நல்லா ஓடுற படத்தை தூக்குறீங்களே… இது நியாயமா? : நன்றி விழாவில் குமுறிய விதார்த்

0

vidharth1

ம்மை நம்பி படம் பார்க்க வருகிற ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான ரசிப்பனுபவத்தை தர வேண்டும் என்று நினைக்கும் ஒரு சில ஹீரோக்களில் விதார்த்தும் ஒருவர்.

பணத்துக்காக வருகிற வாய்ப்புகளை அள்ளிப் போடாமல் நல்ல கதையம்சமுள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கும் அப்படிப்பட்டவரின் படங்களுக்கு தியேட்டர் அதிபர்கள் செய்யும் அநியாயம் எந்த விதத்தில் சரியானது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

‘குற்றமே தண்டனை’ படத்தை சொந்தமாக எடுத்து அதனால் கடனாளியாக கஷ்டப்பட்ட அனுபவங்கள் ஒருபுறமிருக்க, அடுத்தடுத்து தான் நடிக்கும் நல்ல நல்ல படங்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் சரியான அங்கீகாரம் கொடுக்காதது அவருக்கு பெரும் வருத்தத்தை கொடுத்திருக்கிறது.

சென்ற வாரம் விதார்த் நடிப்பில் ரிலீசான ’குரங்கு பொம்மை’ படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அப்படிப்பட்ட நல்ல படத்தின் வசூலை கெடுக்கும் வகையில் தியேட்டர் அதிபர்களே நடந்து கொள்வது நியாயம் தானா? என்று குமுறினார் விதார்த்.

இதுகுறித்து அப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய விதார்த்… ”குரங்கு பொம்மை படம் நல்லா போயிட்டு இருக்கு. ஆரம்பத்தில் இந்தப்படம் பற்றிய செய்திகள் வெளியே பரவி ரசிகர்கள் தியேட்டருக்குள் வர சில நாட்கள் ஆகிவிட்டது. படம் பிக்கப் ஆகி ஓட ஆரம்பித்த நேரத்தில், திடீர்னு சில தியேட்டர்களில் படத்தை தூக்கிட்டாங்க. ஏன்னு கேட்டா? இந்த வாரம் வரப்போற புதுப்படங்களுக்காகதான் இந்த முடிவுன்னு சொல்றாங்க.

புதுப் படங்கள் வரணும் தான். அதற்காக நல்லா ஓடிக்கிட்டிருக்கிற ஒரு படத்தை தியேட்டர்கள்ல இருந்து தூக்குறது எந்த வகையில் நியாயம்? இதை யார்தான் தட்டிக் கேட்கிறது.” என்றார்.

பின்னர் அதே மேடையில் பேசிய இயக்குநர் பாரதிராஜா ‘ரசிகர்களால் பாராட்டப்பட்டதோடு அவர்களின் ஆதரவினால் அரங்கு நிறைந்த காட்சிகளாக இந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் புதிய படங்கள் வருவதால் குரங்கு பொம்மை படத்தை சில தியேட்டர்களில் இருந்து தூக்கி விட்டார்கள் என்றும், சில தியேட்டர்களில் காட்சிகளைக் குறைத்து விட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.

ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிற ஒரு படத்தை நிறுத்துவது, தூக்குவது அநாகரீகமான செயல். இது போன்ற விஷயங்களில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கவனம் செலுத்த வேண்டும்.’ என்றார்.

எல்லோரும் மாறுகிறார்கள்… சம்பாதிப்பதற்காக பெரிய ஹீரோக்களின் பின்னால் ஓடும் அல்ப புத்தி மட்டும் தியேட்டர் அதிபர்களிடம் மாறவே இல்லை.

Leave A Reply