மாயவன் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

RATING – 3.2/5

நட்சத்திரங்கள் – சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி மற்றும் பலர்

இசை – ஜிப்ரான்

ஒளிப்பதிவு – கோபி அமர்நாத்

இயக்கம் – சி.வி.குமார்

வகை – அறிவியல் – த்ரில்லர்

சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U/A’

கால அளவு – 2 மணி நேரம் 9 நிமிடங்கள்

கோடிகளை வைத்திருக்கும் அத்தனை பெரிய மனிதர்களுக்குள்ளும் பல்லாயிரம் ஆண்டுகள் உயிர்வாழும் ஆசை இருக்கத்தான் செய்கிறது.

அப்படிப்பட்ட வாழ்க்கைக்காக கூடு விட்டு கூடு பாயும் வித்தையை சயின்ஸ் டெக்னாலஜியின் கலவையாக வந்திருப்பது தான் இந்த ”மாயவன்.”

போலீஸ் அதிகாரியான சந்தீப் கிஷன் திருடன் ஒருவனைத் துரத்துகிற போது கொலை ஒன்றைப் பார்க்கிறார். உடனே திருடனை விட்டுவிட்டு கொலையாளியை துரத்துகிறார். அந்த துரத்தலில் ஏற்படும் மோதலில் உயிர் தப்பித்து மருத்துவனையில் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்.

ஓய்வுக்குப் பிறகு மீண்டும் போலீஸ் வேலையில் சேர வரும் போது மனநிலை சரியில்லை, இப்போது வேலையில் சேர வேண்டாம் என்று அட்வைஸ் செய்கிறார் மனநல மருத்துவரான நாயகி லாவண்யா திரிபாதி. அவரது பேச்சை மீறி போலீஸ் வேலையில் சேர, மறுபடியும் ஒரு கொலை நடக்க, மன அழுத்தத்துக்குள்ளாகிறார்.

Related Posts
1 of 3

அடுத்தடுத்த கொலைகளும் அதே ஸ்டைலில் நடக்க, துப்பு துலக்குவதில் மண்டையைக் குழப்பும் அந்தக் கொடூரக் கொலைகளைச் செய்வது யார்? எதற்காகச் செய்கிறார்கள்? என்பதை ஒரு வீட்டுக் கிணற்றுக்குள் ஒளித்து வைத்து கொலைகளுக்காக காரண முடிச்சுகளை அவிழ்ப்பது தான் கிளைமாக்ஸ்.

மிடுக்கான யூத் போலீஸ் ஆபீசராக வருகிறார் ஹீரோ சந்தீப் கிஷன். ஹீரோயின் லாவண்யா சொல்லும் ஒரு வார்த்தைக்கு கோபத்தைக் காட்டுபவர் விசாரணைக்காக போகிற இடங்களில் எல்லாம் கெஞ்சுவதும், போலீஸ் என்கிற பயமே இல்லாமல் அவர்கள் மெத்தனம் காட்டுவது மட்டுமே நெருடல். அதைத்தாண்டி முடிந்தவரை போலீஸ் பவரை திரையில் காட்ட முயற்சித்திருப்பதற்கு பாராட்டலாம்.

ஹீரோவுடன் ரொமான்ஸ், டூயட் என ஹீரோயின்களுக்கான ரெகுலர் வேலைகள் எதுவுமே ஹீரோயின் லாவண்யாவுக்கு இல்லை. மனநல மருத்துவராக வருகிறார். அந்த கேரக்டருக்கு என்ன தேவையோ அதை அழகான முக பாவங்களோடு வெளிப்படுத்தியிருக்கிறார்.

இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்புகள் எடுப்பவராக ‘ஸ்மார்ட் கை’ ஆக வருகிறார் டேனியல் பாலாஜி. கண்டிப்பாக இவர் தான் வில்லனாக இருப்பாரோ என்று ரசிகர்கள் முடிவுக்கு வரும்போதே ஹெஸ்ட் ரோல் அளவுக்குத்தான் காட்சிகளுக்காக சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கிறார் ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப். இருவர் காட்சிகளும் மிரட்டல்.

பகவதி பெருமாள், ஜெயப்பிரகாஷ், மைம் கோபி, பாக்ஸர் தீனா என படத்தில் வருகிற அத்தனை பேரும் கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

படம் பார்க்கும் போது சிந்தனையை எங்கேயும் திசை திருப்ப விடாமல் கவனமாகப் பார்க்க வைக்கிறது நலன் குமாரசாமியின் புத்திசாலித்தனம் நிறைந்த திரைக்கதை.

முழுப்படமும் தண்ணீரைப் போட்டு துடைத்து எடுத்தாற் போல பளிச்சென்றிருக்கிறது கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு. குறிப்பாக கிளைமாக்ஸில் காட்டப்படும் அந்த ஹைடெக் ஆராய்ச்சிக்கூடம் அடடே…அடடே..! கலை இயக்குநருக்கும், சி.ஜி உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் அபாரம்.

பின்னணி இசையில் முன்னணிக்கு வந்து கொண்டே இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்கிறது ஜிப்ரானி அதிரடி இசை.

ஹீரோ – ஹீரோயின் லவ், காமெடி, செண்டிமெண்ட் என வழக்கமான தமிழ்சினிமா கிளிஷேக்களுக்கு குட்பை சொன்னது அபாரம்.

படம் முடிந்த பின்னரும் ”நான் இறக்க விரும்பவில்லை, இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ விரும்புகிறேன், அதற்கான ஆராய்ச்சிகளுக்காக பல நூறு கோடி ரூபாய்களை நான் செலவிடுகிறேன்” என்கிறார் பிரபல ‘பே பால்’ நிறுவனத்தின் தலைவர். அவரைப்போலவே உலக கோடீஸ்வரர்கள் பலருடைய ‘உயிர் வாழும்’ ஆசைகளையும் படத்தின் எண்டு கார்டில் அப்டேட்டாக ஓட விட்டு அதிர விடுகிறார்கள்.

மனிதனின் நினைவுகள், சாகாவரம், மூளை ஆராய்ச்சி என அறிவியலுக்குள் டீப்பாக சென்றதோடு அதை த்ரில்லர் பாணியில் சயின்ஸ் பிக்சன் ஜானராக ஆச்சரியப்படுத்துகிறது ”மாயவன்.”