Banner After Header

கேணி – விமர்சனம்

0

RATING – 2.8/5

நடித்தவர்கள் – ஜெயப்பிரதா, ரேவதி, அனுஹாசன், பார்த்திபன், நாசர், ரேகா, தலை வாசல் விஜய் மற்றும் பலர்

இசை – எம்.ஜெயச்சந்திரன் ( பாடல்கள்) சாம்.சி.எஸ் ( பின்னணி)

ஒளிப்பதிவு – நெளஷாத் ஷெரிப்

இயக்கம் – எம்.ஏ. நிஷாத்

வகை – நாடகம்

சென்சார் பரிந்துரை – ‘U’

கால அளவு – 2 மணி நேரம் 23 நிமிடங்கள்

ங்கு நோக்கினாலும் தலை விரித்தாலும் தண்ணீர் பிரச்சனையை முன் வைத்து இரு மாநிலங்களுக்கிடையே நடக்கும் நீர் அரசியலும், அதனால் பாதிக்கப்படும் மக்களைப் பற்றியும் பேசுகிற படம் தான் இந்த ‘கேணி.’

கணவர் இறந்த பிறகு கேரளாவிலிருந்து அவரது பூர்வீக வீடு இருக்கும் தமிழ்நாட்டுக்கு வருகிறார் ஜெயப்பிரதா. அவருடைய வீட்டிலேயே இருக்கும் கேணி ஒன்றில் எப்போதுமே வற்றாமல் நீர் இருக்கும். ஆனால் அந்த இடம் தனக்கு என்று சொந்தம் கொண்டாடுகிறது கேரள அரசு. ஒரு சட்டப் போராட்டத்துக்குப் பிறகு அது ஜெயப்பிரதாவுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வர, அவர் மட்டும் அந்தக் கேணியில் எவ்வளவு வேண்டுமானால் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என்று இரக்கம் காட்டுகிறது கேரள அரசு.

அதே நேரத்தில் அவர் வசிக்கும் ஊரைச் சேர்ந்த மக்கள் தண்ணீர் இல்லாமல் ஏற்படும் வெக்கை நோயால் கடுமையாக அவதிப்படுவதைப் பார்க்கும் ஜெயப்பிரதா எனக்கு மட்டுமில்லாமல் ஊர் மக்களையும் அந்தக் கேணியில் தண்ணீர் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று போராட ஆரம்பிக்கிறார்.

ஊர் தலைவர் பார்த்திபன், ஏழைப் பெண் அனுஹாசன் உள்ளிட்டவர்களுடன் அவர் நடத்தும் அந்த நீர் போராட்டத்துக்கு சட்ட ரீதியாக வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

இன்னும் சில ஆண்டுகள் கழித்து தங்கம், பெட்ரோலைப் போலவே ‘இன்றைய தண்ணீரின் விலை’ என்று தினமும் விலை வைத்து விற்கிற அளவுக்கு தண்ணீருக்கு கிராக்கி ஏற்படும் என்றும், அதனால் அதை பாதுகாத்தே ஆக வேண்டும் என்றும் எச்சரிக்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். ஆனால் ஆளும் அரசியல்வாதிகளோ அதைப்பற்றிய கவலை துளியும் இல்லாமல் கமிஷனுக்காக புரோக்கராக செயல்பட்டு அதை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வியாபாரப் பொருளாக்கி விட்டார்கள்.

ஒரு கதாநாயகியின் பார்வையில் தண்ணீரின் அவசியத்தைப் பேசுகிற படமென்பதால் வயதானாலும் இந்திரா என்ற கேரக்டரில் சிறப்பான நடிப்பால் நம்மை கவர்கிறார் நடிகை ஜெயப்பிரதா. எளிய மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக பொதுநலத்தோடு ஒவ்வொரு முறையும் அரசாங்க துறைகளுக்கு ஏறி இறங்கும் போது, ஏழை மக்களுக்கு மருத்துவம் பார்க்காமல் அலட்சியம் செய்யும் அரசு டாக்டரை கன்னத்தில் அறைகிற போது கொப்பளிக்கிற கோபமும் ‘வாவ்’ சொல்ல வைக்கின்றன.

நாசர், ரேவதி, அனுஹாசன், பார்த்திபன், தலைவாசல் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரேகா என தமிழ்சினிமாவின் முக்கியமான சீனியர் நடிகர், நடிகைகள் ஒவ்வொருவரும் தங்களின் தனித்தன்மையான நடிப்பால் படத்தின் விறுவிறுப்புக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

குறிப்பாக ஊர் எம்.எல்.ஏவாக வரும் பார்த்திபன் தனக்கே உரிய நக்கல்,நையாண்டியுடன் கூடிய வசனங்களாலும், குடிசை வீட்டில் வசிக்கும் ஏழைப் பெண்ணாக வரும் அனுஹாசனும் தங்கள் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

கேரளாவில் நடக்கும் காட்சிகளில் வருகிற அத்தனை பேரும் மலையாளம் பேசுகிற போது இது தமிழ்ப்படமா அல்லது மலையாளப் படமா? அல்லது மலையாளப் படத்தின் தமிழ் டப்பிங்க்கா? என்கிற சந்தேகம் வருகிறது. அதோடு கீழே போடப்படும் தமிழ் சப்டைட்டிலும் இமைக்கும் நேரத்துக்குள் டக்கென்று மறைந்து விடுவதால் படத்தோடு ஒன்றிப்போய் காட்சிகளை ரசிக்க பெரும் தடையாக இருக்கிறது.

அன்னை தெரசா, காந்தி, கம்யூனிச தத்துவங்கள் என ஏற்கனவே நாம் படித்து, கேட்ட தத்துவங்கள் ஆங்காங்கே இருந்தாலும்

”இந்த மரத்துல இந்த பறவை தான் உட்காரணும்னு எந்த மரமும் சொல்லல. இந்த மண்ணுல இவன் தான் வாழனும்னு எந்த மண்ணும் சொல்லல. யாரும் எங்க வேணும்னாலும் வாழலாம்.”

”தண்ணீர் இயற்கை கொடுப்பது. வறட்சி மனிதன் உருவாக்கியது”

”எந்த ஒரு உயிரினமுன் தன்னோட இனத்துக்கு துரோகம் செய்றதில்ல. மனுஷன தவிர..”

‘நீங்க போடுற சட்டைக்கு கஞ்சி காய்ச்சிறதுக்குக் கூட இங்க தண்ணி இல்ல’ என படத்தில் அங்கங்கே வரும் சில வசனங்கள் செம ஷார்ப்!

பச்சைப் பசேல் என்றிருக்கும் வயல் வெளிகள், தண்ணீர் குளங்கள் என ஒரு டோனிலும் கருவேலங்காடுகள், அதில் சிறியதாகத் தெரியும் ஊற்று என வறட்சியான ஏரியாவைக் காட்டும் இன்னொரு டோனுமாக வித்தியாசமான ஒளிப்பதிவில் கன கச்சிதம் காட்டியிருக்கிறார் நெளஷாத் ஷெரிப்.

எம்.ஜெயச்சந்திரனின் இசையில் அய்யாசாமி டைட்டில் பாடல் மலையாள வாசனையில் ஒலித்தாலும் கேட்பதற்கு இதம். சாம்.சி.எஸ்சின் பின்னணி இசை பலம்.

இடைவேளைக்கு முந்தைய காட்சிகள் விறுவிறுவென்று நகர்ந்து விட்டாலும், இடைவேளக்குப் பிறகான காட்சிகளில் ஸ்லோவாகச் செல்லும் சில காட்சிகளில் தயவு தாட்சயம் பார்க்காமல் கத்தரி போட்டிருக்கலாம் எடிட்டர் ராஜாமுகமது.

மூன்று பத்திரிகையாளர்களின் பார்வையில் ஜெயப்பிரதாவின் தண்ணீர் போராட்டமாக நகர்கிறது திரைக்கதை. தண்ணீர் பிரச்சனையைப் பற்றி பிரதானமாகப் பேச வேண்டுமென்று நினைத்த இயக்குநர் எம்.ஏ. நிஷாத் அதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதும், அரசு ஊழியரை பாலியல் சர்ச்சையில் சிக்க வைப்பதும், கதாநாயகி போல தோற்றமளிக்கு பார்வதி நம்பியாரிடம் போலீஸ்காரர் ஒருவர் அத்துமீறுவதுமான திரைக்கதையோடு ஒட்டாத காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

அதே போல மொத்த ஊரும் தண்ணீருக்காக பல கிலோ மீட்டர்கள் நடையாய் நடக்க, அதே ஊரில் இருக்கும் நாயரின் டீக்கடையில் மட்டும் எப்படி வியாபாரம் அமோகமாகப் போகிறது? என்பது உட்பட இன்னும் சில லாஜிக் மீறல்களை கவனித்து கட் பண்ணியிருக்கலாம்.

‘தண்ணீர் தண்ணீர்’ வரிசையில் இல்லையென்றாலும், சரியான கால கட்டத்தில் தண்ணீர் அரசியலைப் பற்றிப் பேசியிருக்கிறது இந்தக் ‘கேணி.’

Leave A Reply

Your email address will not be published.