Banner After Header

கருப்பன் – விமர்சனம்

0

vijay sethupathi

நட்சத்திரங்கள் : விஜய் சேதுபதி, தன்யா, பாபி சிம்ஹா, பசுபதி, காவேரி மற்றும் பலர்

இயக்கம் : ஆர். பன்னீர் செல்வம்

சென்சார் சர்ட்டிபிகேட் : ‘U’

கால அளவு : 2 மணி 17 நிமிடம்

RATING : 3/5

தார்த்த படங்களின் ஹீரோ என்கிற அடையாளத்தைக் கொண்ட விஜய் சேதுபதியை ஆக்‌ஷன் ஹீரோவாக்கி மாஸ் காட்ட வைத்திருக்கும் படம் தான் இந்த ‘கருப்பன்.’

மதுரை தான் கதைக்களம். மொடக்குடிகாரரும், மொரட்டு ஆசாமியுமான ஹீரோ விஜய் சேதுபதி ஒரு பிரமாதமான ஜல்லிக்கட்டு வீரர்.

அவரிடம் ஜல்லிக்கட்டு போட்டி ஒன்றில் தன்னுடைய மாட்டை அடக்க முடியுமா? என்று சவால் விடுகிறார் பசுபதி.

உன் தங்கச்சியை கட்டிக் கொடுக்க சம்மதம் என்றால் நானும் ரெடி என்று விஜய் சேதுபதி கேட்க, பசுபதியும் ரோஷத்தில் ஓ.கே சொல்கிறார். அடுத்த காட்சியில் வழக்கமாக எல்லாப் படங்களிலும் வரும் ஹீரோவைப் போல மாட்டை அடக்கி விடுகிறார்.

சரி பாசமாக வளர்த்த அண்ணன் ரோஷத்தோடு சவால் விட்டு வந்து விட்டாரே… அவருடைய மனசு சஞ்சலப்பட்டு விடக்கூடாதென்று பசுபதியின் தங்கையான ஹீரோயின் தன்யாவும் விஜய் சேதுபதியை கட்டிக்கொள்ள சம்மதம் சொல்ல இனிதே திருமணம் நடந்தேறுகிறது.

இதையெல்லாம் பார்த்து கொதிக்கிறார் சின்ன வயசிலிருந்தே தன்யாவை ஒருதலையாகக் காதலிக்கும் பாபிசிம்ஹா. விஜய் சேதுபதியை போட்டுத் தள்ளி விட்டு எப்படியாவது தன்யாவை தள்ளிக்கொண்டு போக சதித் திட்டம் போடுகிறார்.

அவர் போடுகிற அந்தத் திட்டத்திலிருந்து காதல் ஜோடி எப்படி தப்பிக்கிறார்கள்? என்பதே கிளைமாக்ஸ்.

யதார்த்த நாயகன் என்ற பெயர் எடுத்த விஜய் சேதுபதிக்கு இதில் படத்தில் வருகிற அத்தனை காட்சிகளும் பூந்து விளையாடுகிற வாய்ப்பு. அவை அத்தனையையும் மிகச் சரியாகப் பயன்படுத்தி கைதட்டல்களை அள்ளுகிறார். சொல்லப்போனால் படத்தின் மொத்தக்கதையையுமே தாங்கி நிற்பது அவர் தான்.

மாமாவாக வரும் சிங்கம் புலியோடு சேர்ந்து கொண்டு டாஸ்மாக் பாருக்குள் அடிக்கும் கூத்துகளும், முரட்டு ஆசாமியாக இருந்தாலும் மனநிலை சரியில்லாத அம்மா மீது உசுராக இருப்பதும், அந்த அம்மாவை அக்கறையோடு பார்த்துக் கொள்ளும் மனைவி கிடைத்ததும் பொறுப்பான கணவனாக மாறுவதும், புதுமாப்பிள்ளையானவுடன் சதா எந்த நேரமும் மனைவியையே சுற்றி வந்து கொஞ்சுவதும், சீண்டி விளையாடுவதும் என சீனுக்கு சீன் சிக்ஸர் தான்.

அவருக்கு மிகப் பொருத்தமான ஜோடியாக வருகிறார் நாயகி தன்யா. கணவன் – மனைவிக்கிடையே இருக்கிற அன்பையும், நெருக்கத்தையும் காட்டுகிற படம் என்பதால் விஜய் சேதுபதியுடனான நெருக்கமான காதல் காட்சிகளில் தயக்கம் இல்லாமல், அதே சமயம் அது முகம் சுளிக்க வைக்காமல் அசல் கிராமத்துப் பெண்ணின் காதல், வீரம், கோபம் என அத்தனை குணங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

”ஏம்மா இங்க இருக்க, உன் மேல அவன் உசுரையே வெச்சிருக்கான், நீ மட்டும் வரலே எதிர்ல எவன் வந்தாலும் வெட்டுவான்” என்று சொல்கிற காட்சியில் மட்டும் செயற்கையாக இருக்கிறது. மற்றபடி எப்படி விஜய்சேதுபதிக்கு தன்யா பொருத்தமான ஜோடியாக வருகிறாரோ அதேபோல காமெடியில் விஜய் சேதுபதிக்கு பொருத்தமானவராக அவரோடு சேர்ந்து சிரிக்க வைக்கிறார் சிங்கம் புலி.

இவரை விட்டால் இந்தக் கேரக்டரில் வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது என்று படம் பார்ப்பவர்களில் மனதில் நச்சென்று பதிந்து விடுகிறார் தன்யாவின் அண்ணனாக வரும் பசுபதி. கணவன் சொல்வதே வேதமென்று அமைதியே உருவாக வருகிறார் காவேரி.

சைலண்ட் வில்லனாகவே வரும் பாபிசிம்ஹா கிளைமாக்ஸுக்கு முந்தைய சீன் வரை அதை அப்படியே கடை பிடித்ததாலோ என்னவோ டம்மி வில்லனாக மாறி விடுகிறார்.

இன்னொரு வில்லல் சரத் லோகிதஸ்வாவோ திரையில் தோன்றும் போதெல்லாம் பெரிய பில்டப்புகளுடன் கோடூர வில்லனாக காட்டப்படுகிறார். ஆனால் ஒரு காட்சியில் சாதாரண அடியாளைப் போல விஜய் சேதுபதியிடம் அடி வாங்கி விட்டு போய் விடுகிறார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர். சக்திவேலின் ஒளிப்பதிவு விறுவிறுப்புக்கு கூடுதல் பலம். பாடல்கள் ஏற்கனவே கேட்டவை போல இருந்தாலும் பின்னணி இசையில் ஆக்‌ஷன் படத்துக்குரிய அதிர்வைத் தருகிறார் டி.இமான்.

இதுவரை யாரும் முழுமையாக சொல்லாத விதத்தில் கணவன், மனைவிக்கிடையே உள்ள அன்யோன்யத்தையும், அன்பையும் மிக அழகாகவும், உணர்வுப்பூர்வமாகவும், யதார்த்தமாகவும் காட்சிப்படுத்தி குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படியான கன்னியமான படமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் ஆர்.பன்னீர் செல்வம்.

முழுப்படமும் ஏற்கனவே நாம் பார்த்த பல கிராமத்துப் படங்களை ஞாபகப்படுத்தினாலும்,  எத்தனை முறை கிடைத்தாலும் சலிக்கவே சலிக்காத நிஜமான அன்பையும், நேசத்தையும் போல நம்மைக் கட்டிப்போடுகிறான் இந்த பாசக்காரக் ‘கருப்பன்.!’

Leave A Reply

Your email address will not be published.