Banner After Header

மதுரவீரன் – விமர்சனம்

0

RATING – 2.8/5

நடித்தவர்கள் – சண்முகபாண்டியன், மீனாட்சி, சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தி, மைம் கோபி மற்றும் பலர்

இசை – சந்தோஷ் தயாநிதி

ஒளிப்பதிவு & இயக்கம் – பி.ஜி.முத்தையா

வகை – ஆக்‌ஷன், நாடகம்

சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U’

கால அளவு – 2 மணி நேரம் 1 நிமிடம்

‘வீரன்’ என்று படத்தின் டைட்டில் முடிந்தாலே அது ஒரு குறிப்பிட்ட சாதியினரின் பெருமைகளைப் பேசுகிற படமாகத் தான் இருக்கும் என்கிற முடிவுக்கு படம் பார்க்கிற ரசிகர்கள் வந்து விடலாம் போலிருக்கிறது.

அந்த வகையில் கொடி வீரன் படத்தைத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெருமை பேசுகிற படமாகவும், கிளைமாக்சில் சாதிய வேறுபாடு வேண்டாம் என்கிற அறிவுரையையும் ஜல்லிக்கட்டு விளையாட்டின் பின்னணியில் சொல்லியிருக்கும் படம் தான் இந்த ‘மதுரவீரன்’.

மதுரைக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் உயர் சாதி மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏற்படுகிற மோதலில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை விதிக்கிறார் மாவட்ட கலெக்டர்.

அதோடு நின்று போன ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்த வேண்டும், சாதி மோதலால் பிரிந்து நிற்கும் இரு சமுதாய மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று போராடும் உயர்சாதியைச் சேர்ந்த சமுத்திரக்கனியும் கொலை செய்யப்படுகிறார்.

இதன் விளைவாக 20 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடக்காமல் இருக்கிறது. அப்பாவின் அந்த கனவை ஹீரோவும், சமுத்திரக்கனியின் மகனுமான சண்முகப்பாண்டியன் எப்படி நிறைவேற்றுகிறார்? பிரிந்து கிடக்கும் இரு சமுதாய மக்களை எப்படி ஒன்று சேர்க்கிறார்? என்பதே கதை.

நல்ல உசரத்துடன் கூடிய ஆஜானுபாகுவான தோற்றத்தோடு இருந்தாலும், எந்தவித பில்டப்பும் இல்லாமல் எளிமையாக அறிமுகமாகிறார் ஹீரோ சண்முக பாண்டியன். அவருக்கான காட்சிகள் சொற்பம் தான் என்பதால் நடிப்பதற்கான இடமும் குறைவாகவே இருக்கிறது.  சண்டைக்காட்சிகளில்  முழுமையான திறமையை வெளிப்படுத்தி அந்தக் குறையை போக்கியிருக்கிறார். அடுத்தடுத்த படங்களின் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரமெடுத்தால் அடுத்த ராஜ்கிரண் இடம் சண்முக பாண்டியனுக்குத்தான்!

நாயகியாக அறிமுகமாகியிருக்கும் புதுவரவு மீனாட்சி ஹீரோவைக் கட்டிக் கொள்வதற்காக மீன் குழம்பு வைத்துப் பழகுவதும்,  ஊருக்குள் போகும் போதும், வரும் போதும் ஹீரோவை செம கலாய் கலாய்ப்பதுமாக குறும்புத்தனமான நடிப்பில் கிராமத்துப் பெண்களின் தைரியத்தையும், துணிச்சலையும் ஞாபகப்படுத்துகிறார்.

கதையின் நாயகன் என்று பார்த்தால் அது சமுத்திரக்கனி தான். வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு மிடுக்கோடு நடந்து வருகிற போது தெரிகிற கம்பீரம் ஆஸம்..!

சாதியின் பின்னணியில் தயாராகிற படமா? அப்படியானால் அதில் கண்டிப்பாக வேல ராமமூர்த்தி இருப்பார். அந்த வகையில் இதிலும் இருக்கிறார். வழக்கம் போல முக்கால்வாசிப் படத்தில் முறைத்துக் கொண்டே இருக்கிறார் அதே வழக்கமான நடிப்போடு..!

கிராமத்து கதைக்குரிய பின்னணி இசையை அதிரடியாகக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி. சமகால அரசியலைச் சொல்லும் பாடல் வரிகளில் ‘என்ன நடக்குது நாட்டுல’ பாடலை ரசிக்கலாம்.

”ரத்தமும், சதையுமா ஒண்ணா இருந்த நம்மள ஓட்டுக்காக பிரிச்சி வெச்சாங்க. பிரிச்சி வெச்சவங்க எல்லோரும் இப்போ ஒண்ணா பென்ஸ் கார்ல போறாங்க. நாம மட்டும் பிரிஞ்சி நிக்கிறோம்.” போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.

ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் பி.ஜி.முத்தையா. பச்சை பசேலென்ற வயல்வெளிகள், கோவில் திருவிழா, பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு விளையாட்டு என கிராமத்து அடையாளங்களை காட்சிப்படுத்திய விதத்தில் மனநிறைவைத் தந்திருக்கிறார்.

உலகத்தையே தமிழ்நாட்டுப் பக்கம் திருப்பிய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் கதையை நகர்த்தியவர் படம் முழுக்க அதைப்பற்றி மட்டுமே திரும்பத் திரும்ப பேசுவதால் ஒருகட்டத்துக்கு மேல் காட்சிகள் சலிப்பைத் தருகிறது.

இருந்தாலும் மெரினா போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக அடையாளம் காட்டப்பட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியில் சாதிய பாகுபாடு பார்க்கப்படுகிறது என்கிற கசக்கும் உண்மையைச்  சுட்டிக் காட்டியதற்காகவும், இப்படிப்பட்ட சாதிவெறியால் பிரிந்து கிடப்பதாலேயே தமிழ்ச்சமூகம் இன்றைக்கு அடிமைச் சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறது என்கிற கருத்தையும் துணிச்சலாகப் பேசியதற்காகவும் பாராட்டலாம்.

Leave A Reply

Your email address will not be published.