Banner After Header

‘ஊர் வாயை மூட முடியாது’ : விமர்சனங்கள் பற்றி விஜய் சேதுபதி கமெண்ட்

0

vijay sethupathi

ந்தியாவிலேயே அதிக படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஹீரோ என்கிற பெருமை விஜய் சேதுபதிக்கு கிடைத்திருக்கிறது என்று சொன்னால் அதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

நாளை செப்டம்பர் 1-ம் தேதி அவர் நடித்த ‘புரியாத புதிர்’ ரிலீசாகிறது. இன்று இன்னொரு புதுப்படமான ‘கருப்பன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

‘ரேனிகுண்டா’ வெற்றிப்படத்தை இயக்கிய பன்னீர் செல்வத்தின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தன்யா நடித்திருக்கிறார். டி.இமான் இசையமைக்க ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ் சார்பாக ஏ எம் ரத்னம் தயாரித்திருக்கிறார்.

சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி ”இந்தப் படத்தில் நான் மூன்று பேருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றவர் மூன்று முறை இயக்குநர் பன்னீர் செல்வத்தின் பெயரையே சொன்னார்.

அவரைப் போல ஒரு நல்ல மனிதரைப் பார்த்ததில்லை, எனக்குக் கூட பிடிக்காதவர்கள் அல்லது துரோகம் செய்தவர்கள் என்று ஒரு ஐம்பது பேரைச் சொல்வேன். ஆனால் பன்னீர் செல்வத்தைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அந்தளவுக்கு அவர் நல்ல மனிதர், இன்றைக்கு இந்தப் படம் தயாராக இருக்கிறது என்றால் அதற்கு அவருடைய பொறுமைதான் முக்கிய காரணம் என்றவரிடம், அண்மைக்காலமாக சமூகவலைத்தளங்களில் வரும் திரைப்பட விமர்சனங்களை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? என்று கேட்டதற்கு,  ”விமர்சனம் என்பது ஒரு தனி மனிதனின் கருத்து. அதை ஏற்றுக் கொள்வதும், தவிர்ப்பதும் தான் நாம் செய்ய முடியும். ஊர் வாயை யாராலும் மூட முடியாது…” என்றார்.

அடுத்து பேச வந்த இயக்குநர் பன்னீர் செல்வம் நான் இங்க நெறைய பேருக்கு நன்றி சொல்லணும் என்று பேச ஆரம்பிக்கும் போதே கண்கள் கலங்கி விட்டது.

இந்தப் படத்தின் கதையை நான் பல ஹீரோக்களிடம் சொல்ல முயற்சித்துக் கொண்டிருந்தேன். படம் சேர்ந்து செய்வது என்பது அடுத்த கட்டம், ஆனால் அதை யாருமே கேட்கக் கூட தயாராக இல்லை. இதற்கும் நான் ரேனிகுண்டா என்ற வெற்றிப்படத்தை கொடுத்தவன். அப்படிப்பட்ட எனக்கே இந்த நிலை என்றால், முதல் படம் இயக்க காத்திருக்கும் உதவி இயக்குனர்களை நினைக்கும் போது கொடுமையாக இருக்கிறது.

அப்படி நான் பஸ்ஸூக்காக காத்திருந்து காத்திருந்து தளர்ந்து போன நேரத்தில் எனக்கு ஏசி பஸ் கிடைத்தது. அதில் டிரைவராக விஜய் சேதுபதியும், கண்டக்டராக ரத்னம் சாரும் வந்து அமைந்தது தான் என் பாக்கியம்.

”ஒருநாள் இயக்குநர் சீனு ராமசாமி என்னை அழைத்து விஜய் சேதுபதியை சந்திக்க சொன்னார். நான் அவரை சந்தித்தபோது சார் உண்மையிலேயே நான் ரொம்ப பிஸியா இருக்கேன். அதனால கண்டிப்பா ஒரு வருஷமாவது ஆகும் என்றார். அது பரவாயில்லை சார், ஒரே ஒரு தடவை கதையை மட்டும் கேளுங்க என்றே. ஆனால் விஜய் சேதுபதி இருக்கிற பிஸியில் உடனே கதை கேட்க முடியவில்லை. இருந்தாலும் விஜய் சேதுபதியின் மேனேஜர் ராஜேஷ், இயக்குனர் ரத்தினசிவா, தயாரிப்பாளர் காமன்மேன் கணேஷ், ஸ்ரீதர் அடுத்தடுத்து எல்லோரும் என் கதையைப் பற்றி எடுத்துச் சொல்லி கதை கேட்க வைத்தார்கள். அப்படி இந்தப்படம் அமைய காரணமாக இருந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் போது விஜய் சேதுபதியிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். தூங்கும் போது கூட படத்தை பற்றிய சிந்தனையில் தான் இருப்பார். ஜல்லிக்கட்டுக்கு முன்பே இந்த படம் ஆரம்பிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டை பற்றி எதையும் படத்தில் பேசவில்லை” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.