை ஒரு நோய் தாக்குகிறது. இதனால் உடைந்து போகும் உதயநிதி தன் உயிருக்கு உயிரான காதல் மனைவியை அந்த நோயிலிருந்து காப்பாற்றினாரா இல்லையே என்பதே மீதிக்கதை.

ரொமான்ஸ் கக்கும் டூயட், அனல் பறக்கும் ஸ்டண்ட் காட்சிகள் என எதுவும் இல்லாத நல்ல புள்ளையாகவே படம் முழுக்க வருகிறார் உதயநிதி ஸ்டாலின். கிட்டத்தட்ட இதற்கு முன்பு ‘நிமிர்’ படத்தில் எப்படிப்பட்ட ஒரு கேரக்டரில் வந்தாரோ? கிட்டத்தட்ட அதே கேரக்டர் தான்.

கவர்ச்சி இல்லாமல், முழுக்க போர்த்திக் கொண்டு வங்கி மேலாளராக வருகிறார் நாயகி தமன்னா. கோபமாகப் பேசும்போது கூட அதிராமல் தான் பேசுகிறார். அளந்து தான் பேசுகிறார். சொல்லப்போனல் உதயநிதியை விட நடிப்பில் ஸ்கோர் செய்ய இவருக்குத்தான் அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதையும் அல்வா சாப்பிடுவது போல அசத்துகிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு 80-களில் பார்த்த வடிவுக்கரசியை இதில் பார்க்க முடிகிறது. எதையும் நிதானமாக யோசித்து செய்யும் அனுபவம் முதிர்ந்த அப்பாவாக வரும் ‘பூ’ ராம் மனதில் நிற்கிறார்.

இயக்குனரின் செஞ்சோற்றுக் கடனோ என்னவோ? உதயநிதியின் நண்பர்களாக வருபவர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.

ஊர்த் திருவிழாவில் ஆரம்பிக்கிற படம் இயற்கை விவசாயம், மாட்டு லோன், கல்விக் கடன், நீட் தேர்வு, விவசாய லோன், பூச்சிக் கொல்லி மருந்து, கடன் தொல்லை என மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கிடைக்கிற இடைவெளியில் பேசுகிறது. இதனாலோ என்னவோ ஒரு தம்பதிக்குள் நடக்கும் உறவுச் சிக்கலை முழுமையாகச் சொல்ல முடியாமல் தடுமாறியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.

படத்தில் முகம் சுளிக்க வைக்கும் காட்சி ஒன்றுகூட இல்லை. அதற்காக சீரியல் டைப் காட்சிகள், பல ஆண்டுகள் பின்னோக்கிப் போய் பார்த்து புளித்த பழைய கதை என திரைக்கதை நகர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள்.

ஒரு கிராமத்தின் பச்சை பசேல் என்ற பசுமையை மிக ரம்மியமாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசன். யுவன் ஷங்கர் ராஜா இசையில் ”அழைக்கட்டுமா தாயே பாடல்” மட்டும் நினைவில் நிற்கிறது. மற்றவை மனதில் நிற்கவில்லை.

உறவுச் சிக்கலைச் சொல்வதா? அல்லது மக்கள் சந்திக்கும் வாழ்வியல் சிக்கல்களைச் சொல்வதா? என்கிற குழப்பத்தில் திரைக்கதையை கூர்மையாக்கத் தவறியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. அதை மட்டும் சரி செய்திருந்தால் படத்தின் தலைப்பைப் போலவே படமும் கனமாக இருந்திருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.