Banner After Header

எல் கே ஜி – விமர்சனம்

RATING – 3/5

வார்டு கவுன்சிலராக இருக்கும் ஒருவர், மெல்ல மெல்ல காய்களை நகர்த்தி எப்படி குறுக்கு வழியில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் சீட்டில் உட்காருகிறார்? என்பதே இந்த ‘எல்.கே.ஜி’.

பல படங்களில் காமெடியனாக வந்த ஆர்ஜே. பாலாஜி முதல் முறையாக ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார். தான் எதைச் செய்தால் மக்கள் ரசிப்பார்களோ? அதை தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

எல்லாக் காட்சியிலும் ஆர்.ஜே.பாலாஜியே வருவதால் அவருடைய அப்பாவாக வரும் நாஞ்சில் சம்பத், நாயகியாக வரும் ப்ரியா ஆனந்த், மயில்சாமி ஆகியோரை தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் கொஞ்சம் இறங்கி ஆடுகிறார் ஜே.கே. ரித்தீஸ். படத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் அரசியல் வில்லன் அவர் தான். ஆனாலும் அவரை சீரியசாக காட்டாமல் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் ரேஞ்சில் காமெடி பீஸ் ஆக்கியிருக்கிறார்கள். அவருடைய எண்ட்ரி காட்சியில் ராமராஜனை கலாய்த்திருக்கிறார்கள். அதிலும் அந்த ‘பேச்சி பேச்சி’ பாடலில் ஜே.கே.ரித்தீஸின் சட்டை கலர் கலராக மாறுவது காமெடியின் உச்சம்.

Related Posts
1 of 51

ஓட்டு போடும் மக்களையும் மீறி அரசியல், ஆட்சி அதிகாரத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி தீர்மானிக்கின்றன? பிரதமர், முதல்வர், எம்.பி போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களை விட அவர்களுக்கு கீழ் வார்டு கவுன்சிலர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் எப்படி மக்கள் பணத்தை சுரண்டி கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்? இன்றைய அரசியலில் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் எந்தளவுக்கு இருக்கிறது? போன்ற பல விஷயங்களை பட்டவர்த்தனமாக காட்டியிருப்பதை கைதட்டிப் பாராட்டலாம்.

வட இந்திய அரசியல்வாதிகளையும், மத்தியில் ஆள்பவர்கள் மீதும் எந்த விமர்சனமும் வைக்காமல், இப்போதிருக்கும் அதே சமயத்தில் தமிழக அரசியல் தான் கெட்டுப்போய் விட்டது, தமிழக அரசியல்வாதிகள் தான் ஊழல் செய்பவர்கள் போலவும் கட்டம் கட்டி காட்டியிருப்பதை ஏற்க முடியவில்லை.

மக்கள் எதை பேச வேண்டும், எதை சிந்திக்க வேண்டும், எதை கேட்க வேண்டும், எதை விவாதிக்க வேண்டும் என்று ஊடகங்கள் தான் தீர்மானிக்கின்றன. அவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று ஊடகங்களின் நேர்மையையும் கேள்விக்குள்ளாகியிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.
படத்தில் நானும் தமிழன் தான் என்று சொல்லிக்கொண்டே, ஊழல் செய்யும் கட்சிக்கும் ‘தாய் தமிழ் முன்னேற்ற கழகம்’ என்று பெயர் வைத்திருப்பதும், தமிழ், தமிழன் என்று பேசுபவர்களின் இன உணர்வை கலாய்ப்பதும், ”கிரிக்கெட்டை நிறுத்தினா காவேரி தண்ணீர் கிடைச்சுடுமா?” என்று மண்ணுக்காக போராடுபவர்களை கேலி செய்வதுமான இரட்டை நாக்கின் எரிச்சல் ஏன் பாலாஜி?

லியோன் ஜேம்ஸின் இசையில் ‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்’ ரீ-மிக்ஸ் பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்.

இன்றைய அரசியல் சூழலை கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி என்று சமூக வலைத்தளங்களில் குவிந்து கிடக்கும் மீம்ஸ்களை ஒன்றாகக் கோர்த்து ஒரு படமாகப் பார்த்த உணர்வைத் தருகிறது. அதற்காக ‘அமைதிப்படை’, ‘மக்களாட்சி’, ‘ஜோக்கர்’ போன்ற சீரியசான பொலிட்டிக்கல் சட்டையர் ரேஞ்சில் இந்தப்படத்தை நினைத்து விட வேண்டாம்.

இது ஒரு மேம்போக்கான நுனிப்புல்லை மேய்வது போன்ற அரசியல் காமெடிப்படம்!