கேங்க்ஸ்டர் கதை, 80 வயசுப் பாட்டி ஹீரோயினாம்..! – புதுமுக டைரக்டருக்கு வந்த துணிச்சல்

0

பெரிய ஹீரோக்களை போட்டு படமெடுத்தால் மட்டும் படம் ஓடிவிடுகிறதா என்ன? அப்படியெல்லாம் இல்லை. நல்ல கதையோடு புதுமுகங்கள் நடித்த படமாக இருந்தாலும் ரசிகர்களுக்குப் பிடித்து விட்டால் கண்டிப்பாக அந்தப்படம் ஹிட் படம் தான் என்று நம்பிக்கையோடு களமிறங்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ரஜ்னி.

காளிகாம்பாள் பிலிம்ஸ் சார்பில் எம். ஹரீஷ்குமார் தயாரித்திருக்கும் படம் ‘மதம்’. விஜய் ஷங்கர் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்வாதிஷ்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜான் செல்வாசிங், உதய் குமார், எல்ஷடாய் கிரேஸ், கருப்பையா ராதாகிருஷ்ணன், செல்வி, எஸ்.எம்.பிபி. தினகரன், ஜி.எம்.பாட்ஷா, ஜோதி குமார், வித்யா, விபிதா, இசை செல்வி மற்றும் பல புதுமுகங்கள் நடித்திருக்கிறார். கதையின் நாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் பீவி என்ற 80 வயசு பாட்டி ஒருவர் நடித்திருக்கிறார்.

‘மதம்’ என்றதும் இது ஏதோ இரண்டு மதங்களுக்கு இடையேயான பிரச்சனை என்று நினைத்து விட வேண்டாம், இது யானையின் மதம், ஆமாம், மதம் என்பது யானையின் வெறியை குறிப்பது. அதைத்தான் படத்தின் டைட்டிலாக வைத்திருக்கிறேன்.

பணத்திற்காக எதையும் செய்யும் ஒரு கேங்க்ஸ்டரிடம் மாட்டிக் கொள்ளும் குடும்பம், அந்தக் கும்பலின் பிடியிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை  என்று சொல்லும் ரஜ்னி தூத்துக்குடியைச் சேர்ந்த பல திறமைசாலிகளுக்கு முறையான பயிற்சி கொடுத்து படத்தில் நடிக்க வைத்திருப்பதோடு, முழுப்படப்பிடிப்பையும் அங்கேயே இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தாத இடங்களில் நடத்தியிருக்கிறார்.

ஏற்கனவே ரசிகர்களுக்கு தெரிந்த முகங்களாக இருந்தால் அவர்களை திரையில் பார்க்கும் போது அவர்களது கதாபாத்திரம் எந்த மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தும், அவர்களின் ரோல் என்ன என்பது முன்பே தெரிந்து விடும். புதுமுகங்கள் நடிப்பதால் அவர்களது கதாபாத்திரத்தை கணிக்க முடியாது என்பதால் இப்படத்தில் புதுமுகங்களை நடிக்க வைத்திருக்கிறேன். அது தான் இந்தப் படத்தின் பலம். படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

80 வயதுள்ள 20 பாட்டிகளுக்கு ஆடிசன் வைத்து அதில் ஒரே ஒரு பாட்டியை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறேன். படத்தின் கதை அவரைச் சுற்றித்தான் நகரும். அவரும் புதுமுகம் போல இல்லாமல் கேரக்டருக்கு ஏற்ற நடிப்பை அசர வைக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார். ”பாட்டி கொஞ்சம் அழுங்க..” என்று சொன்னால் அடுத்த இரண்டு நொடிகளில் கிளிசரின் போடாமலேயே அழுவார். அந்தளவுக்கு கேரக்டரோடு ஒன்றிப்போய் நடித்து ஆச்சரியப்படுத்தினார். அந்தப் பாட்டியின் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் என்ற ரஜ்னி படத்தில் பாடல்கள், ஸ்டண்ட், காமெடி என எதுவுமே இல்லை என்கிற அதிர்ச்சியான விஷயத்தையும் சொன்னார்.

இதெல்லாம் இருந்தால் தான் நான் படம் பார்க்க வருவேன் என்று எந்த ரசிகரும் சொல்லவில்லை. நாம்தான் அவர்களை கமர்ஷியல் சினிமாவுக்கு பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம். ஈரானியப் படங்களைப் பார்த்து நாம் வியக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு படமாக இந்தப்படம் தமிழில் இருக்கும் என்று சொல்லும் ரஜ்னி தொடர்ந்து புதுமுகங்களை வைத்தே அடுத்தடுத்த படங்களை இயக்கப் போவதாகவும் துணிச்சலோடு சொல்கிறார் ரஜ்னி.

‘மதம்’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Leave A Reply