தோல்விகளால் துவண்டு விடவில்லை : கதாநாயகன் வெற்றிக்கு தயாரான விஷ்ணு விஷால்

0

vishnu

வெற்றியும் தோல்வியும் கலந்தது தான் வாழ்க்கை. இனிமேல் சினிமா தான் வாழ்க்கை என்றாகி விட்ட விஷ்ணு விஷாலுக்கு வெண்ணிலா கபடி குழு படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து வந்த சில படங்கள் தோல்விப்படங்களாகி விட்டன.

ஆனாலும் தன்னுடைய முயற்சியை கை விடாதவர் சொந்தமாக வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தை தயாரித்தார். காமெடியும், கமர்ஷியலுமாக கலந்து கட்டிய அந்தப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது.

தற்போது அதைத் தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பாக முழுக்க முழுக்க காமெடி ப்ளஸ் ஃபேமிலி எண்டர்டெயினராக நடித்திருக்கும் படம் தான் கதாநாயகன்.

இந்தப்படம் கண்டிப்பாக ஹிட்டாகும் என்பதற்கு சாட்சியாக படத்தின் இயக்குநர் முருகானந்தம் ஒருவரே போதும். நிஜ வாழ்க்கையில் எப்போதும் அதிக காமெடி சென்ஸ் உள்ளவர் என்பதால் இவர் சொன்ன கதையை டிக் செய்திருக்கிறார் விஷ்ணு விஷால்.

படத்தை முடித்து போட்டுப் பார்த்த போது விஷணுவுக்கு ரொம்ப சந்தோஷம். அந்த சந்தோஷத்தோடு படக்குழுவினரோடு பத்திரிகையாளர்களை சந்தித்தார்…

சந்திப்பில் மூத்த நடிகையான சரண்யா பொன்வண்ணன் பேசுகையில், “விஷ்ணுவிடம் குழந்தை முகம் உள்ளது. மேலும் எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வமும், முயற்சியும் உள்ளது. இது அவரை கண்டிப்பாக அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும். படத்தின் இயக்குனர் முருகானந்தம் மிகவும் திறமையானவர். ஒரு நடிகர் மக்களிடத்தில் எந்த மாதிரியான இடத்தை பெற்றிருக்கிறார் என்பதை உணர்ந்து அதற்கேற்ப வேலை வாங்குகிறார். இந்தப்படம் கண்டிப்பாக ஒரு பேமிலி எண்டர்டெய்னராக இருக்கும்.”என்று கூறினார்.

“இப்படத்தில் முதன் முறையாக ஷேய்க் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படத்தின் இயக்குனர் என்னுடன் மரகத நாணயம் படத்தில் நடித்திருந்தார். இப்போது அவர் படத்தில் நான் நடித்திருக்கிறேன்.படத்தில் எனது கதாபாத்திரத்தை நன்றாக வடிவமைத்துள்ளார். கதாநாயகன் படம் வெற்றிபெற என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார் நடிகர் ஆனந்த் ராஜ்.

இயக்குனர் முருகானந்தம் பேசும் போது… “விஷ்னு விஷால் ஒரு நல்ல நடிகராக மட்டுமில்லாமால், ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும் இருக்கிறார். படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. எங்கள் குழு எப்போதும் நகைச்சுவையாக மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம்”. என்றார்.

கதாநாயகனும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் பேசுகையில், “கிரிக்கெட் வீரராக முயற்சி செய்தேன் முடியவில்லை. அதன்பிறகு ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். நாம் என்னவாக நினைத்தோம், இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று அங்கு யோசித்தபோது அந்த வேலையை விட்டு வந்து விட்டேன்.

அதன் பிறகு சினிமாவில் நடிக்க முயற்சித்தேன். அப்போது தான் எனக்கு முதல்படமாக வெண்ணிலா கபடி குழு படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் நல்ல பெயரை பெற்று தந்த போதிலும் அடுத்தடுத்த படங்கள் சற்று சறுக்கல்களை தந்தன. எனினும் முயற்சியை கைவிட வில்லை. கடைசியாக என்னுடைய தயாரிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. ஒரு கமர்ஷியல் படத்துக்கு இந்தளவுக்கு மக்கள் ஆதரவு தருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்தளவுக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தார்கள். அதனால் தான் தற்போது அதே மாதிரியான ஒரு தரமான படமாக கதாநாயகன் படத்தை தயாரித்திருக்கிறேன். இந்தப்படமும் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்” என்றார்.

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் தயாராகியிருக்கும் இப்படத்தில் விஷ்னுவிஷால் கதாநாயகனாக நடிக்க, ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்திருக்கிறார். இவர்களுடன் சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், அருள்தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, வெண்ணிலா கபடி குழு படத்தின் ஒளிப்பதிவாளரான லெக்ஷ்மண் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Leave A Reply