Banner After Header

கொடிவீரன் – விமர்சனம்

0

RATING : 2.5/5

நட்சத்திரங்கள் – சசிகுமார், மகிமா நம்பியார், சனுஷா, பசுபதி, பூர்ணா, விதார்த், பால சரவணன் மற்றும் பலர்

இசை – என்.ஆர். ரகுநந்தன்

ஒளிப்பதிவு – எஸ்.ஆர். கதிர்

இயக்கம் – முத்தையா

வகை – ஆக்‌ஷன், டிராமா

சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U/A’

கால அளவு – 2 மணி நேரம் 35 நிமிடங்கள்

ம்மா – மகன், மாமன் – மருமகன், பேரன் – பாட்டி என ஒவ்வொரு படத்திலும் குடும்ப உறவுகளைப் பற்றி டீப்பாகச் சொல்லும் இயக்குனர் முத்தையா மூன்று வெவ்வேறு குடும்பத்தில் உள்ள அண்ணன் – தங்கை இடையேயான பாசத்தை தனக்கே உரிய வழக்கமான வெட்டு, குத்து, அருவா, கத்தி, என ரத்தம் சொட்டச் சொட்ட திரையை நனைய  விட்டிருக்கும் படம் தான் இந்த ‘கொடி வீரன்’.

ஊரே வணங்கும் கோவில் சாமியாடியான ஹீரோ சசிகுமார் சிறு வயதிலேயே அம்மாவை இழந்தவர் நல்லவர். தனது தங்கை சனுஷாவை பாசத்தோடு வளர்த்து வருகிறார்.

அதே ஊரில் பட்டாசு தொழி உள்ளிட்ட பல சட்டத்துக்குப் புறம்பான தொழில்களைச் செய்து வரும் தனது தங்கை பூர்ணாவின் கணவர் இந்தர்குமாருக்காக கொலை செய்யக் கூட தயங்காத வில்லன் பசுபதி ரொம்பக் கெட்டவர். அவரைப் போலவே அவரது தங்கையின் மாப்பிள்ளையை எப்படியாவது ஜெயிலுக்கு அனுப்பி விடத் துடிக்கிறார் நேர்மையான ஆர்.டி.ஓ அதிகாரியான விதார்த்.

எப்படியாவது இந்தர்குமாரை ஜெயிலுக்கு அனுப்பி விட வேண்டுமென்று அவருக்கு எதிரான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் திரட்டும் விதார்த்தை கொலை செய்ய முடிவு செய்கிறார்கள் மாமனும், மச்சானும்!

இன்னொரு புறம் விதார்த்தின் தங்கச்சி மகிமாவை காதலிக்கிறார் ஹீரோ சசிகுமார். என் அண்ணன் விதார்த்தை நீ திருமணம் செய்து கொண்டால் நானும் உன் அண்ணனை திருமணம் செய்கிறேன் என்று சசிகுமாரின் தங்கச்சியான சனுஷாவிடம் சொல்கிறார் மகிமா. அண்ணனுக்காக மகிமாவின் வேண்டுகோளுக்கு சம்மதம் சொல்லும் சனுஷா விதார்த்தை திருமணம் செய்கிறார்.

கொலை வெறியோடு காத்திருக்கும் பசுபதியும், அவரது மாப்பிள்ளை இந்தர்குமாரும் விதார்த்தை கொலை செய்ய முயற்சிக்கும் திட்டங்களை சசிகுமார் எப்படி முறியடிக்கிறார்? அவர்கள் இருவரிடமிருந்து தன்  தங்கையின் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுகிறார்? என்பதே கிளைமாக்ஸ்.

முத்தையா இயக்கத்தில் யார் நடித்தாலும் வெட்டு, குத்து ரத்தம் இல்லாமல் இருக்காது. இதில் ஹீரோ சசிகுமார் வேறு? கொலைவெறிக் காட்சிகளுக்கு கேட்கவா வேண்டும்?

படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு நிறை மாதக் கர்ப்பிணிப் பெண்ணை மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்வது போன்ற காட்சியை வைத்து தனது ரத்த வெறியை ஆரம்பித்து வைக்கிறார். கிளைமாக்ஸ் வரை யாராவது ஒருவரை மாறி மாறி போட்டுத் தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள் ஹீரோவும், வில்லன்களும்! படம் பார்க்கும் நமக்கு ஈரக்குலையே நடுங்குகிறது.

ஆக்‌ஷன் காட்சிகளில் தனக்கே உரிய கம்பீரத்துடனும், காதல் காட்சிகளில் வெட்கப்பட்டும், தங்கையுடனான பாசக்காட்சிகளில் செண்டிமெண்ட் என முடிந்தவரை கலக்கலாக நடித்திருக்கிறார். பேசும் பஞ்ச் வசனங்களில் அநியாயத்துக்கு செயற்கைத்தனம் எட்டிப் பார்க்கிறது. எல்லாம் சரி, வாழ்வியலைச் சொல்கிறேன் என்ற பெயரில் தொடர்ந்து சாதிப்பெருமைகளை மட்டுமே பேசுகிற முத்தையா போன்ற இயக்குனர்களை ஓரங்கட்டி விட்டு இனிமேலாவது வித்தியாசமான கதைகளில் நடிப்பதில் கவனம் செலுத்துங்கள் சசிகுமார்!

சனுஷாவுக்கும், சசிகுமாருக்கும் அண்ணன் – தங்கச்சி கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது. அதே அளவுக்கு சசிகுமார் – மகிமா நம்பியார் காதல் கெமிஸ்ட்ரி திரையில் ஒர்க்-அவுட் ஆகவில்லை. இருவரும் காதலிக்கும் காட்சிகளைப் பார்க்கும் போது வயசு வித்தியாசம் அளவைத் தாண்டி துறுத்துக் கொண்டு நிற்கிறது.

இந்தப் படத்துக்காக நிஜமாகவே மொட்டை அடித்திருக்கிறாராம் பசுபதியின் தங்கச்சியாக வரும் பூர்ணா. ஆட்டை பலி கொடுக்கச் சொல்லும் காட்சியிலிருந்தே கண்களாலேயே பேசும் அவருடைய நடிப்பில் துடிப்பு குறையாமல் பார்த்துக் கொள்வது ஆறுதல்.

படத்தில் பஞ்ச் வசனங்களுக்கு பஞ்சமே இல்லை.

“அவன் கொடி வீரன் இல்ல, குலத்துக்கே வீரன்”,

“எங்க அண்ணன் ஆடிப் பாத்திருக்கு, அடிச்சுப் பார்த்ததில்லையே”,

“தப்புப் பண்ணினா கண்ணன் வருவானோ இல்லையோ, எங்க அண்ணன் வரும்”,

“எங்க அண்ணன் எவன் எதுக்கயும் வர்றவன் இல்ல, எவனையும் எதிர்க்க வர்றவன்”

“நீங்க நினைச்சவுடனே செய்ய அவன் ஆயிரத்தில ஒருத்தன் இல்ல, ஆயிரம் பேரு சேர்ந்த ஒருத்தன்”

”நாம நெனைச்ச விஷயன் நடக்குதோ இல்லையோ? ஆனா நெனைக்கும் போதாவது நடக்கணும்ல.”

”என்ன மாப்ள நம் இனத்தோட அடையாளமா? இல்ல மாமா உங்க குணத்தோட அடையாளம்.”

”அண்ணே நம்ம தங்கச்சியோ வாயாடி மாப்பிள்ளையோ வாதாடி, நீயோ சாமியாடி. இனிமே நம்ம வீட்ல சவுண்ட் ஓவரா இருக்கும் போல.”

என ஹீரோ சசிகுமார் முதல் காமெடியன் பால சரவணன் வரை படத்தில் கண்ணில் படுகிறவர்களெல்லாம் ‘பஞ்ச்’ பேசுகிறார்கள்.

பெரிதான கேரக்டர் இல்லை என்றாலும் கொடுத்த கேரக்டரில் நிறைவாக நடித்திருக்கிறார் விதார்த். வில்லனாக வரும் பசுபதியும், அவரது மாப்பிள்ளையாக வரும் தயாரிப்பாளர் இந்தர்குமாரும் எப்போதுமே முறைத்துக் கொண்டிருக்கிறார்கள். செண்டிமெண்ட் காட்சிகளிலும் நடிப்பில் முதிர்ச்சியை காட்டியிருக்கிறார் பசுபதி.

ரகுநந்தனின் பின்னணி இசை ஆக்‌ஷன் படத்துக்கே உரிய மிரட்டலில் தியேட்டரே அதிர்கிறது. பாடல்கள் ஏற்கனவே அவர் இசையிலேயே வெளிவந்த பாடல்களை கேட்ட ரகம் தான்.

கோவில் திருவிழா, மீன் பிடித் திருவிழா, தெறிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள் என எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு கன கச்சிதம்.

இன்னும் எத்தனை படங்களில் தான் இயக்குனர் முத்தையா தன் சாதிப்பெருமைகளையே திரும்பத் திரும்பக் காட்டி ரசிகர்களை கடுப்பேற்றப் போகிறாரோ என்று தெரியவில்லை. அந்த வகையில் தான் சார்ந்த சாதியின் பெருமைகள், குடும்ப உறவுகள், திரையைக் கிழிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் என இதுவும் வழக்கமான முத்தையா படம் தான்!

Leave A Reply

Your email address will not be published.